Header Ads



கிழக்கு தொல்லியல் செயலணிக்கு பொருத்தமான தமிழர், முஸ்லீம் பிரதிநிதிகளை கண்டுபிடிக்க முடியவில்லை


கிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்வது சவாலான விடயமாக இருக்கின்றது என்று தனது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த கால அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளும் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 

தமிழ், முஸ்லீம் மக்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் குறித்த ஜனாதிபதி செயலணிக்கு பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், பொருத்தமான இருவரை சிபாரிசு செய்யுமாறு அமைச்சரிடம் தெரிவித்திருந்தனர். 

எனினும், இதுவரை குறித்த இருவர் நியமிக்கப்படாமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு காலத்தில் புத்திஜீவிகளினால் நிரம்பியவர்களாக நம்மவர்கள் இருந்தனர். கடந்த காலத்தில் தமிழர்களின் தலைமைகள் என்று கூறிக்கொண்டவர்களின் விவேகமற்ற வீரத்தின் வெளிப்பாடுகள் ஏற்படுத்திய விளைவுகளில் ஒன்றாக புத்திஜீவிகளுக்கும் தற்போது நம்மத்தியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.. 

கடந்த கால ஆயுதச் செயற்பாடுகளினால் பல புத்திஜீவிகள் விவேகமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அதன் காரணமாக பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். எஞ்சியிருப்பவர்களும் சமூகம் சார் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். 

இவ்வாறான காரணங்களினால் குறித்த செயலணிக்கு பொருத்தமான தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதநிதிகளை நியமிக்க முடியாமல் இருக்கின்றது. எனினும் தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால் விரைவில் இருவர் நியமிக்கப்படுவார்கள்´ என்று தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.