Header Ads



முஸ்லிம்களுக்கு பாடம் புகட்ட, கரிகாலன் விரும்பினான் (கொடூர மனிதாபிமானமற்ற அத்தியாயத்துக்கு 30 ஆண்டுகள் பூர்த்தி)

- DBS ஜெயராஜ் -

1990 ஒக்டோபரில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வட மாகாணத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக அவர்கள் வாழ்ந்த தாயகத்திலிருந்து சில நாட்களிலேயே வெளியேற்றப்பட்ட இலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவுகளில் நடந்த இந்தக் கொடூரமான மனிதாபிமானமற்ற அத்தியாயத்துக்கு இந்த வருடம் 30 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

1990 இல் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்ட நிகழ்வு ஒரு மனிதப் பேரழிவாகும். துப்பாக்கி முனையில் மக்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து பிடுங்குவது, அவர்களின் பணம் மற்றும் நகைகளைப் பறித்த பின்னர் அவர்களை விரட்டியடிப்பது வெறுக்கத்தக்கதும் மன்னிக்க முடியாததுமாகும். இந்தத் துயரத்தை நான் கடந்த காலங்களில் பல முறை எழுதியிருக்கிறேன். இப்பொழுது 30 வருடங்கள் நிறைவடைவதையிட்டு இந்த பாரிய வெளியேற்றத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

இந்தக் கொடூரமான துயரத்தின் கதையை சுருக்கமாகக் குறிப்பிடுவதற்கு இந்தப் பாரிய வெளியேற்றத்தின் நினைவுகளைப் பற்றிய எனது முன்னைய குறிப்புகளில் இருந்து கையாள்கிறேன். துப்பாக்கி ஏந்திய பூனைக் குடும்பத்தின் மொழிச் சகோதரர்களால் தமிழ் பேசும் முஸ்லிம்கள் விரட்டப்பட்ட இந்த மோசமான நிகழ்வுக்கு வழிவகுத்த காரணிகளை இதனூடாக நான் தேட விரும்புகிறேன்.

கறுப்பு ஒக்டோபர்

1990 இன் கறுப்பு ஒக்டோபர் யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் சாவகச்சேரியில் இருந்து ஒக்டோபர் 15 இல் முஸ்லிம்களை விரட்டுவதில் தொடங்கி ஒக்டோபர் 30 இல் யாழ் நகரில் இருந்து விரட்டியடிப்பது வரை தொடர்ந்தது. வடக்கின் நிலப்பரப்பில் இருந்து முஸ்லிம்களை அப்புறப்படுத்துகின்ற பாரிய வெளியேற்றம் யாழ் நகரில் துவங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்பிருந்தே ஆரம்பித்தது. ஒரு சில நாட்களிலேயே தீபகற்பத்தில் இருந்தே முஸ்லிம்களைத் துடைத்தெறிந்து விட்டுத்தான் அது ஓய்ந்தது.

1990 மார்ச்சில் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் ஜூனில் இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே மீண்டும் போர் வெடித்தது. யுத்தம் தொடர்கின்ற வேளையில் கிழக்கில் தமிழ் முஸ்லிம் விரோதப் போக்கு அதிகரித்தது. எல்ரிரிஈயில் இருந்து சில முஸ்லிம் போராளிகள் வெளியேறிச் சென்று அவர்களில் சிலர் எதிர்த்தரப்புக்குச் செல்வது எல்ரிரிஈயின் கிழக்குப் பிராந்திய இராணுவத்தளபதி கருணா, அரசியல்துறைத் தளபதி கரிகாலன் ஆகியோருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. எல்ரிரிஈயில் இணைந்திருந்த பல முஸ்லிம் போராளிகளை அவர்களின் தலைமை தூக்கிலிட்டது. எல்ரிரிஈயை முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு ஆக்கிரமித்தது.

