October 30, 2020

அல்லாஹு அக்பர் சொல்லி கொல்பவர்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகளா..?


- ஷர்தார் ஜமீல் -

கவனிக்க, இது பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பதிவு அல்ல, பதிவை முழுமையாக வாசித்து, நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கருத்து பரிமாறுங்கள். அல்லது வாசித்து விட்டு கள்ள மௌனத்துடன் கடந்து செல்லுங்கள். இதை நான் இப்பொழுது சொன்னால் தான், நான் சொல்ல வருவது என்னவென்று உங்களுக்கு புரியும் என்பதால் இதை எழுதுகிறேன். 

பிரான்சின் சமகால தாக்குதல்கள் கண்டிக்கத் தக்கவை. கருத்து சுதந்திரம், மத நிந்தனை போன்ற விவாதங்களுக்கு அப்பால் சென்று, இந்த அல்லாஹு அக்பர் "சொல்லப்படும்" கொலைகளை கவனித்து ஒரு ஆய்வுக்கு உட்படுத்தி பாருங்கள். அவை ஒரு முக்கிய தேர்தல் காலகட்டத்தில், அல்லது தேர்தலை எதிர் நோக்கிய கால கட்டத்தில் நடத்தப்படுவதை காண்பீர்கள். கவனிக்க இது அமெரிக்க தேர்தல் காலம். 

இலங்கையில் நடைபெற்ற "ஈஸ்டர்" தாக்குதலும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதை அதன் பின்னர் அரங்கேறிய அரசியல் காட்சி மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து இருந்தீர்களானால் நான் சொல்ல வருவதை புரிந்து கொள்வீர்கள்.

கொலை செய்பவர்கள், அல்லது தற்கொலை செய்து கொள்பவர்கள் தங்களை தீவிர இஸ்லாமியர்கள் என்று நம்பும் தீவிரவாதிகள் தான். ஆனால் அவர்களை மூளைச் சலவை செய்து இயக்கும் மறைகரங்கள் எங்கிருந்தோ செயல்படுகின்றன. அவர்களுக்கு ஒரு உள் நோக்கம் இருக்கிறது. அது நிச்சயமாக சொல்லப்படுவது போல இஸ்லாத்தை வளர்க்க எடுக்கும் நடவடிக்கை அல்ல, என்பதை இஸ்லாத்தை உண்மையாக உணர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். மேம்போக்காக அது இஸ்லாமிய பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டாலும், அது இஸ்லாத்துக்கும் இஸ்லாமியர்க்கும் எந்த வகையிலும் நன்மை பயப்பது அல்ல. 

நீங்கள் ஒரு இந்திப் படத்திலோ அல்லது சிங்கள படத்திலோ ஒரு தமிழ் கதாபாத்திரத்தை பார்த்திருப்பீர்கள். அவர் தமிழராக உயிரை கொடுத்து நடித்திருப்பார், ஆனாலும் தமிழர்களான நம்மால் அவர் தமிழர் அல்ல என்பதை மிக இலகுவாக புரிந்து கொள்ள முடியும். அது போலத்தான் இதுவும், உண்மையான இஸ்லாத்தை அறிந்தவர்களால் இவ்வாரான பயங்கரவாதம் இஸ்லாத்தில் இல்லை என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். தமிழர் அல்லாதவர்கள், அந்த கதாபாத்திரத்தை எப்படி ஒரு தமிழராக பார்க்கிறார்களோ அது போலத்தான் இந்த அரங்கேற்றப்படும் பயங்கரவாதிகளும். 

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இஸ்லாம் இன்று அதி வேகமாக வளர்ந்து வரும் ஒரு மார்க்கமாக பார்க்கப்படுகிறது. அதை தடுத்து நிறுத்துவதற்கு பல்லாயிரம் கோடி நிதி மறைமுகமாகவும், ஏன் பகிரங்கமாகவும் செலவு செய்யப்பட்டுக் கொண்டே வருகிறது. அதை யார் செய்கின்றார்கள் என்பதுவும் உலகறிந்த் உண்மை. 

இஸ்லாமியர்களின் மீது ஒரு ஊடகப் போர் தொடுக்கப்பட்டு அவர்கள் செய்வது அனைத்துமே, பயங்கரவாதமாக சித்தரிக்கப்படும் ஒரு கட்டமைக்கப்பட்ட சூழ்ச்சி அரங்கேறி வருகிறது என்று நான் சொன்னால் அது மிகையில்லை. திரைப்படங்களிலும் விவரணச் சித்திரங்களிலும் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் கேவலப்படுத்த கோடிகள் கொட்டி கொடுக்கப்படுகிறது.

நபிகள் காலத்தில் செய்யப்படாத மத நிந்தனையா? தன் சிறிய தந்தையின் இருதயத்தை வெளியில் எடுத்து புசித்தவரை மன்னிக்க சொல்லிக் கொடுத்த மார்க்கம் இஸ்லாம். 

போர்க் களத்தில் கூட  பெண்களை, மரம் செடி கொடிகளை, பிராணிகளை நிந்தனை செய்யக்கூடாது என்று சொல்லிக்கொடுத்த மார்க்கம் இஸ்லாம். 

ஆனால் இவை எந்த ஊடகங்கள் மூலமாகவாது உங்களை வந்தடைந்ததுவா? என்று தேடிப்பார்த்தால் ஏமாந்துதான் போவீர்கள். இஸ்லாத்தைப் பற்றிய ஒரு முற் கற்பிதம் உங்கள் மீது திணிக்கப்பட்டு, நீங்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் வெறுக்க, இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எப்படி திட்டமிட்டு வெறியூட்டப் படுகிறதோ அது போலவே உங்களுக்கும் வெறியூட்டப்படுகிறது.

இஸ்லாத்தில் இவ்வாரான கொலை வெறி தாக்குதல்களுக்கு ஒரு போதும் இடமில்லை, அப்படி அவை இஸ்லாத்தின் பெயரால் செய்யப்பட்டாலும் அது ஒரு மார்க்க நிந்தனையே ஆகும். 

பயங்கரவாதத்துக்கும், பயங்கரவாதிக்கும் ஒரு போதும் இஸ்லாத்தில் இடமில்லை. அப்படி இருப்பதாக யாராவது சொன்னால் அவன் இஸ்லாமியனும் இல்லை.

மீண்டும் தலைப்பை வாசித்துப் பாருங்கள். புரியாவிட்டால் மீண்டும் ஒரு மூன்றாம் நிலையில் இருந்து பதிவை வாசித்து பாருங்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment