Header Ads



பௌத்த சங்கத்தினரின் அனுமதியின்றி, 20 ஐ நிறைவேற்றினால் அதற்கு பதிலளிக்க தயார்


பௌத்த சங்கத்தினரின் அனுமதியின்றி, அவர்களை புறக்கணித்து விட்டு, 20வது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிறைவேற்ற தயாராகினால், அதற்கு பதிலளிக்க பௌத்த மகா சங்க சபையினர் தயாராக இருப்பதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் துறவிகள் குரல் அமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வராமல் இருப்பது மிகவும் நல்லது என நாங்கள் ஜனாதிபதிக்கு கூறுகிறோம். 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டுமாயின் பௌத்த சங்க சபையினரின் அனுமதியை பெற்றுக்கொள்ளுங்கள். அப்படி செய்யாமல், சில அழுத்தங்கள், நெருக்கங்கள் மற்றும் சண்டித்தனமான செயல்கள் மூலம் 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தால் நாங்கள் எப்போதும் இணங்க போவதில்லை.


20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வாருங்கள், பலவீனங்களை சரி செய்யுங்கள். ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை நீக்குங்கள். பௌத்த சங்க சபையினரை புறந்தள்ளி, அவர்களை தனிமைப்படுத்தி, அவர்களின் ஆலோசனைகளை பெறாது ஏதேனும் ஒன்றை கொண்டு வர தயாரானால், அனைத்துக்கும் பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதை இந்த தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.


முருத்தெட்டுவே ஆனந்த தேரர் என்பவர் நீண்டகாலமாக ராஜபக்சவினரை ஆதரித்து வரும் பௌத்த பிக்கு என்பதுடன் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், இந்த தேரரின் அபயராம விகாரையே மகிந்த ராஜபக்சவின் அரசியல் கேந்திர நிலையமாக செயற்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.