மறுபுறத்தில் அப்போதைய ஐதேக அரசாங்கமும் இந்த உணர்வுகளைத் தூண்டி நிலைமையை மோசமாக்கியது. பல முஸ்லிம் சமூக விரோத சக்திகள் ஊர்காவற்படையில் இணைக்கப்பட்டனர். இந்தப் பிரிவுகள் தமிழ் எதிர்ப்பு வன்முறையை ஊக்குவிப்பதில் பாதுகாப்புத் தரப்புடன் ஒத்துழைத்தன. சில சந்தர்ப்பங்களில் தமிழ் பொதுமக்கள் படுகொலைகளுக்கு முஸ்லிம் ஊர்காவற்படையினர் பொறுப்பாயினர். சில தமிழ்க் கிராமங்களும் குக்கிராமங்களும் முஸ்லிம் ஊர்காவற்படை தலைமையிலான கும்பல்களால் அழிக்கப்பட்டன. அவர்களுக்கு பாதுகாப்புப் படையினர் இரகசியமாக ஆதரவு வழங்கினர்.

இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் எல்ரிரிஈ முஸ்லிம் பொதுமக்கள் மீது கோரமான படுகொலைகளைக் கட்டவிழ்த்து விட்டது. பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது சம்மாந்துறையிலும் காத்தான்குடியிலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், ஏறாவூரின் சதாம் ஹுஸைன் மாதிரிக் கிராமத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளும் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள்.

தமிழ் முஸ்லிம் உராய்வைத் தூண்டுதல்

இந்த நிலைமையின் கொடூரமான அம்சமாக, பாதுகாப்புத் தரப்பினரால் தமிழ் முஸ்லிம் மோதலைத் தூண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட முயற்சிகளைக் குறிப்பிட முடியும். நிழலாக நகர்த்தப்பட்ட “கப்டன் முனாஸ்“ இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

இந்தக் கப்டன் முனாஸின் கட்டளையின் கீழ் இயங்கிய ஒரு யுனிட் 1990 களில் மட்டக்களப்பில் பல காணாமல் போதல்களுக்கும் தூக்கிலிடுதல்களுக்கும் காரணமானதாகக் கூறப்படுகிறது. கப்டன் முனாஸ் என்ற பெயரைக் கேட்டாலே அஞ்சி வெறுக்கும் நிலை உருவாகியது. அவர் ஒரு முஸ்லிம் என்றே கருதப்பட்டு வந்தது. பின்னாட்களில் கப்டன் முனாஸ் என அழைக்கப்படுபவர் உண்மையில் ரிச்சர்ட் டயஸ்  என்ற “உளவுத்துறை” அதிகாரி என்பதை சோஸா ஆணைக்குழு வெளிப்படுத்தியது.

கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுகள் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் வடக்கின் நிலை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இரு சமூகங்களும் அங்கு தொடர்ந்தும் நிம்மதியாக வாழ்ந்து வந்தன. கிழக்கில் பதற்றம் நிலவுகின்ற நிலையில் வடக்கில் முஸ்லிம்கள் அமைதியாக வாழ்வது கிழக்கின் புலிகளுக்கு ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது.

புலிகளின் தலைவரான பிரபாகரன் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வற்புறுத்துவதற்காக விடுதலைப் புலிகளின் அப்போதைய கிழக்கு அரசியல்துறைத் தலைவரான கரிகாலன் தலைமையிலான ஒரு குழு வடக்கே வந்தது. முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என கரிகாலன் விரும்பினார். புலிகளின் தலைமைக்கு இந்த அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் தென்மராட்சிப் பகுதியில் உள்ள சாவகச்சேரியில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

சாவகச்சேரி முஸ்லிம்களில் பெரும்பாலானோர் நகரத்தின் ஒல்லாந்தர் வீதியிலேயே வசித்து வந்தனர். முஸ்லிம்களுக்கிடையிலான வன்முறைச் சம்பவமொன்றை விசாரிக்கச் சென்ற எல்ரிரிஈயினர் இறைச்சிக் கடைக்காரரின் வீடொன்றில் சில வாள்களைக் கண்டுபிடித்தனர். இது ஒரு எச்சரிக்கை மணி என புலிகள் இதற்கு “விளக்கம்” கொடுத்தனர். முஸ்லிம் வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் தேடுதல் நடத்திய எல்ரிரிஈ முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான கடையொன்றிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 வாள்களைக் கண்டெடுத்தனர். ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இதனைப் பார்த்தனர். இந்த விளக்கம் உண்மையானதாகவே இருந்தாலும் எல்ரிரிஈயின் துப்பாக்கிகளுக்கு முன்னால் இந்த 75 வாள்களுக்கும் எந்தப் பெறுமானமும் இல்லை என்பதை எவரும் அறிவர்.

