Header Ads



1990 இல் முஸ்லிம்களுக்கு, புலிகள் செய்த கொடூரங்கள்


- M.S.J -

1990 ஒக்டோபர்  16 ஆம் திகதி  சாவகச்சேரியில் ஆரம்பித்த இனச் சுத்திகரிப்பு பல்வந்த வெளியேற்ற செயற்பாடுகள் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் என பிரதேசம் பிரதேசமாக இனச் சுத்திகரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டன. கிளிநொச்சி நாச்சிக் குடா பிரதேசத்தில் உட்புகுந்த புலிகள்  முஸ்லிம்களின் நகை பணம் என்பவற்றையும் ஏனைய வியாபார பொருட்கள் போன்றவற்றையும் தமது முகாமில் ஒப்படைக்கும் படி கூறினர். வள்ளங்கள், தோணிகள், வலைகள்  மற்றும் இலட்சக் கணக்கான ரூபாய்கள் பெருமதியான பெற்றோல் டீசல் இருப்புகளையும் அப்படியே விட்டுவீட்டுச் செல்லச் சொன்னார்கள். 

முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறியதும் உடனடியாக வீடுகளுக்குள் நுளைந்த புலிகள் முஸ்லிம்களின் அலுமாரிகள், பானைகள், நிலப் பகுதி போன்றவற்றைச் சோதனை இட்டு  பல வீடுகளில் பணம் நகைகள் என்பவற்றை எடுத்துச் சென்றனர்.  அடுத்த நாள் வந்த  புலி இயக்க உறுப்பினர்கள் முஸ்லிம்களது வளர்ப்புப் பிராணிகளான ஆடுகள், மாடுகள், கோழிகள் , புறாக்கள் என்பவற்றை எடுத்துச் சென்றனர். மறுநாள் வந்த புலி உறுப்பினர்கள் முஸ்லிம்களின் தளபாடங்கள் வீட்டுப் பொருட்களை எடுத்துச் சென்றனர். 

இவ்வாறே மன்னாரிலும் முல்லைத் தீவிலும் செய்யப் பட்டது. வவுனியாவில் புலிகள் முஸ்லிம் பிரதேசங்களுக்கு உட்செல்ல முடியாமையினால் இவ்வாறு கொள்ளையிடல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை.  ஆனாலும் முஸ்லிம்களால் பணம் நகைகளைக் காப்பாற்ற முடிந்ததே தவிற வீட்டுப் பாவனைப் பொருட்களையும் வீடுகளின் கூறைகள், ஜன்னல்கள் கதவுகள் என்பவற்றையும் காப்பாற்ற முடியவில்லை. 

யாழ்ப்பாணத்தை பொருத்த வரை பொருட்கள் எல்லாவற்றையும் கொண்டு செல்லலாம் எனச் சொன்ன புலிகளின் அறிவிப்பாளர், பின்னர் வீதிகளுக்கு வந்த போது தமிழீழத்தில் உழைத்தவை தமிழீழ்த்துக்கே சொந்தம் எனச் சொல்லி  நகைகளையும் பணங்களையும் பறிக்கத் தொடங்கினர். 

வீடுகளுக்குள் நுளைந்த ஆண் மற்றும் பெண்புலி உறுப்பினர்கள் நகைகளையும் பணத்தையும் பறித்து தமது பொக்கட்களுக்குள் போட்டுக் கொண்டனர். இந்த வெளியேற்றச் செயற்பாட்டின் போது புலிகள் அல்லாத புலிகளின் உறவினர்கள் நண்பர்களும் அவர்களுடன் வந்திருந்தனர். சில புலி உறுப்பினர்கள் நகைகள் பணம் போன்றவற்றை அந்த நண்பர்கள் உறவினர்களிடம் கொடுத்தனுப்பினர்.

வீடுகளுக்குள் நுளைந்த புலி உறுப்பினர்கள் முஸ்லிம்கள் எடுத்துச் செல்ல முனைந்த காணி உறுதிகளை பறித்துக் கிழித்து எறிந்தனர். பெண்களின் புதிய ஆடைகளைப் பறித்து தமக்கு முன்பக்கமாக பிடித்து அளவு பார்த்துக் கொண்டனர். கொடுத்த வாக்குறுதிக்கு மாற்றமாக எங்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன. 

