Header Ads



உயிரிழந்தவர் உயிருடன் இருப்பாதாக கூறி, உறவினர்கள் வைத்தியசாலையில் முரண்பாடு


நெல்லியடியில் கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் உயிருடன்தான் உள்ளார் என்று உறவினர்கள் முரண்பட்டதால் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் குழப்பநிலை ஏற்பட்டது.

எனினும் பொலிஸாரின் தலையீட்டால் சுமுகநிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. நெல்லியடி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களின் பொருட்கள் சுமக்கும் தொழிலாளியான இராஜ கிராமத்தைச் சேர்ந்த நாகராசா நரேஸ் (வயது -26) என்பவரே உயிரிழந்தவராவார்.

“குடும்பத்தலைவர் இன்று மாலை தொழிலில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மயக்கமடைந்து சரிந்தார். உடனடியாக அவர் அம்புயூலன்ஸ் வண்டியில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

குடும்பத்தலைவர் ஏற்கனவே  உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை அனுமதிப்பிரிவு மருத்துவர் அறிக்கையிட்டார். அதனால் உயிரிழந்தவரின் சடலம் சவ அறையில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் உறவினர்கள், சடலத்தைப் பார்வையிட்டு அவர் உயிருடன்தான் உள்ளார் என்று தெரிவித்து சடலத்தை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்று சிகிச்சையளிக்குமாறு கோரினர்.

அதனால் மருத்துவர்கள் பரிசோதனையை செய்தனர். எனினும் குறித்த நபர் உயிரிழந்தமையை மருத்துவர்கள் மீளவும் உறுதி செய்தனர். அதனால் உறவினர்கள் மருத்துவ சேவையாளர்களுடன் முரண்பட்டதால் வைத்தியசாலையில் குழப்பநிலை காணப்பட்டது.

எனினும் பொலிஸாரின் வருகையை அடுத்து சுமுகநிலை ஏற்பட்டது” என்று மந்திகை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர், மருத்துவர் கமலநாதன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.