வாள்கள் கண்டுபிடிக்கப்பட்ட கடைக்குச் சொந்தமான முஸ்லி்ம் வர்த்தகரின் லொரிகள் வியாபாரத்துக்காக கொழும்புக்குப் போய் வந்து கொண்டிருந்தன. சித்தப் பிரமைக்குப் பேர் பெற்ற எல்ரிரிஈயின் உளவுத்துறை இதனை ஒரு பெரிய சதியாக சந்தேகித்தது. கொழும்புக்கு அடிக்கடி பயணிக்கும் முஸ்லிம் வர்த்தகர்களை நாசகார வேலைக்காக அல்லது ஒற்றர்களாக பாதுகாப்புப் பிரிவின் உளவுத் துறை பயன்படுத்தலாம் என அவர்கள் கருதினர். ஆகவே முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் நினைத்தனர்.

வெளியேற்ற நடவடிக்கை

குறிப்பாக சாவகச்சேரி ஒல்லாந்தர் வீதியிலுள்ள முஸ்லிம்கள் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதலாவதாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 1000 பேரளவில் துப்பாக்கி முனையில் அன்றைய தினம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். வட மாகாணத்தின் தெற்கேயுள்ள வவுனியா நகரத்துக்கு அப்பால் சென்று விடுமாறு அவர்கள் வேண்டப்பட்டனர். ஒக்டோபர் 188 இல் இவர்கள் வவுனியா வந்தடைந்தனர். சாவகச்சேரி முஸ்லிம்களைத் தொடர்ந்து ஏனைய முஸ்லிம்களும் குறிவைக்கப்பட்டனர்.

ஒக்டோபரில் வடக்கில் இருந்த கரிகாலனின் கீழ் இயங்கிய கிழக்குப் படையொன்று தான் இந்த வெளியேற்றத்துக்கான முடிவுக்குப் பெரிதும் காரணமாக இருந்தது என  புலிகள் பின்னர் விளக்கம் வழங்கினர். அடிப்படையில் இது கிழக்கு முஸ்லிம்களுக்கான ஒரு வித பதிலடி எச்சரிக்கையாகச் சித்திரிக்கப்பட்டது. மேலெழுந்திருந்த அச்சுறுத்தல் உணர்வுகள் இந்த முடிவில் பெரிதும் தாக்கம் செலுத்தியது. அப்பட்டமான இனவெறி மனப்பான்மை முஸ்லிம்களை அந்நியமானவர்களாகவே பார்க்கச் செய்தது. இந்தப் பின்னணியில் தான் அந்தப் பாரிய வெளியேற்றம் நிகழ்ந்தது.

1981 சனத்தொகைக் கணிப்பின்படி மன்னார் மாவட்ட சனத்தொகையில் முஸ்லிம்கள் 26 வீதமாகக் காணப்பட்டனர். தில்லையடி வழியாக பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்படுகின்ற மன்னார் தீவில் அவர்கள் 46 வீதமாக உள்ளனர். மன்னார் தீவின் ஒப்பீட்டளவில் வளமான பிரதான நகராக எருக்கலம்பிட்டி காணப்படுகிறது. 1990 ஒக்டோபர் 21 இல் எருக்கலம்பிட்டியைச் சுற்றி வளைத்த சுமார் 300 புலிகள் முஸ்லிம்களுடைய பணம், நகை, பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர். இதன்போது சுமார் 800 – 850 வீடுகள் குறிவைக்கப்பட்டன.

