Header Ads



இறைவனிடம் முறையிடுவோம், அவனே அனைத்திற்கும் போதுமானவன்..!


- Mujeeb Ibrahim -

உயிர் எங்கே போகிறது?

நம் நாடு எதிர்கொண்டுள்ள இரண்டாவது கொரோனா நெருக்கடி முன்னையதை விட வீரியமானதாக இருக்கிறது.

தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களும் அதிகரிக்கும் அபாயமும் தெரிகிறது.

மரணங்கள் அதிகரிக்கிற போதுதான் இலங்கை முஸ்லிம்கள் மறந்து போய்க்கிடக்கிற இறந்து போனால் எரித்து விடுவார்களே என்கிற பயமும் அதிகரிக்கிறது.

ஒரு நாடு ஒரு சட்டம் என்கிற கோதாவில் அரசு கொரோனா மரணங்களை கையாள்வதாக சொல்கிறது.

இறந்து போனால் அடக்கம் செய்கிற நடைமுறையினை முஸ்லிம்கள் மாத்திரமல்ல கத்தோலிக்க/ கிறிஸ்தவ சமூகங்களும் பின்பற்றுகிறார்கள்.

அவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கும் போது உங்களுக்கு மட்டுமென்ன வேறான சட்டம் என்பதுதான் அரசின் தர்க்கம்!

நாங்கள் மரணித்த உடலையும் மிக்க கெளரவமாக மதிக்கிறோம். 

நகம் வெட்டுவது முதல், சவரம் செய்வது வரை ஜனாஸாவிற்கான ஒழுங்குகளை செய்து அடுத்த சில நாட்களில் மண்ணோடு மண்ணாக போகும் சடலத்தை உரிய மரியாதையோடு அடக்கம் செய்கிறோம்.

அதுவே எங்களது மார்க்கத்தின் கட்டளை.

சிலவேளைகளில் விமானவிபத்துக்களில் இறந்து போகிறவர்களின் சடலங்கள் என்ன ஆனது என்பது பற்றியோ, தீ விபத்தில் சாம்பலான உடலங்களை பற்றியோ, கடலில் காணாமல் போனவர்கள் பற்றியோ எமக்கு தெரிய வருவதில்லை.

அந்த ஜனாஸாக்களின் அடக்கத்திற்கான கடமைகள் எமது சக்திக்கு அப்பாற்பட்டவை என்பதனால் மறைவான ஜனாஸா தொழுகையோடு எங்கள் கடமை முடிந்துவிடுகிறது.

இலங்கையில் ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடங்கிய நாள் முதல் முஸ்லிம் மக்கள் கனத்த ஆதங்கப்பட்டார்கள்.

அந்த எரிப்பு கதையை தேர்தல் மேடைகளில் தொண்டை கிழிய கத்தி அனுதாப வாக்குகளை பொறுக்கிச்சென்றவர்கள் கூட அரச விசுவாசிகளாக மாறிப்போன இன்றைய பொழுதுகளில்......

இன்றும் இந்த உம்மத்தினர் அவர்களை நோக்கியே ஆதங்கம் எழுப்புவதும், அவர்கள் ஏதாவது செய்து இதையெல்லாம் நிறுத்துவார்கள் என்று நம்பிக்கொண்டிருப்பதும் படு முட்டாள்தனமானது.

உச்ச நீதிமன்றில் இதற்கு எதிராக ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது, நமது பிரார்த்தனைகளின் மூலம் அதற்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தால் சிலவேளை இந்த நிலை மாறலாம்.

அதுதவிர வேறொன்றும் நடைபெறாது என்பதே உறுதி.

ஒரு மனிதன் மரணிக்கிற போது அவனது உயிர் (ரூஹ்) வானத்தை நோக்கி உயர்த்தப்படுகிறது.

அந்த மனிதன் சொர்க்கத்திற்கு உரியவரென்றால் அந்த ஆன்மா இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டு மேலே உயர்த்தப்படுகிறது. அது பறவை வடிவில் பிறகு சொர்க்கத்தில் பறந்து திரிகிறது.

துரதிஷ்டவசமாக அந்த ஆன்மா கெட்டதென்றால் 

உயிர் பூமியை நோக்கி மீண்டும் வீசப்படுகிறது.

இறப்பின் தன்மை எப்படி அமைந்தாலும், இறுதிக்கிரியை எவ்வாறு நடந்தாலும் மேற்சொன்ன செயற்பாட்டில் மாற்றமில்லை.

இதுவே இஸ்லாமியர்களின் நம்பிக்கை.

இறப்பின் கடைசித்துளி வரைக்குந்தானே நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். அதன் பிறகான செயற்பாடுகள் அனைத்துமே சிருஷ்டிகர்த்தாவின் புறத்தில் உள்ளவை.

நமக்கு இறைவன் இட்ட கட்டளைகளும் சுமக்க முடியாதவைகள் அல்ல. சுமக்க முடியாத நிலமைகள் தோன்றும் போது அதனைச்செய்யாது விட்டால் குற்றமும் இல்லை.

ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் மக்கள் மயப்பட்ட எதிர்ப்பு இலங்கையில் பதிவு செய்யப்படவில்லை.

கொரோனா தளர்ந்திருந்த காலங்களிலாவது ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு பேரணிகள் என்று எதுவும் இங்கே பெரிதாக நிகழவில்லை.

யாராவது அரசியல்வாதி செய்வான் என்ற அசட்டு நம்பிக்கையிலேயே காலம் கடந்தது.

இந்த நெருக்கடியும் கடந்து போனால் அனைத்தும் மறந்து போகும்.

நாம் வெறும் உணர்ச்சிகளால் அருட்டப்படும் சமூகமாகவே வாழ்ந்துவருகிறோம்.

இனியும் அரசியல்வாதிகளை விழித்து இது பற்றி ஏதாவது செய்யும் படி பேசவோ எழுதவோ செய்யாதீர்கள், உண்மையில் அருவருப்பாக இருக்கிறது.

இறைவனிடம் முறையிடுவோம் அவனே அனைத்திற்கும் போதுமானவன்.

2 comments:

  1. InshaAllah Allah will give decision on the 20th. We will fast and pray. Allah will curse those who deny our religious right and will punish in front of us.

    ReplyDelete

Powered by Blogger.