போதாக்குறைக்கு ஒவ்வொரு தெருச் சந்திகளிலும் பரிசோதிப்புச்  சாவடிகளை நிறுவி  சகல முஸ்லிம்களும் மீண்டும் பரிசோதிக்கப் பட்டனர். எஞ்சியிருந்த நகைகள் பணம் என்பன பறிக்கப்பட்டன.  சங்குப்பிட்டியிலிருந்து வவுனியா வரை செல்லும் போக்குவரத்துச் செலவுக்காக  சிலருக்கு 200 ரூபாய் அனுமதிக்கப் பட்டது. சிலருக்கு அதுவும் கிடைக்கவில்லை. சங்குப் பிட்டி மன்னார் பாதைகளில் நின்ற புலிகளும் மீண்டும் சிலரை  சோதனை செய்து துன்புறுத்தினர். 

ஐந்து சந்தியில் இடம்பெற்ற சோதிப்பின் போது ஒரு வயதுப் பாலகர்கள் பலரின் விரல்களில் போடப்பட்டிருந்த மோதிரங்கள் கத்திரிக்கோலால் வெட்டியெடுக்கப் பட்டன. அவ்வாறு வெட்டும் போது சில பாலகர்களுக்கு விரலில் காயங்களும் ஏற்பட்டன. ஒரு சிறுமியின் காதில் இருந்த காதுக் குச்சி இழுத்து அறுக்கப் பட்டது. அதனால் அந்த சிறுமியின் காது அறுந்து இரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. 

சுடுதண்ணீர்ப் போத்தல்கள் கூட பறிக்கப் பட்டன. சைக்கிள்கள் எல்லாம் பறிக்கப் பட்டன. சில சோதனை வீரர்களும் வீராங்கனைகளும் உணவுப் பொட்டலங்களையும் பறித்தெடுத்தனர். 

ஆக மொத்தத்தில் மனிதாபிமானம், சகோதரத்துவம், அறிமுகம், நீதி, நியாயாம் போன்ற அனைத்தும் செத்துப் போயிருந்தன. யாழ்ப்பாண முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்புச் செய்வதற்காக வந்திருந்த  600 இக்கும்  மேற்பட்ட ஆண் பெண் புலி உறுப்பினர்களிடமும்  ஈவு இறக்கம் என்பன கொஞ்சமேனும் காணப்படவில்லை. காட்டு மிராண்டித்தனத்தை அன்று தான் யாழ்ப்பாண முஸ்லிம்கள் அனுபவித்தார்கள்.  

இது ஏதோ பெரிய யுத்தம் நடக்கப் போகின்றது அதனால தான் தம்மை வெளியேறச் சொல்கிறார்கள் என நினைத்த முஸ்லிம்களில் சிலர் மதிய உணவைச் சமைத்துச் சென்றால் இடையில் பசியாற  முடியும் என நினைத்து சமையலில் இறங்கினர்.  அவர்களை அவற்றை அப்படியே வைத்து விட்டு வெளியேறுமாறு சொல்லப்பட்டது. சிலர் சமைத்து முடித்த உணவை சோதனைச் சாவடிகளில் பறிகொடுத்தனர். ஒரு சிலர் மட்டுமே பாண் போன்றவற்றை பிள்ளைகளுக்காக கொண்டு சென்றனர். சிறு பிள்ளைகளின் பால்மா பக்கட்கள் கூட அன்று பறித்தெடுக்கப் பட்டன.

காலை 11 மணியளவில்  முஸ்லிம்கள் தப்பிப் போக  இரண்டு மணி நேர அவகாசம் வழங்கப் படும் என்று கூட்டத்தில் கூறப்பட்டாலும், ஒரு மணித்தியாலத்துக்குள், அதாவது பகல்  12 மணிக்கு முன்பாகவே அனைவரும் சோதணைச் சாவடிகளுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப் பட்டனர்.  அவர்களுடைய கட்டளைக்கு கீழ்படிய மறுத்தவர்கள் பிடித்துத் தள்ளி பலாத்காரமாக அனுப்பப் பட்டனர். 

அன்றைய தினம் அனைவரும் உடல்பரிசோதணை செய்யப் பட்டு மனோகரா தியேட்டருக்கு அனுப்பப் பட்டனர்.  புலிகளின் சோதனையின்  பிறந்து ஒரு சில் நாட்களேயான பாலகர்கள் உட்பட் சிறுவர் சிறுமியர், வாலிப வயதையடைந்தவர்கள், திருமணம் முடித்தவர்கள், வயோதிபர்கள், நோயாளிகள் என யாருமே தப்பவில்லை. 