அக்டோபர் 22 இல், மன்னார் – புத்தளம் மாவட்ட எல்லைக்கு அருகிலுள்ள மரிச்சுக்கட்டி கிராமத்தைச் சேர்ந்த சில முஸ்லிம்கள் இராணுவத்தினருடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி எல்ரிரிஈயால் கைது செய்யப்பட்டனர். ஒக்டோபர் 23 இல் மரிச்சுக்கட்டி வாசிகள் அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஒக்டோபர் 24 இல், மரிச்சுக்கட்டி அமைந்திருந்த முசலி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் வெளியேறுமாறு உத்தவிடப்பட்டது. முசலி அரசாங்க அதிபர் பிரிவு முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசமாகும்.

மன்னாரில் வெளியேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்தன. மன்னார் தீவில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களும் ஒக்டோபர் 28 க்குள் வெளியேற வேண்டும் என்றும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை பூர்த்தி செய்ததாக தமது தலைமை அலுவலகத்துக்கு அறிவிக்க வேண்டியிருக்கிறது என்றும் புலிகள் ஒக்டோபர் 24 இல் அறிவித்தனர். அனாதரவான முஸ்லிம்கள் தமது உடைமைகளைப் பொதி செய்யத் தொடங்கினர். ஒக்டோபர் 26 இல் புலிகள் மீண்டு்ம் “படையெடுத்து” எருக்கலம்பிட்டி முஸ்லிம்களின் பொதி செய்யப்பட்ட அனைத்து உடைமைகளையும் பறித்தெடுத்தனர்.

மன்னாரின் கத்தோலிக்க மதகுருக்கள் உள்ளிட்ட பல தமிழர்கள் வெளியேற்ற உத்தரவு தொடர்பாக மறுபரிசீலனை செய்யுமாறு புலிகளிடம் வேண்டினர். ஆனால் அது பலனளிக்கவில்லை. பின்னர் வெளியேற்றுவதற்கான காலக்கெடு நவம்பர் 02 வரை நீடிக்கப்பட்டது.

ஒக்டோபர் 28 இல் எருக்கலம்பிட்டியையும் மன்னார் தீவிலிருந்த ஏனைய முஸ்லிம் பிரதேசங்களையும் புலிகள் சீல் வைத்தனர். நகரத்திலிருந்த மன்னார் தீவு முஸ்லிம்களும் எருக்கலம்பிட்டி, தாராபுரம், புதுக்குடியிருப்பு, உப்புக்குளம், கோந்தைப்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்களும் கடற்கரையின் தெரிந்தெடுக்கப்பட்ட சில பிரதேசங்களில் ஒன்று கூடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். உணவோ தண்ணீரோ தனிப்பட்ட தேவைகளுக்கான வசதிகளோ இல்லாமலேயே அவர்கள் அங்கு விடப்பட்டனர். மன்னாரில் இருந்து தொடர்பு கொண்ட சில தமிழ் மக்கள் புலிகளுடன் வாதித்து கடற்கரையிலிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு பாணும் தண்ணீரும் விநியோகித்தனர்.

பின்னர் மன்னார் தீவு முஸ்லிம்கள் 60 மைல் தெற்கே கடல் வழியாக வட மேல் மாகாணத்தில் உள்ள கல்பிட்டிக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். மன்னாரிலும் புத்தளத்திலும் முஸ்லிம்கள் தமக்குச் சொந்தமான பல படகுகளில் இவர்களை அழைத்து வந்தனர். இந்த நடவடிக்கைகள் மூன்று நாட்களாகத் தொடர்ந்தன குறைந்தது ஒரு குழந்தையாவது தண்ணீரில் மூழ்கி இறந்தது. கல்பிட்டியை அடையும் போது இன்னும் பல குழந்தைகளும் வயோதிபர்களும் மரணித்திருந்தார்கள்.

