Header Ads



புத்தளம் மதரசாவில் சஹ்ரானின், பயங்கரவாத போதனை - ஜனாதிபதி ஆணைக்குழுவில் புலனாய்வு அதிகாரி தெரிவிப்பு



சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான அமைப்பு புத்தளம் பொம்பரிப்பு பகுதியிலுள்ள அல் ஸுஹாரியா மதரசாவில் நான்கு வருட காலமாக பயற்சி முகாம் ஒன்றை நடத்தி வந்திருப்பதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


குறிப்பிட்ட மதரசா முஸ்லிம் மத கலாசார விவகாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், தெரிவு செய்யப்பட்ட 26 மாணவர்களுக்கு இங்கு ரி-56 ரக தன்னியக்க துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளைத் தயாரிப்பது போன்றவற்றில் பயிற்சியளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.


குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி சிறிமால் சஞ்சீவ ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்றைய தினம் சாட்சியமளித்த போதே இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.


குறிப்பிட்ட மதரசா 1989 இல் ஒரு மதப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு, 2011 இல் மதரசாவாக மாற்றப்பட்டதாகத் தெரிவித்த சஞ்சீவ, 2015 நவம்பர் 18 ஆம் திகதி முஸ்லிம் மத கலாசார விவகாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.


“12- 16 வயதுக்குட்பட்ட மாணவர்களே இங்கு பயிற்றப்பட்டனர். இவர்கள் கபொத சாதாரண தரம் மற்றும் உயர் தரத்துக்கு தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ணப்பித்திருந்தார்கள். இங்கு நான்கு ஆசிரியர்கள் நிரந்தரமாகக் கடமையாற்றிய அதேவேளையில், ஏழு ஆசிரியர்கள் தற்காலிகமாகவும் கடமையாற்றினார்கள். அதிபர் ஒருவரும் இங்கு கடமையிலிருந்தார். மாணவர்களிடம் மாதந்தக் கட்டணமாக 4,000 ரூபா வசூலிக்கப்பட்டது” எனவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.


“இங்கு கல்விகற்கும மாணவர்களுக்கும், நிரந்தர ஆசிரியர்களுக்கும் வதிவிட வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன. சஹ்ரான் உட்பட பலர் 2015 முதல் 2019 வரையில் இங்கு பயிற்சியளித்துள்ளார்கள். ‘Save the Pearl’ என்ற அமைப்பின் மூலமாகவே 26 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். மட்டக்குளி, மாதம்மே, புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே இங்கு பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்த தற்கொலைக் குண்டுதாரிகள் பலர் இங்கு பயிற்சியெடுத்திருந்தார்கள். சஹ்ரானும், இல்ஹாமும் மாணவர்களுக்கு தீவிரவாத விரிவுரைகளை நிகழ்த்தினார்கள். பாத்திமா கராட்டே பயிற்சியைக் கொடுத்தார். இல்ஹாம் ரி-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்துவது மற்றும் கைக்குண்டுகளைத் தயாரிப்பது போன்றவற்றில் பயிற்சியளித்துள்ளார்.


இந்த மாணவர்களுடைய பாதுகாவலராக கடமையாற்றிய சுல்தான் என்பவர் கைது செய்யப்பட்டு தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்” எனவும் சஞ்சீவ தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.