1744 ஆம் ஆண்டு நல்லூர் சோனவன் தோப்பு (சங்கிலியன் தோப்பு பிரதேசம்), சோனகர் புரம் (தற்போது நல்லூர் கோவில் இருக்கும் பிரதேசம்), கச்சேரி பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் வெளியேற்ற திட்டமிடப் பட்ட போது சோனகர் புரத்தில் உள்ள கிணறுகளில் பன்றிகளை கொன்று அவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கிணறுகளுக்குள் போட்டிருந்தார்கள். சோனகன் தோப்பில் ஒரு சில வீடுகளின் கிணறுகளுக்குள் பன்றியின் பாகங்கள் போடப்பட்டது. இதனால் அதிகமானோர் வெளியேறி தற்போதைய யாழ் சோனகத்தெருவின் காமால் வீதி (காவல் மஹால் வீதி) பிரதேசத்தில் குடியேறியிருந்தனர். சில குடும்பங்கள்  நாவலர் வீதியில் (புதுப்பள்ளி), ஆசாத் வீதி பிரதேசங்களில் குடியேறினர். சில குடும்பங்கள் முல்லைத் தீவுக்கும்  வேறு சில குடும்பங்கள் வவுனியாவுக்கும் இடம்பெயர்ந்தனர். 

நல்லூர் சோனகன் தோப்பில் வாழ்ந்த அதிகமான முஸ்லிம்களும் சோனகர் புரத்திலிருந்த சில முஸ்லிம்களும்  வெளியேறாமல் பிடிவாதமாக அங்கேயே இருந்தனர்.   எஞ்சியிருந்த முஸ்லிம்களை வெளியேற்றும் நோக்கில் அவர்களின் கொட்டில் வீடுகளுக்கு இரவு நேரத்தில்  தீவைக்கப் பட்டது.  நெருப்புக்கு பயந்து வெளியேவந்தவர்கள் காடையர்களால் வெட்டப் பட்டனர். ஒரு சிலர் இறந்து போக ஏனையோர் சோனகதெருப் பக்கமாக இடம்பெயர்ந்து வந்து அபயம் கேட்டனர். காடையர்களுக்கு ஒல்லாந்தரின் அனுசரணை இருந்ததால் அபயமளிக்க மக்கள் பயந்தனர். இதனால் வெளியேறி வந்த மக்கள் செம்பகனாட்சிக் குளப் பிரதேசத்தில் இருந்த சட்டனா காட்டுக்குள் புகுந்து  அபயம் பெற்றனர்.  1744இல்  நிகழ்ந்த அதே மாதிரியான அமைப்பிலான ஒரு நிகழ்வை 1990 இல் புலிகள் நடத்திமுடித்தனர். 

1744 இல் மக்களில் கிணற்று நீரை அருந்த முடியாததாக்கி அதில்தொழுகைக்கு  வுழு செய்ய முடியாததாக்கி அதன் பின்னர் ஒரு சிலரை வெட்டி வீடுகளை தீயிட்டுக் கொழுத்தி வெளியேற்றினர். இந்தக் காரியங்களை ஒல்லாந்தரின்  படையிலிருந்த தமிழர்களே துப்பாக்கிமுனையில் அரங்கேற்றினர். இங்கே 1990 இல் நிராயுதபாணிகளான முஸ்லிம்களை அண்மைக் காலத்தில்  உலகில்  இரண்டாம் நிலையிலிருந்த பயங்கரவாத அமைப்பு கனரக ஆயுத முனையில் வெளியேற்றினர். 

வெளியேற்றப் பட்ட தின நிகழ்வுகள் மேலே தரப்பட்டுள்ளன. அன்றைய தினம் வீடுகளை திறந்து வைத்து விட்டே வெளியேற வேண்டுமென முஸ்லிம்கள் வற்புறுத்தப் பட்டனர். ஒரு சிலர் வீடுகளை பூட்டியிருந்தனர். அவ்வாறான முஸ்லிம்களின் வீடுகள் உடைக்கப் பட்டன. ஏனையவற்றினுள்ளும் நுளைந்த புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் தமக்கு கையில் அகப் பட்ட பொருட்களையும் உடுப்புகளையும் எடுத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து முஸ்லிம்களிடம் பறிக்கப் பட்ட பணம் நகை பொருட்கள் வைக்கப் பட்டிருந்த ஜின்னாவீதி லண்டன் ரஹீம் மாஸ்ரர் வீடு, ஆஸாத் வீதியில் அமீர் டெய்லர் மற்றும் முஹ்மின் வீடு, ஐந்து சந்தி, நாவாந்துறை, ஒஸ்மானியா கல்லூரி பொம்மைவெளி (புதிய சோனகதெரு), சிவலை பள்ளிச் சந்தி, வைத்தீஸ்வரா மாவடிச் சந்தி போன்ற இடங்களில் பாதுகாப்பு அரண்கள் நிறுவப் பட்டன. கனரக ஆயுதம் தரித்த புலிகள் அங்கு காவலில் வைக்கப் பட்டனர். இந்த ஏற்பாடுகளைப் பார்க்கும் போது புலிகள் முஸ்லிம்கள் ஏதாவது எதிர் தாக்குதல் நடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாக கருத இடமுண்டு. 