மன்னார் தீவு முஸ்லிம்களின் பரிதாப நிலை இவ்வாறிருக்கையில் மன்னார் மாவட்ட நிலப்பரப்பில் வாழ்ந்த முஸ்லிம்களின் நிலையும் இதேயளவு மோசமானதாகவிருந்தது. ஒக்டோபர் 25 இல், முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள முசலி பிரதேச சபை முஸ்லிம்களும் விடத்தல்தீவு, பெரியமடு, சன்னார், முருங்கன், வட்டக்கண்டல், பரப்பங்கண்டல் பிரதேசங்களில் வசிக்கும் முஸ்லிம்களும் தமது வாகனங்கள், சைக்கிள்கள், எரிபொருட்கள் அனைத்தையும் அருகிலுள்ள பள்ளிவாசல்களிலும் பாடசாலைகளிலும் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டனர்.

ஒக்டோபர் 26 இல், மாவட்டத்தை விட்டு எப்படி வெளியேறுவது என்பது தொடர்பில் வழிகாட்டல் வழங்குவதற்காக எல்ரிரிஈயின் பிராந்திய அலுவலகத்துக்கு வருமாறு அவர்கள் உத்தரவிடப்பட்டனர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து பயணப் பொதிகளில் உடைமைகளும் காசாக 2000 ரூபாவும் ஒரு பவுண் தங்க நகையும் மட்டுமே எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. மடு, பண்டிவிரிச்சான், வவுனியா நகரங்களுக்கு அருகில் உள்ள மூன்று இடங்களில் அவர்கள் சோதனையிடப்பட்டனர். மடுவிலும் பண்டிவிரிச்சானிலும் தங்களுக்கு “அனுமதிக்கப்பட்டதை” விட அதிகமாகக் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றுக்கான “பற்றுச் சீட்டுகள்” வழங்கப்பட்டன. ஆனால் வவுனியாவில் சுடுநீர் குடுவைகள் கூட வேண்டுமென்றே கொள்ளையடிக்கப்பட்டன. முஸ்லிம்களின் இந்தக் குழுவினர் வவுனியாவில் கால் நடையாகவே வந்தனர்.

வெளியேற்றம் வடக்கு வன்னி நிலப்பரப்பின் ஏனைய பகுதிகளிலும் நடந்தது. ஒக்டோபர் 22 காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் நீராவிப்பிட்டியில் ஒரு சில முஸ்லிம்கள் இராணுவத்தினருக்கு தகவல் வழங்குகிறார்கள் என்ற “சந்தேகத்தின் பேரில்” கைது செய்யப்பட்டனர். அதே தினம் மாலையாகும் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒருவார காலத்துக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டனர். அடுத்த நாள் 23 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களும் மூன்று நாட்களுக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டனர். 1981 கணக்கெடுப்பின்படி முல்லைத்தீவில் முஸ்லிம்கள் 4.6 வீதமும் கிளிநொச்சியில் 1.6 வீதமும் காணப்பட்டனர்.

1981 கணக்கெடுப்பில் வவுனியா மாவட்டத்தில் 6.9 வீதம் முஸ்லிம்கள் காணப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரச கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பாதுகாப்பாக இருந்தனர். ஆனாலும் வவுனியா மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களும் நவம்பர் 01 ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற உத்தரவிடப்பட்டது.

எல்ரிரிஈயின் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கான இறுதி நாள்

வன்னியில் வெளியேற்றம் நடந்து கொண்டிருந்த போதும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தடையின்றி அங்கு வசித்து வந்தனர். 1981 கணக்கெடுப்பின்படி யாழ் மாவட்ட முஸ்லிம்களின் சனத்தொகை 1.6 வீதமாக இருந்தது. சாவகச்சேரியில் இவர்களின் ஒரு பகுதி துரத்தப்பட்டிருந்தது. ஆனால் யாழ் நகரப் பகுதி முஸ்லிம்கள் தமக்கு எந்த ஆபத்தும் இருப்பதாக உணரவில்லை. இவை வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மக்களுக்கு நடக்கும் விடயங்களாகவே அவர்கள் நினைத்தார்கள். அவர்களின் இந்த மனநிறைவு வெகு விரைவிலேயே சிதறடிக்கப்பட்டது. புலிகள் “கடைசியாக” யாழ்ப்பாண முஸ்லிம்களை நோக்கி வந்தார்கள். அவர்களுக்கான இறுதி நாளாக எல்ரிரிஈ ஒக்டோபர் 30 ஆம் திகதியை நிர்ணயித்தது.

