Header Ads



பயங்கரவாதி சஹ்ரான் விவகாரம், மைத்திரிபாலவின் கூற்றை நிராகரித்தார் நிலந்த ஜயவர்தன


தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் ஒரு பயங்கரவாதி என்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் தேசிய பாதுகாப்பு சபைக்கு தெரிவிக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய தகவலை அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் நிலந்த ஜயவர்தன நிராகரித்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் நேற்று கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் சட்டத்தரணியான சாமில் பெரேராவின் குறுக்கு விசாரணையின்போது நிலந்த ஜயவர்த்தன தமது நிராகரிப்பை வெளியிட்டார்.


தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்போது முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, சஹ்ரான் ஹாஷிமை ஒரு தீவிரவாதி என்று மட்டுமே கூறப்பட்டதாகவும், பயங்கரவாதி அல்ல என்றும் கூறினார் என்று சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டினார்.


நேர்காணலின் காணொளிக் காட்சியையும் காட்டி, முன்னாள் ஜனாதிபதி கூறிய கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று சாட்சியை ஷாமில் பெரேரா கேட்டார். இதற்கு பதிலளித்த நிலந்த ஜெயவர்த்தன,


சஹ்ரான், ஐஎஸ்.ஐஎஸ் சிந்தாந்தத்தை இலங்கையில் நிறுவ முயற்சிப்பதாகவும் அவரின் செயற்பாடுகள் நாட்டின் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் பாரிய அச்சத்தை தோற்றுவித்துள்ளதாகவும் பாதுகாப்பு சபை கூட்டங்களின்போது தமது தரப்பு தெரிவித்துள்ளது.


எனவே மைத்திரிபாலவின் கூற்றை ஏற்கமுடியாது என்றும் சாட்சியான நிலந்த ஜயவர்த்தன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.