1990 ஒக்டோபர் 31 ஆம் திகதி மேலும் சில புலி உறுப்பினர்கள் வந்து ஒஸ்மானியாக் கல்லூரியில் முகாம் அமைத்தனர். முஸ்லிம்களிடம் பறிக்கப் பட்ட காணி உறுதிகள் தஸ்தாவேஜுகள் என்பன ஒஸ்மானியா கல்லூரி முகாம் பொருப்பாளரிடம் ஒப்படைக்கப் பட்டன. 

ஒவ்வொரு வீடாக மீண்டும் சோதனையிடப்பட்டது. ஆடுகள் மாடுகள், கோழிகள் ,புறாக்கள், தாராக்கள் இழுத்துச் செல்லப் பட்டு புலிகளின் வாகனங்களில் ஏற்றியனுப்பப் பட்டது.  அன்றைய தினம் முழுவதும் வீட்டு விலங்குகளை கைப்பற்றுவதிலேயே புலிகளின் கவனம் இருந்தது. 

1990 நவம்பர் முதலாம் திகதி மீண்டும் புலி அணிகள் சோனகத் தெருவுக்கு வந்தனர். பின்னர் வீடு வீடாக சோதனை இட்டனர். அனைத்து அலுமாரிகள், பக்கூஸ் பெட்டிகள் என்பன உடைக்கப் பட்டு அங்கிருந்த பணம் நகை பெருமதியான பொருட்கள் எடுத்துச் செல்லப் பட்டன. அன்றைய தினம் யாழ் பெரிய பள்ளியினுள் ஒரு முகாமும்  டிசைன் அப்துல் கரீம் அவர்களின் வீட்டில் ஒரு முகாமும் அமைக்கப்பட்டது. 

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட அனைத்து பள்ளிவாசல்களுக்குள்ளும்  புகுந்த புலிகள் அங்கிருந்த நூற்றுக்கணக்கான  புனித அல் குர் ஆன் பிரதிகள் , ஹதீஸ் கிரந்தங்கள் , இஸ்லாமிய நூல்கள் போன்றவற்றை கொண்டுவந்து பெரிய பள்ளிக்கும்  புதுப்பள்ளி சந்திக்குமிடையில் போட்டு எரித்தனர். வீடுகளில் இருந்த குர் ஆன் கிரந்தங்களும் அவ்வாறு எரிக்கப்பட்டன. 

மறுமுனையில் சின்னப்பள்ளிவாசலில் காணப்பட்ட  புனித குர் ஆன் மற்றும் ஹதீஸ் கிரந்தங்கள் இஸ்லாமிய நூல்கள் ஒஸ்மானியாவின் முன்பக்கத்தில் (உள் வளவில்) போட்டு எரிக்கப் பட்டன. அப்பிரதேசத்தில் சேகரிக்கப் பட்ட அல் குர் ஆன் பிரதிகளும் அவ்வாறே எரிக்கப் பட்டன. 

முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியது அவர்களைப் பாதுகாக்கவே என்ற கருத்துடைய சில அரசியல் தலைவர்கள், முஸ்லிம்களை வெளியேற்றியது சரி,  ஏன் முஸ்லிம்களின்  பணம் நகைகளை  பறித்தார்கள், அவர்களின் குழந்தைகளில் பால்மா பக்கட்களை ஏன் பறித்தார்கள், அவர்களின் காணி உறுதிகளை ஏன் பறித்து எறித்தார்கள், இவையெல்லாவற்றுக்கும் மேல் அவர்களின் உயிரிலும் மேலான் புனித அல் குர் ஆன்களை ஏன் எரித்தார்கள் என்பதற்கு காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். 