காலை 10.00 மணியளவில் ஒலிபெருக்கிகள் பூட்டிய எல்ரிரிஈ வாகனங்கள் யாழ்ப்பாண முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளின் சாலைகளிலும் ஒழுங்குகளிலும் நடமாடத் தொடங்கின. யாழ் நகர சபைப் பகுதியில் சோனகர் தெரு், ஓட்டுமடம், பொம்மைவெளி ஆகிய ஓரிரண்டு தெருக்களில் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்தனர். ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி உஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்தில் நண்பகல் 12.00 மணிக்குள் வந்து கூட வேண்டும் என பலதடவைகள் கடுமையான அறிவித்தல் விடப்பட்டது. ஆயுதமேந்திய புலிகள் தெருக்களில் ரோந்து செல்லத் தொடங்கினர். சிலர் அடர்த்தியான மக்கள் கூட்டம் உள்ள பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்று அறிவித்தனர்.

மக்கள் தமது வேலை வெட்டிகளையெல்லாம் விட்டு விட்டு மைதானத்துக்கு விரைந்தனர். பகல் 12.30 மணிக்கு ஒரு சிரேஷ்ட புலித் தலைவரான ஆஞ்சநேயர் உரையாற்றினார். பின்னர் இளம்பரிதி என அழைக்கப்பட்ட இவர் சுருக்கமானதொரு செய்தியைச் சொன்னார். பாதுகாப்புக் காரணங்களுக்காக அனைத்து முஸ்லிம்களும் இரண்டு மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று எல்ரிரிஈ உயர்பீடம் முடிவு செய்திருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறினால் தண்டிக்கப்படுவர் என அறிவித்தார். வேறு விளக்கங்கள் எதுவும் இல்லை.

மக்கள் அவரைக் கேள்வி கேட்கத் துவங்கியபோது இளம்பரிதி தனது கட்டுப்பாட்டை இழந்தார். முஸ்லிம்கள் வெறுமனே உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும், அல்லது விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என முழங்கினார். பின்னர் அவர் தனது துப்பாக்கியால் மேலே சுட்டார். அவரது மெய்க்காப்பாளர்களும் இதனைத் தொடர்ந்தனர். செய்தி தெளிவானது. இராணுவம் யாழ்ப்பாணம் மீது படையெடுக்கப் போகிறார்கள் என்றும் அதனால் புலிகள் மக்கள் அனைவரையும் வெளியேறச் சொல்கிறார்கள் என்றும் மக்கள் நினைத்தனர். முஸ்லிம்களை மட்டுமே வௌியேறச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை முஸ்லிம்கள் பின்னரே உணர்ந்தார்கள்.

ஆயுதமேந்திய புலிகள் மேலும் மேலும் இந்தப் பகுதிக்கு வரத் தொடங்கியதையடுத்து குழப்பமடைந்த முஸ்லிம்கள் அவசர அவசரமாக தங்களது உடைமைகளை பொதி செய்யத் தொடங்கினர். ஆரம்பத்தில் அவர்கள் கொண்டு செல்லக் கூடிய விடயங்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை. எனவே மக்கள் தமது உடைகள், பெறுமதிமிக்க பொருட்கள், நகைகள், பணத்தையெல்லாம் பொதி செய்தனர். போக்குவரத்துக்கென புலிகள் லொரிகள், வேன்கள், பஸ்களை ஒழுங்கு செய்திருந்தனர். பல முஸ்லிம்கள் தமது சொந்த ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் முஸ்லிம்களுக்கு இப்போது புதியதொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஐந்துமுச்சந்தியில் வந்து வரிசையாக நிற்குமாறு அவர்கள் வேண்டப்பட்டனர். வரிசையில் நின்றிருந்து துன்புற்றிருந்த மக்கள் பயங்கரமானதொரு அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். எல்ரிரிஈயின் ஆண் பெண் போராளிகள் முஸ்லிம்களிடம் உள்ள பணம், நகை, உடைமைகள் அனைத்தையும் ஒப்படைக்குமாறு கோரினர்.  ஒவ்வொரு நபருக்கும் 150 ரூபா பணமும் ஒரே ஒரு ஆடையும் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவித்தனர். உணர்ச்சிகரமான எதிர்ப்புக்கள் அப்போது கிளம்பின. ஆக்ரோஷமான தொனியில் துப்பாக்கி முனையில் அவர்களது குரல்கள் நசுக்கப்பட்டன. அவர்களது சூட்கேஸுகள் பறிக்கப்பட்டன. அதிலிருந்த ஆடைகளை வெளியே எடுத்து காற்சட்டை அணிந்திருந்தவருக்கு ஒரு காற்சட்டையும் சாரம் அணிந்திருந்தவருக்கு ஒரு சாரமும் என துணிகள் எடுத்துக் கொடுக்கப்பட்டன. சொத்துக்களின் உரித்துப் பத்திரங்கள், காசோலைப் புத்தகங்கள், தேசிய அடையாள அட்டைகள் என அனைத்துமே பறிக்கப்பட்டன.

