September 13, 2020

இஸ்ரேல் – பஹ்ரைனுக்கு இடையே உடன்படிக்கை, துரோகம் என்கிறது ஈரான், பாலத்தீனம் கோபம்


தங்களது இருதரப்பு உறவை சுமூகமாக்க இஸ்ரேலும் பஹ்ரைனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

கடந்த 30 நாட்களில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இரண்டாவது நாடு பஹ்ரைன்.

கடந்த பல தசாப்தங்களாக பெரும்பாலான அரபு நாடுகள் இஸ்ரேலை புறக்கணித்தே வந்துள்ளன.

பாலத்தீன பிரச்சனை முடிவுக்கு வந்த பிறகே உறவுகளை மேற்கொள்ள முடியும் என அவை தெரிவித்து இருந்தன.

இந்த சூழலில் கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலுடன் சுமூக உறவை பேண ஒப்புக் கொண்டது.

பஹ்ரைனும் அமீரகத்தை பின் தொடரும் என அப்போது கூறப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் தனது மத்திய கிழக்கு அமைதி ஒப்பந்தத்தை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இஸ்ரேல் பாலத்தீன பிரச்சனையை தீர்க்கும் நோக்குடன் இதனை அவர் வெளியிட்டார்.

இந்நிலையில், இஸ்ரேலை அங்கீகரிக்கும் நான்காவது அரபு நாடாகிறது பஹ்ரைன்

இஸ்ரேல் என்ற நாடு 1948இல் தோன்றியதிலிருந்து இதுவரை எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மூன்று அரபு நாடுகள் அதனை அங்கீகரித்து இருந்தன.

மற்றொரு அரபு நாடுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பது உற்சாகம் தருவதாக கூறுகிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ.

"இது அமைதியின் புதிய சகாப்தம். அமைதிக்கான அமைதி. பொருளாதாரத்திற்கான பொருளாதாரம். நாங்கள் அமைதியில் பல ஆண்டுகளாக முதலீடு செய்தோம். இப்போது அமைதி நம் மீது முதலீடு செய்கிறது" என அவர் கூறி உள்ளார்.

நமது இரண்டு கூட்டாளிகள் ஓரு அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

மூன்று தலைவர்கள், அதாவது அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, பஹ்ரைன் அரசர் ஹமாத் பின் இசா பின் சல்மான் அல் கலிஃபா ஆகியோரின் கூட்டறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் ஸ்திரதன்மையை, பாதுகாப்பை, வளத்தை அந்த பகுதியில் உறுதி செய்யும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் இந்த உடன்படிக்கையை வரவேற்றுள்ளது.

அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் "மற்றொரு குறிப்பிடத்தக்க மற்றும் வரலாற்று சாதனை” என இதனை வர்ணித்துள்ளது.

ஆனால் பாலத்தீனம் இதன் காரணமாக கோபமடைந்துள்ளது.

பாலத்தீன மக்களின் தேசிய உரிமைக்கு இது குந்தகம் விளைவிக்கும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலத்தீனியர்கள் நீண்டகாலமாக ஒருங்கிணைந்த அரபு நடவடிக்கையை நம்பி இருந்தனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியிலிருந்து இஸ்ரேலின் வெளியேற்றத்தையும், பாலத்தீன அரசிற்கான அங்கீகாரத்தையும் அவர்கள் நம்பி இருந்தனர்.

பாலத்தீனயத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தம் இது என காஸாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் கூறி உள்ளது.

இது துரோகம் என இரான் நாடாளுமன்றத்தின் சர்வதேச விவகாரங்களின் சிறப்பு ஆலோசகர் ஹூசைன் அமீர் கூறி உள்ளார்.

கடந்த மாதம் அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் விமான சேவை தொடங்கப்பட்டது. இது இருதரப்பு உறவில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்பட்டது.

வரும் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரக ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக கையெழுத்திடப்பட உள்ளது.

அரபு லீகில் உள்ள மேற்கு ஆப்ரிக்க நாடான மோரிடேனிடா, 1999 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் ராஜாங்க உறவை ஏற்படுத்தியது, ஆனால் 2010 ஆம் அந்த உறவு துண்டிக்கப்பட்டது.

2 கருத்துரைகள்:

One by one the Arab Monarchs in the Gulf have started BETRAYING the Palestinians by Embracing the zionist MONSTER. DISGUSTING. SIMPLY DISGUSTING. Obviously, these SHAMELESS and CROOKED Gulf rulers have NO Fear of Allah (Swt) to whom they will have to answer one day.

I posted a comment last night a little after 10.00pm. It is almost 14 hours since I posted the comment and it is yet to be published. I wonder why.

Post a comment