இந்த ஆட்டமெல்லாம் ஒட்டுமொத்தமாய் தமது இயக்கத்தை அழிக்கவும், அப்பாவித்  தமிழர்களை மனிதப் பாதுகாப்பு அரண்களாக நிற்க வைக்கவே என்பது 19 வருடங்களில் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற போது தான் அவர்களுக்குப் புரிந்திருக்கும். 

 எந்த முஸ்லிம்களை அழிக்க நினைத்தார்களோ எந்த சமூகத்தை ஒட்டுமொத்த அராஜகத்துக்கு உட்படுத்தி வெளியேற்றினார்களோ அந்த சமூகத்திடமே முள்ளிவாய்க்காலில் நின்று கொண்டு அதே புலிகள்,  நீங்கள் எங்களுக்காக குரல் கொடுக்க மாட்டீர்களா என்று  கெஞ்சும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்தான். 

 புதுப்பள்ளிச் சந்தியிலும் ஒஸ்மானியாவினுள்ளும் அல் குர் ஆன்களை எரித்த போது அவை  முழுமையாக எரியாமல் சிறு சேதங்களுடன் அப்படியே கிடந்தனவே அந்த அதிசயத்தை பார்த்தாவது நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த அநீதிகளுக்கு மன்னிப்புக் கேட்டு இஸ்லாத்தை உங்கள் மார்க்கமாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

1990 நவம்பர் இரண்டாம் திகதி புதிய பிரிவொன்று  சோனகதெருவின் பாதுகாப்பு வேலைகளை பொருப்பெடுத்தது. முன்னர் இருந்தவர்கள் வெளியே வர அனுமதிக்கப் படவில்லை. அவர்கள் பிரபாகரனின் பாதுகாப்பு அணியைச் சேர்த்தவர்கள் என்பதாக சிலர்  பின்னர் கதைத்துக் கொண்டனர். அப்போது பஜிரோ அமைப்பிலான வாகனங்கள் இரண்டு நடுவிலும் முன்னாலும் பின்னாலும் மோட்டர் சைக்கிளிலும் மேலும் வேன்களிலும் புலிகள்  ஓட்டுமடச் சந்தியூடாக உள் நுளைந்தனர்.  மிகவும் மெதுவாக அந்த வாகனம் சிவலை பள்ளியை நோக்கிச் சென்றது. பின்னர் அங்கிருந்து  ஹாதி அபூபக்கர் வீதியூடாக சின்ன முஹிதீன் பள்ளி வீதியினுள் நுளைந்து  நாவலர் வீதியில் புதுப்பள்ளி சந்தியை அடைந்து அங்கிருந்து  ஆஸாத் வீதி வழியாக மானிப்பாய் வீதியை அடைந்து பின்னர் ஜின்னாவீதியூடாக நுளைந்து ஓட்டுமடம் சந்தியினூடாக வெளியேறிச் சென்றது. 

அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்க்கும் போது அது பிரபாகரனின் வாகனத் தொடரணி எனத் தெரியவந்தது. நிராயுதபாணிகளாக சமபலம் இல்லாமல் வாழ்ந்த அப்பாவி முஸ்லிம்களை கொள்ளையடித்து  வெளியேற்றிவிட்டு அவர்களின் பிரதேசம் உண்மையிலேயே குட்டி சவூதியா என்று பார்ப்பதற்காக பிரபாகரனின்  சோனகதெருவுக்கு விஜயம் அமைந்துள்ளது.  1995 ஆம் ஆண்டு  ஒக்டோபர் வரை பிரபாகரனின் தங்குமிடங்களில் ஒன்றாக ஒஸ்மானியாக் கல்லூரியும்  ஹாதி அபூபக்கர் வீதியிலிருந்த எம்.ஓ.வின் வீடும் உபயோகப்  படுத்தப் பட்டுள்ளன. 

வெளியேற்றத்துக்கு கிழக்குப் புலிகள் தான் காரணம் என்ற கதைகள் எல்லாம் மக்களை திசை திருப்ப மேற்கொள்ளப் பட்ட பிரச்சாரங்கள் என்பது மேற்படி நிகழ்வுகள் மூலம் உறுதியாகின்றது.. 