பெண்கள் மற்றும் சிறுமிகளிடமிருந்து நகைகள் பறிக்கப்பட்டன. கொடூரமாக நடந்து கொண்ட சில பெண் புலிகள் காதுகளில் இருந்த தோடுகளை இரத்தம் வழிய வழிய கிழித்தெடுத்தனர். தோடுகளின் குண்டைக் கூட விடவில்லை. குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. ஒரு கடிகாரத்தைக் கூட அவர்கள் விடவில்லை. யாழ் முஸ்லிம்கள் விடயத்தில் புலிகள் கொடூரமாக நடந்து கொண்டார்கள். இவை எல்லாமே கரிகாலனின் மேற்பார்வையிலேயே நடந்தாக முஸ்லிம்கள் பின்னர் தெரிவித்தனர்.

செல்வந்த முஸ்லிம் வர்த்தகர்கள் குறைந்தது 35 பேராவது கடத்தப்பட்டனர். புலிகள் அவர்களைத் தடுத்து வைத்தனர். மறைத்திருக்கும் தங்கத்தைக் கேட்டு புலிகள் சில நகைக்கடைக்காரர்களைச் சித்திரவதைக்குள்ளாக்கினர். ஒரு நகை வியாபாரியை அடுத்தவர்களுக்கு முன்னால் அடித்தே கொன்றனர். அவர்களை விடுதலை செய்வதற்காகப் பெருந்தொகை கப்பமாகக் கோரப்பட்டது. சிலர் 30 இலட்சம் வரை கொடுத்தனர். கடத்தப்பட்டவர்கள் பல வருடங்களாக பல கட்டங்களில் விடுதலை செய்யப்பட்டனர். இருந்தாலும் 13 பேர் திரும்பி வரவேயில்லை. அவர்கள் இறந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பெரும்பாலான முஸ்லிம்கள் தற்காலிகமாக புத்தளம் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டனர். பலர் கொழும்பு, நீர்கொழும்பு போன்ற இடங்களுக்குச் சென்றனர். ஏனையவர்கள் குருநாகலை, அனுராதபுரம், கம்பஹா, மாத்தளை, கண்டி மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்தனர். ஏராளமான யாழ்ப்பாண முஸ்லிம்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்குச் சென்றனர். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் கணிசமானோர் கல்பிட்டி, புளிச்சாக்குளம், தில்லையடி பிரதேசங்களில் குடியேறினர்.

இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லிம் வீடுகளில் எஞ்சியிருந்த அனைத்து உடைமைகளையும் புலிகள் கொள்ளையடித்தனர். பல வீடுகளின் ஓடுகள், மரச்சட்டங்கள், கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் பிடுங்கி எடுக்கப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்ட தளபாடங்கள் மக்கள் கடை எனும் எல்ரிரிஈ கடைகளில் தமிழருக்கு விற்கப்பட்டன. யுத்தம் முடிந்து வடக்கே திரும்பிய முஸ்லிம்கள் தமது உடைமைகள் வேறு வீடுகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் இருப்பதை கண்டு கொண்டனர். பல முஸ்லிம் வீடுகளும் காணிகளும் வாகனங்களும் புலிகளால் தமிழர்களுக்கு சட்டவிரோதமாக விற்கப்பட்டிருந்தன.

