September 18, 2020

ஹிஜாப் அணிந்து பளு தூக்கும், வீராங்கனை மஜீஸியா பானு


எம்.ஏ.எம். அஹ்ஸன்

பளு தூக்குதல், குத்துச்சண்டை மற்றும் உடற்கட்டமைப்பு போன்ற விளையாட்டுக்களில் எமது சமூகத்தைச் சார்ந்த பெண்கள் ஆர்வம்காட்டுவதில்லை. அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி வீர நடை போடும் இந்தியாவின் கேரள முஸ்லிம் பெண் ஒருவரைத்தான் நீங்கள் இன்று சந்திக்கப் போகிறீர்கள். ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப்பார்க்க வைத்த ஹிஜாப் அணிந்த பளு தூக்கும் வீராங்கனை மஜீஸியா பானுவின் கதை இதோ…

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ஓர்க்கட்டேரி என்ற சிறிய நகரில் பிறந்தவர்தான் மஜீஸியா. சிறுவயதில் இருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய இவர் விளையாட்டிலும் தன்னை அசைக்க யாருமில்லை என்பதை தனது பாடசாலை நாட்கள் தொடக்கம் நிரூபித்தவர்.

மஜீஸியா கேரள மட்டத்திலும் அகில இந்திய மட்டத்திலும் பளு தூக்கும் போட்டிகளில் தங்கங்களை வென்ற பின்னர் 2017 ஆம் ஆண்டில் முதல்முறையாக ஆசிய பளு தூக்கும் சர்வதேச போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார். அதே வருடத்தில் இந்தியாவில் இடம்பெற்ற சர்வதேச போட்டியொன்றிலும் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். 2018 இல் மொஸ்கோ நகரில் இடம்பெற்ற பளு தூக்கும் உலகக்கோப்பை போட்டியில் தனது முதல் தங்கத்தை இவர் பதிவு செய்தார். அது மாத்திரமின்றி மொஸ்கோவில் சிறந்த பளு தூக்கும் வீராங்கனை என்ற விருதையும் தன்வசப்படுத்தினார். கல்வித் துறையிலும் சிறந்து விளங்கும் இவர் ஒரு பல் வைத்தியரும் ஆவார்.


தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் ஹிஜாப் அணிந்து போட்டிகளில் பங்குபெறும்போது பல்வேறு கேலிகளையும் கிண்டல்களையும் இவர் சந்திந்தார். தனது சமூகம் மற்றும் உறவினர்கள் மத்தியில் நிலவிய பழைமைவாத கொள்கைகளே  தன்னை காயப்படுத்தியது எனவும் அவர்கள் தவிர பிற சமூகத்தினர் தன்னை கேலி, கிண்டல் செய்யும்போது அதையொரு புன்னகையுடன் கடந்து சென்றதாக மஜீஸியா தெரிவிக்கின்றார்.

ஹிஜாப் அணிந்து போட்டியில் பங்கேற்பதை ஏற்றுக்கொள்ளாத குறிப்பிட்ட ஒரு தரப்பினர் தன்னைப் பார்த்து ஒருமுறை “நீ சந்திரனில் இருந்து வந்தவளா” என்று கேட்டதாக மஜீஸியா தெரிவித்திருந்தார். ஹிஜாபுடன் இந்த உயரத்திற்கு வந்த சவால்மிக்க பாதையை எடுத்துக்காட்டுவதற்கு அவர் சொன்ன ஒரு உதாரணம்தான் அது.

மஜீஸியா ஒரே நேரத்தில் 370 கிலோகிராம் எடையை தூக்கக்கூடிய வலிமை படைத்தவர் ஆவார். தனக்கென ஒரு அடையாளம் இல்லாத காலத்தில் குத்துச்சண்டை மற்றும் பளு தூக்கும் வகுப்புகளில் பங்குபற்றுவதை அவரது குடும்பத்தினரே வெறுத்தனர். அவர்கள் பக்கத்தில் இருந்த நியாயத்தை அடிப்படையாக வைத்து அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். “சமயத்தில் அனுமதிக்காத விடயம் ஒன்றை செய்கிறாய்” என்ற பேச்சு அவரை அதிகம் நோகடித்தது. உறவுகளுக்கு மத்தியில் தனது நோக்கத்திற்கு அங்கீகாரம் கிடைக்காத மஜீஸியா மிகுந்த வருத்தத்துடன் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் ஸ்தம்பிதமான தருணங்கள் உண்டு.