ஏற்கனவே எடுக்கப் பட்ட பொருட்கள் விலங்குகள் எல்லாம் வாகனங்களில் ஏற்றப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்,  இரவு 10 மணிக்குப் பின்னர் வாகனங்கள் சோனகதெருவிலிருந்து  வெளியேறிச் செல்லும். இவ்வாறு கைப்பற்றப் பட்ட பொருட்கள் யாழ் கச்சேரியடியில் வைத்து விற்கப்பட்டது.  இவ்வாறு பல்வேறு இடங்களில் வைத்து பொருட்கள் விற்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான தமிழர்கள் இந்தப் பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டவில்லை என்பது மகிழ்ச்சியான விடயம். 

எரிவாயு கேஸ் சிலிண்டர்கள் இந்தியாவுக்கு அனுப்பப் பட்டன. ஆனால் அங்கிருக்கும் வாயு முனை வித்தியாசம் என்பதால் அவற்றை யாரும் அங்கு வாங்கவில்லையாம். அதனால் அவற்றை திரும்பிக் கொண்டு வந்து ஆஸாத் வீதியிலுள்ள சவூதி லேனுக்குள் அடுக்கி வைத்துவிட்டனர். இவ்வாறு மின் சாதன பொருட்கள் யாழ்ப்பாணத்தில் விற்பனையாகவில்லை. அப்போது அங்கு மின்சாரம் இல்லையே. எனவே அவையும் சோனகதெருவின் ஆங்காங்கே  வைக்கப் பட்டிருந்தன. 

நவம்பர்  3 ஆம் நாள் ஓஸ்மானியா கல்லூரியைப் பார்க்க அப்போதைய அதிபர்  ஹாமீமும் , மாணவன் ஏ.சி. நகீபும் சென்றுள்ளனர். அங்கிருந்த முகாம் பொருப்பாளர் முஸ்லிம்களின் ஆவணங்களைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளான். அவ்வாறு செய்ய வேண்டாம் எனவும் அவற்றை தம்மிடம் தரும் படியும் அதிபர் ஹாமீம் கேட்ட போது இவை இனிமேல் உங்களுக்குத் எக்காலத்திலும் தேவைப்படாது என அந்த பொருப்பாளர் கூறியுள்ளான். 

பின்னொரு நாள் அதிபர் ஹாமீமை கொழும்பில் சந்தித்த போது புலிகள் இருக்கும் வரை யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சரிப்பட்டு வராது என்று கூறினார். ஏற்கனவே தனது மைத்துனர்  அப்போதைய மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.எம். மக்பூல் அவர்களை புலிகள் சுட்டுக் கொன்றதையும் அவர் மறக்கவில்லை. 

முஸ்லிம்களின் ஒவ்வொரு வீட்டிலும் அக்காலத்தில் தொலைக்காட்சிப் பெட்டி, வானொலி, குளிர்சாதனப் பெட்டி, கட்டில்கள், கதிரைகள், அலுமாரிகள் என எல்லாப் பொருட்களும் இருக்கும். இதனால் சோனகர் பிரதேசத்தைப் பார்வையிட்ட புலிகளின் தலைவர் அதனை குட்டி சவூதி என சொன்னதாக கைதியாக இருந்த சிலரிடம் புலிகள் தெரிவித்துள்ளனர்.  புலிகளும் தமிழர்களும் முஸ்லிம்களின் பிரதேசத்தை  குட்டி சவூதி என்றே பின்னர் அழைத்தனர். 

அவ்வாறு பறிக்கப் பட்ட முஸ்லிம்களின் பணம் நகை தவிர்ந்த ஏனைய சொத்துக்களின் தற்போதைய பெறுமதி என்ன தெரியுமா? ஏறக் குறைய 650 மில்லியன் ரூபாய்களாகும் (65 கோடி) . உடைக்கப் பட்ட வீடுகளை இன்றைய பெறுமதியில் மீளமைக்க ஏறக்குறைய 4800 மில்லியன் ரூபாய்கள் ( 480 கோடி)  தேவைப்படும். 

இன்றைய பெறுமதியில் முஸ்லிம்களிடம் இருந்து  1500 மில்லியன் பெருமதியான நகை தங்கங்கள் பறித்தெடுக்கப் பட்டன. ஒரு பவுண் தங்கம் 105,000 ரூபா என்ற தற்போதைய விலையில் அவற்றின் பேறுமதி 25,000 மில்லியன் ரூபாய்களாகும். வீட்டுப் பொருட்கள் 650 மில்லியன் பறிக்கப் பட்டன. சோதணைச் சாவடிகளிலும் வீடுகளிலும் முஸ்லிம்களின் வர்த்தக் நிலையங்களிலும் பறிக்கப் பட்ட பணத்தின் பெறுமதி (1990 பெறுமதி)  200 மில்லியன் (20 கோடிகளாகும்.) .  உடைத்தெடுக்கப்  பட்ட வீடு கட்டுமான பொருட்களுடன் சேர்த்து  யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு 30,000 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான தொகையாகும். இந்த இழப்புகளை தமிழ் மக்கள் ஈடுசெய்வார்களா? 