பாரிய மக்கள் வெளியேற்றத்துக்கு 30 வருடங்கள் கடந்து விட்டன. இந்தக் காலப்பிரிவில் தமிழர்களுடன் கசப்புணர்வை வெளிப்படுத்தாமல் இருப்பது வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களிடம் காணக் கூடிய சிறப்பம்சங்களில் ஒன்று. அவர்களின் இந்த இக்கட்டான நிலைக்கும் அதற்கான காரணங்களுக்கும் எல்ரிரிஈ தான் காரணம் என்பதை அவர்கள் உணர்கிறார்கள். அதற்கு அவர்கள் சாதாரண தமிழரைக் குறை கூறவில்லை. தமிழர்களின் துன்பத்தைப் பற்றியும் அவர்கள் அனுதாபப்படுகிறார்கள்.

அனைத்துக்கும் மேலாக, தமிழ் மொழி மீதும் அதன் இலக்கியம் மற்றும் ஊடகங்கள் மீதுமான அவர்களது ஈடுபாடு குறைந்துவிடவில்லை. மேலும் அவர்கள் யாழ்ப்பாணம் பற்றிய நியாயமான ஏக்கத்துடன் இருக்கின்றனர். தங்களது தாயகமும் வடக்கே என்பதை பெருமையுடன் வலியுறுத்துகின்றனர். எங்களது தாயகமும் வடக்கே என்று கூறி வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமிழர்களுக்கு அடிக்கடி நினைவுபடுத்துகிறார்கள். அவர்கள் அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும் இந்தப் பெருந்தன்மை தமிழ் சமூகத்தை பெரியளவில் வெட்கிக்கச் செய்கிறது.

டிஎப்டி


5 comments:

  1. இன்று பயங்கரவாதி பிரபாகரன் எங்கே? அவனுடைய புலி பன்றி கூட்டம் எங்கே? வரலாற்றில் முள்ளிவாய்க்காளுக்கு நியாயமான பல காரணங்கள் உண்டு.

    ReplyDelete
  2. D B S ஜெயராஜ் உங்களின் உயர் குணாம்சஙகள் எப்படியிருக்கும் என்பதை இக்கட்டுரை மூலம் அறியமுடிகிறது பலரிடம் மனிதநேயம் தொலைந்து விட்டதைய்யா

    ReplyDelete
  3. இங்கு ஒரு விடயம் கவனத்திட் கொள்ளப்பட வேண்டும். அதாவது, முஸ்லிம்கள் முதன்முதலில் துரோகமிழைத்தது போன்றும், அதற்குப் பதிலடியாகவே புலிகள் அவர்களைப் பளிவாங்கியதாகவும் சித்தரிக்கப்படுவது அவதானிக்க முடிகிறது. ஆனால் உண்மையில் ஆயுதமேந்திய தமிழ்க் குழுக்களால்தான் முஸ்லிம்களுக்கெதிராக கடத்தல் கொள்ளயடிததல் வடகிழக்கு தமிழர்களுக்கு மட்டுமே உரிய பூமி, முஸ்லிம்கள் ஈழத்தில் வாழ அனுமதிக்கப்படமாட்டார்கள் போன்ற வெளிப்படையான பிரச்சாரங்கள் பரவலாக மேட்கொள்ளப்பட்டன. இதனால் நம்பிக்கையிழந்த போதுதான் வேறு வழியின்றி முஸ்லிம்கள் தமது இருப்புப் பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இவ்விடயம் மிக நீளமாக விவாதிக்கப்பட வேண்டியது.
    தமிழ் ஆயுதக் குழுக்களின் உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ள விரும்புவோர் புஸ்பராசா எனும் முன்னாள் களப்போராளியின் "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" எனும் நூலை வாசிக்கவும்....

    ReplyDelete

Powered by Blogger.