Header Ads



எண்ணெய் கப்பலால் ஏற்படக்கூடிய பாதிப்பை தடுக்க, உடன் நடவடிக்கைகளை எடுங்கள் - பிரதமர் அவசர உத்தரவு


விபத்திற்குள்ளாகியுள்ள MT – New Diamond எண்ணெய் கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

24 மணி நேரமும் செயற்படக்கூடிய ஒரு கூட்டு நடவடிக்கையின் ஊடாக விபத்திற்குள்ளான கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலையீட்டுடனும் சம்பவ முகாமைத்துவ குழு, கடல்வள பாதுகாப்பு மற்றும் கடல் வள முகாமைத்துவ திணைக்களம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக அதிகார சபை, சுற்றாடல் அதிகாரசபை, கடற்றொழில் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் ஒன்றிணைந்து விபத்திற்குள்ளான கப்பலின் தீயை கட்டுப்படுத்துவதற்கும், கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைப்பதற்கான நடவடிக்கைகளிலும் மேற்பார்வை செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளன.

குவைத் மீனா அல் அஹமதியா துறைமுகத்திலிருந்து இந்தியாவின் ஒடிசா பிராந்தியத்தின் பெரடிப் துறைமுகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பனாமா இராஜ்ஜியத்திற்கு சொந்தமான MT – New Diamond எண்ணெய் கப்பலில் இலங்கைக்கு 38 கடல் மைல் தொலைவிலுள்ள சங்கமன்கண்டியை அண்மித்த பகுதியில் வைத்து, 2020 செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி முற்பகல் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. குறித்த கப்பலில் 270,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.