அது ஒரு புறமிருக்க புலிகளால் பணத்துக்காக கடத்தப் பட்ட வர்த்தகர்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருக்க அனுமதிக்கப் பட்டிருந்தார். அவ்வாறு சுமார் முப்பது பேர் அங்கிருந்தனர். அவர்கள் எல்லோரும் கொல் ஒழுங்கையில் ஒரு வீட்டில் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர். 

ஆரம்ப நாட்களில் இவர்களுக்கான சாப்பாடு  புலிகளால் வழங்கப் பட்டது. பின்னர் வைத்திஸ்வரா வீதியிலுள்ள சைவ ஹோட்டல் வரை சென்று வர அனுமதிக்கப்பட்டது. பின்னர் இவர்கள் ஆசாத் வீதியிலுள்ள சியானாஸ் தாஹிரினதும் மற்றொருவரினதும் வீட்டுக்கு மாறி அங்கிருந்தனர். 

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இருபதாவது நாள்  கப்பப் பணம் செலுத்தியதால் ஸாஹிர், அவருடைய மகன்  ரமீஸ், மற்றும்  பேக்கரி ரஸீத்  ஆகியோர்  விடுவிக்கப் பட்டனர்.  அவர்களும் வந்து இவர்களுடன் இருந்து சில நாட்களின் பின்னர் வெளியேறிவிட்டனர். 

1990 நவம்பர் 30 ஆம் நாள் புலிகள் முஸ்லிம் கைதிகளின் குடும்பங்கள்  தங்கியிருந்த இடத்துக்கு வந்து நீங்கள் உடனடியாக வெளியேற வேண்டும். இது தலைவர் பிரபாகரனின் உத்தரவு எனத் தெரிவித்துச் சென்றனர். அவர்கள் எல்லோரும் ராஜ் கோபால் வீட்டிலிருந்த முகாமுக்குச் சென்று தம்மை பதிவு செய்தனர். அவர்களை அங்கிருந்து நல்லூருக்கு அனுப்பி பயண அனுமதிப் பத்திரத்தை வழங்கிய புலிகள் நேராக அவர்களை கேரதீவு பாதையில் ஏற்றி விட்டனர். மறுபக்கம் சென்றவர்கள் வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்தி வவுனியா பட்டாணிச்சூர் வரை வந்தனர். அன்றைய இரவு அங்கு  பட்டணிச்சூர் முஸ்லிம் பாடசாலையில் தங்கிய அவர்கள் மறுநாள் கால் நடையாக குருமண் காட்டுச் சந்தியையடைந்து அங்கிருந்து கால்நடையாக வவுனியா பஸ் நிலையத்தை அடைந்தனர். அங்கு அவர்களை வரவேற்ற இராணுவத் தளபதி அவர்களை வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில்  தங்கும் படி கூறி  அன்றைய புகையிரத்தில் இவர்களில் சிலரை ஏற்றியனுப்பினார். ஏனையோர் இக்கிரிகொல்லாவ செல்ல விரும்பி அங்கேயே சென்றனர். 

கடத்திச் செல்லப் பட்ட முஸ்லிம்கள் 565 நாட்களின் பின்னர்  விடுதலை செய்யப் பட்டனர்.

பின்னர் ஒஸ்மானியாக் கல்லூரியில் தமிழீழ படைத்துறைப் பிரிவு ஸ்தாபிக்கப் பட்டு அது ஒரு ஆயுதப் பயிற்சி வழங்கும் பிரதேசமாக மாற்றப்பட்டது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஓரிடத்தில் ஒஸ்மானியா அமைந்துள்ளது. அதன் மிக அகலமான மாடிக் கட்டிடம், அருகே காணப்பட்ட இன்னொரு மாடிக் கட்டிடம் என்பன தலைவர்கள் விமானத்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு பெறக்கூடிய விதமாக அமைந்திருந்தது.  மேலும் ஒஸ்மானியாவின் மேலிருந்து பார்த்தால் நாவாந்துறைக் கடல், பொம்மைவெளி, சூரியவெளி  மானிப்பாய் வீதி என்பன தெரியக் கூடியதாக இருந்தது. எனவே ஒரு படையிறக்கத்தின் போதோ விமானத்தாக்குதல், ஷெல்தாக்குதல்களின் போதும் பாதுகாப்பான இடமாகவும் பிரதேசமாகவும் ஒஸ்மானியாப் பிரதேசம் விளங்கியது. 

