September 22, 2020

கஞ்சா உற்பத்திக்கு சட்டபூர்வ, அனுமதி வழங்காதீர்கள் - கர்தினால் மெல்கம் ரஞ்சித்

(நா.தனுஜா)

மருத்துவத்தேவைகளுக்காக கஞ்சாவை உபயோகிக்க முடியும் என்பதால் அதனை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றவாறான கருத்துக்கள் அண்மைக்காலத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏனைய போதைப்பொருட்களைப் போன்றே இதுவும் நாட்டின் இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்தை முற்றாக அழித்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகங்களுக்கும் இடமில்லை. ஆகவே கஞ்சா உற்பத்திக்கு சட்டபூர்வ அனுமதியை வழங்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ மேற்கொள்ளக்கூடாது என்று மெல்கம் கார்டினல் ரஞ்சித் வலியுறுத்தினார்.

கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப்பொருட்களும் நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் கொழும்பிலுள்ள அனைத்து இலங்கை பௌத்த மகா சம்மேளன கட்டடத்தொகுதியில் இன்று செவ்வாய்கிழமை  விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் பேராசிரியர் இத்தாபானே தம்மாலங்கார தேரர், அபத்பேரியே விமலஞான தேரர் மற்றும் திருகோணமலை ஆனந்த தேரர், பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் உளநலம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்களுமான அனுலா விஜயசுந்தர, மகேஷ் ராஜசூரிய, மனோஜ் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர்.

போதைப்பொருள் ஒழிப்பின் முக்கியத்துவம் பற்றிக் கருத்து வெளியிட்ட இத்தாபானே தம்மாலங்கார தேரர் மேலும் கூறியதாவது:

எமது நாட்டிலிருந்து போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாதொழிப்பதை இலக்காகக்கொண்டு நாம் நீண்டகாலமாக செயற்பட்டு வருகின்றோம். அந்தவகையில் போதைப்பொருளை ஒழிப்பதற்கான செயலணியை மேலும் வலுப்படுத்திய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு முதலில் நன்றிகூறுகின்றோம். அதேவேளை தற்போது போதைப்பொருளுக்கு அடுத்தபடியாக கஞ்சா பயன்பாடு வெகுவாக அதிகரித்து வருகின்றது. அதனை முற்றாக இல்லாதொழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.நாட்டைப் பொறுத்தவரையில் கஞ்சா பயன்பாடு என்பது தனிநபர் பிரச்சினை என்ற நிலையிலிருந்து ஒரு தேசிய பிரச்சினையாக மாற்றமடைந்திருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அவ்வாறு செய்யாதபட்சத்தில், இது நாடு முழுவதிலும் பரவி, எமது இளைய தலைமுறையினரை வெகுவாகப் பாதிக்கும் நிலை உருவாகும் என்றார்.

அவரையடுத்து இதுகுறித்து பேசிய  மெல்கம்  கார்டினல் ரஞ்சித் கூறியதாவது:

கஞ்சாவை மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்த முடியும் என்பதால், கஞ்சா உற்பத்திக்கு சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றவாறான கருத்துக்கள் அண்மைக்காலத்தில் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. நாட்டிலிருந்து போதைப்பொருள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று அனைத்துத்தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். ஆனால் அதனையொத்த, பயன்படுத்துவோருக்கு தீங்கேற்படுத்தக்கூடிய மற்றொரு பொருளாக இருக்கின்ற கஞ்சா பாவனையை ஏன் ஊக்குவிக்கின்றார்கள் என்ற விசனமே இதனால் ஏற்பட்டது.

இது எமது நாட்டின் இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்தை சீரழிக்கின்ற நடவடிக்கையாகவே அமையும். எனவே போதைப்பொருட்களைப் போன்றே கஞ்சா பாவனையும் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். பெரும் நாசத்தை ஏற்படுத்தும் ஒரு பொருளை இல்லாமல் செய்துவிட்டு, அதேபோன்ற மற்றொரு பொருளின் உற்பத்தியை ஒருபோதும் ஊக்குவிக்கக் கூடாது. ஆகவே கஞ்சா உற்பத்திக்கு சட்டபூர்வ அனுமதியை வழங்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவேண்டாம் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமரை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறோம்.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாட்டினால் எமது எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுவதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே அதற்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கத்தக்க அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். எமது அடுத்த சந்ததியினரின் எதிர்காலத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்றார். 

1 கருத்துரைகள்:

வாழ்வை வளப்படுத்தக்கூடிய இக்கருத்துக்களுக்குச் சொந்தக்காரர்களே தேசத்துக்குத் தலைமை தாங்கவும் தகுதி பெற்றவர்கள்.

Post a comment