இஸ்லாமிய பாடசாலை ஒன்றிலேயே மஜீஸியா படித்தார். பழைமைவாத கொள்கைகள் அங்கேயும் இருந்தன. உறவினர்கள் கல்விச்சூழல் என எதுவுமே மஜீஸியாவின் திறமைக்கான தீனியாக இருக்கவில்லை. இந்த நிலைமைக்கு மத்தியிலும் தன்னை ஆதரித்த பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், பயிற்சி ஆசிரியர்கள் என்ற ஒன்று சிறிய வட்டத்தை உலகமாக மாற்றி இன்று ஹிஜாபுடன் மிகவும் பெருமையாக மிடுக்குடன் தன்னைத் திரும்பிப்பார்க்கச் செய்திருக்கிறார்.

எத்தனை பேர் தன்னை எதிர்த்தாலும் தன் மனம் சொல்லும் விடயத்தை அச்சொட்டாக பின்பற்றுவது மஜீஸியாவின் கொள்கையாகும். தனது இலட்சியப்பாதையில் வெற்றியடைய வேண்டும் என்றால் அடுத்தவர்களின் விமர்சனங்களை கேட்காமல் தன் மனம் சொல்வதை கேட்க வேண்டும் என்பதை தனது அனுபவப் பாடமாக அவர் சொல்கிறார். அவரது கொள்கைகளின் முடிவில் இப்போது குத்துச்சண்டை பளு தூக்குதல் மற்றும் உடற்கட்டமைப்பு போட்டிகளில் கலந்துகொண்டு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கின்றார்.

விளையாட்டுத்துறையில் பின்தங்கிய பகுதியில் பிறந்த மஜீஸியா, மேரி கொம் மற்றும் செரீனா வில்லியம்ஸ் போன்றோரின் காணொலிகளால் அதிகம் ஈர்க்கப்பட்டார். “செரீனா வில்லியம்ஸ் மற்றும் மேரி கொம் ஆகியோரின் காணொலிகளை நான் பார்த்தேன். இரண்டு சக்திவாய்ந்த பெண்கள் தமக்கென தனித்துவம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் போல நானும் எனது சுயத்தை விட்டுக்கொடுக்காமல் எனக்கான தனித்துவம் ஒன்றை உருவாக்க விரும்பினேன்” என மஜீஸியா கூறுகின்றார்.

தனக்குள் மறைந்திருந்த வலிமையை அவர் வெளிப்படுத்தத் தொடங்கினார். “நான் பயிற்சி செய்யத் தொடங்கியதும் எனது திறமைகள் மேம்படுவதை உணர்ந்தேன். அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான நம்பிக்கையைப் பெற்றேன். இடையில் நான் மல்யுத்த போட்டிக்கும் முயற்சித்தேன்” என்று மஜீஸியா கூறுகிறார்.

பளு தூக்கும் போட்டிகளின் போது ஹிஜாப் அணிவதில் பெருமளவில் இடையூறுகளை அவர் சந்திக்கவில்லை. என்றாலும் உடற்கட்டமைப்பு போட்டிகளில் பங்கேற்பதற்காக போராட வேண்டிய சந்தர்ப்பங்கள் இருந்ததாக மஜீஸியா கூறுகின்றார். “நீங்கள் சர்வதேச போட்டிகளைப் பார்த்தால் பங்கேற்பாளர்கள் பிகினிகளில் வரிசையில் நிற்கிறார்கள். இந்தப்போட்டி உண்மையில் உடல் மற்றும் தசைகளின் அதிகபட்ச வெளிப்பாட்டுடன் தொடர்புடையதுதான். ஆனால் நடுவர்கள் எதிர்பார்ப்பது போட்டியாளர்களின் உடற்தகுதியைத்தான். இது ஒரு தோல் அழகைக் காட்டும் நிகழ்ச்சி அல்ல!” என்று மஜீஸியா தெரிவிக்கின்றார்.