ஹதீஜா கல்லூரியில் பெண் புலிகளுக்கான பயிற்சிகள் வழங்கப் பட்டன. எம்.ஓ. வீட்டில் உயர்நிலை புலி உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல்கள் நடத்தப் பட்ட் அடையாளங்கள் அங்கே காணப்பட்டது.


5 comments:

  1. அநியாயக் காரர்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் தான் உள்ளத்தால் திருந்தி பாவமன்னிப்பு பெறாதவரை ஒரு போதும் வெற்றி அடையமாட்டார்கள். அநியாயக்காரர்களுக்கு அவர்களது பொறாமை வஞ்சகம் , சூழ்ச்சி , சதி , காட்டுமிராண்டித்தனம் என்பவற்றால் வெறியாட்டம் ஆடும் போது அப்போது கிடைப்பது எங்களுக்கு லாபம் என நினைக்கலாம். அதுவல்ல அது எலிப்பொறியில் வைக்கப்படும் மனக்க மனக்க வைக்கப்பட்ட சுட்ட கருவாட்டுத் துண்டு என்பதை பின்னர்தான் அறிந்து கொள்வார்கள்.

    ReplyDelete
  2. Don't write an article with your day dreams.
    All these informations are wrong and Tamil lost more than this in terms of properties and lives in Eastern province by radical muslims.
    Don't mislead the innocent muslims by fake information

    ReplyDelete
  3. இப்போது எங்கே அந்த சண்டாளர்கள்.மூளை சிதறிக் கிடந்த நிலையிலும் மூளம் கிழிந்த நிலையிலும் சந்திகளில் கிடந்தன அவர்களது உடல்கள். யூதனுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் அழிச்சாட்டியம் செய்யும் இக்கூட்டத்தின் மீது இறை சாபம் நிரந்தரமாகட்டும்.

    ReplyDelete
  4. முக்கியமான ஒரு வரலாற்று பதிவு எம் கே எஸ் உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக 1990 யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர் என்ற ஒரு செய்தியை மாத்திரம் அறிந்த எங்களைப்போன்ற பிற பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு வெளியேற்றப்பட்ட கொடூரத்தை மனக்கண்முன் காண்பிப்பதாக உள்ளது கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது இவ் வரலாற்று குறிப்பு பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம் இவ்வாறு அநீதி இழைக்கப்பட்ட முஸ்லிம்களின் துஆவின் ஆல் தான் புலிகளின் அழிவு ஆரம்பமாகி இருக்கும்.

    குறிப்பு: Ajanta, Kumar,Anush etc., உன்னுடைய கீழாடையை கலட்ரீ உள்ளாடையை நீக்கி எல்லாவற்றையும் வெளியே காட்டிவிட்டார்கள் இதற்குப் பின்பும் உனது கமெண்ட்ஸ் ஜப்னா முஸ்லிமில் வருமோ ?

    ReplyDelete
  5. முக்கியமான ஒரு வரலாற்று பதிவு எம் கே எஸ் உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக 1990 யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர் என்ற ஒரு செய்தியை மாத்திரம் அறிந்த எங்களைப்போன்ற பிற பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு வெளியேற்றப்பட்ட கொடூரத்தை மனக்கண்முன் காண்பிப்பதாக உள்ளது கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது இவ் வரலாற்று குறிப்பு பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம் இவ்வாறு அநீதி இழைக்கப்பட்ட முஸ்லிம்களின் துஆவின் ஆல் தான் புலிகளின் அழிவு ஆரம்பமாகி இருக்கும்.

    குறிப்பு: Ajanta, Kumar,Anush etc., உன்னுடைய கீழாடையை கலட்ரீ உள்ளாடையை நீக்கி எல்லாவற்றையும் வெளியே காட்டிவிட்டார்கள் இதற்குப் பின்பும் உனது கமெண்ட்ஸ் ஜப்னா முஸ்லிமில் வருமோ ?

    ReplyDelete

Powered by Blogger.