ஒரு பெண் என்பதை தாண்டி ஹிஜாப் அணிந்த பெண்ணாக தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பது இவருக்கு சவாலாக இருந்தது. பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோருவதற்கே அதிக காலம் நகர்ந்தது. விளையாட்டுத்துறையில் தனது அடுத்த தலைமுறையினரும் இதுபோல ஹிஜாபுக்காக பரிந்து பேசும் திறன் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதே மஜீஸியாவின் வேண்டுகோள்

ஒருவரின் உடற்பயிற்சி நிலைகளில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது என்று மஜீஸியா நம்புகிறார். “நான் அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் உடையவள். அதே நேரத்தில், நான் நிறைய வேலைகளும் செய்கிறேன். நான் விரும்பியதை பொதுவாக சாப்பிட முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் போட்டிகளுக்குத் தயாராகும் போது கண்டிப்பான உணவு முறையைப் பின்பற்றுகிறேன். இந்த சந்தர்ப்பங்களில் எனது கவனம் புரதச்சத்து நிறைந்த, சத்தான உணவுக்கு மாறுகிறது” என்று அவர் கூறுகிறார்.

பல் அறுவை சிகிச்சை கற்கையை கற்பதற்காக கோழிக்கோடுக்கு இவர் தனது ஊரில் இருந்து தினமும் சென்று வந்தார். 2016 ஆம் ஆண்டின் பல்வேறு தருணங்களில் தனது கல்வி நடவடிக்கைகளால் விளையாட்டு சார்ந்து வந்த பல வாய்ப்புகளை மஜீஸியா தவறவிட்டார். தினமும் கல்விக்காக 120 கிலோமீற்றர் பயணம் செய்ய வேண்டிய நிலைமை இருந்தமையே இதற்கு காரணம்.

மேலும் ரமழான் மாத நோன்பு தனது உடற்பயிற்சி செயற்பாடுகளுக்கு தடையாக இருக்கவில்லை என்று மஜீஸியா கூறுகிறார். “ஆரம்பத்தில், நான் எவ்வாறு செயற்படுவேன் என்றும் என்னால் ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்றும் கவலையாக இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் சந்தேகங்கள் நீக்கப்பட்டன. மாலையில் நோன்பு திறந்த பின்னரான நேரம் உடற்பயிற்சி செய்வதற்கு மிகச் சிறந்த நேரமாக நான் உணர்கிறேன்” என அவர் தெரிவிப்பதுடன் நோன்பு தனது உள்ளத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவியதாகவும் தெரிவிக்கின்றார்.

மஜீஸியா விளையாட்டுத் துறையில் முன்னேற நினைக்கும் முஸ்லிம் பெண்களுக்கு மன ரீதியான பலத்தை வழங்குவதில் அதிகம் பங்களிக்கின்றார். இரு வேறுபட்ட தரப்பினரை ஒரே நேரத்தில் திருப்திப்படுத்தி கடந்து செல்வது என்பது சாத்தியமற்றது என்ற யதார்த்தத்தை சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் உணர வைக்கும் நோக்கில் அவர் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். ஓர்க்கட்டேரி மற்றும் கோழிக்கோடு போன்ற இடங்களை மையமாகக் கொண்டு இவர் செயற்படுகின்றார்.

பளு தூக்கும் போட்டிகளில் பங்குபற்றுவதால் பெண்களுக்கு வரும் விமர்சனங்களை சவால்களாக எடுத்துக்கொள்வதாக மஜீஸியா தெரிவிக்கிறார். தனது குடும்பம் தனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகக் கூறுகிறார். தனது தாயை தனது “ஆதரவின் மிகப்பெரிய தூண்” என்று வர்ணிக்கிறார்.

மஜீஸியா தன்னை ஹிஜாப் அடிமைப்படுத்துவதாக உணரவில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஹிஜாப் அணிவது தனது உரிமை என்பதை விட்டுக்கொடுக்காமல் பன்மைத்துவ சூழலில் தனித்து ஒரு பெண்ணாக விளையாட்டுத் துறையில் மஜீஸியா சாதனை படைத்துள்ளார். விளையாட்டுத்துறையில் ஈடுபடுவதால் பெண்கள் எதிர்கொள்ளும் விமர்சனங்களுக்கு எதிராகவும் இவர் குரல் கொடுத்து வருகின்றார். கேரளாவில் ஆடை சுதந்திரம் பற்றி பேசும் ஒரு சமூக ஆர்வலராகவும் இவர் இருக்கிறார். – Vidivelli


1 கருத்துரைகள்:

Shame of her... Leaning Martial arts is very good.
but not weight lifting /Body building... Its mans sport not for Woman.. Now she looks like man. In the competition you can see her like man..

Post a comment