September 27, 2020

பாதாளத்தை நோக்கிய, இலங்கையின் பயணம் - விக்டர் ஐவன்


- தமிழ் வடிவம் 1; ஏ.ஸீ.எம். இனாயத்துல்லாஹ் -

இலங்கை சரிவைநோக்கி வேகமாகச் சென்று  இறுதியில் அராஜகத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு நாடாக மாறும் என்பது எனது நீண்ட கால அவதானிப்பாகும்.  உண்மையில் அது எனது விருப்பம் அல்ல,  மாறாக, அது நாட்டின் விவகாரங்களை ஆராய்வதன் மூலம் நான் மேற்கொண்ட ஒரு அவதானிப்பாகும்.

இந்த நாட்டில் இன, சாதி மற்றும் மத வேறுபாடுகள்  அவ்வப் போது தீர்க்கப்படாமல்  அவை அப்படியே  அனுமதிக்கப்பட்டன. இதன் விளைவாக ஏற்பட்ட மோதல்கள், முரண்பாடுகளைத்  தொடர்ந்து நாம் பல உயிர்களை இழந்திருக்கினறோம்.  கோடானகோடி நாட்டின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன, நாட்டின் முதலீட்டு திறனை  அவை மேலும் பலவீனப்படுத்தின. 1978  ஆண்டிலிருந்தே திறமையானவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். கொள்ளையடிப்பது என்பது இலங்கை அரசாட்சியின்  வழமையான  ஒரு அம்சமாக மாறியது, இது அரசாங்கத்தினதும் அனைத்து அரசு நிறுவனங்களிலும் முறையான ஊழல், நாட்டுச்சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்கு  வழிவகுத்தது.  அந்த வகையில் எந்தவொரு பாரதூரமான குற்றங்களையும் சரிசெய்து திருந்துவதற்குத் தயாராக இல்லாத, கல்லெறிந்து கொல்லப்படுவதற்கு காத்திருக்கும்  முட்டாள்தனமாக ஒரு  நாடாக இலங்கையை நான் புரிந்துகொண்டேன்.

உண்மையில் எனது அவதானிப்பு என்னவென்றால், இந்த போக்கைத் தொடர  ஒருபோதும் அனுமதிக்க முடியாது,  இதே போக்கு தொடர்ந்தால், ஒரு கட்டத்தில் ஒரு பயங்கரமான சரிவை நோக்கி இலங்கை தள்ளப்படுவதும் தவிர்க்க முடியாது.  எனது இந்த அவதானிப்பு என் மனதில் ஒரு சிக்கலான கேள்வியாக மாறியது, அதிலிருந்து என் மனதை விடுவிக்க 'இலங்கையைக்  காப்பாற்ற' என்ற புத்தகத்தை  2011 ல் எழுத வேண்டியிருந்தது. அந்த புத்தகம் நியாயமாக விற்பனையாகிய போதிலும், அதனை வாசித்த வாசகர்கள் இலங்கைக்கு என்ன நடக்கப் போகிறது என்று  அதிர்ச்சியடைந்தார்களா என்பது எனக்குத் தெரியாது.

ஒரு சகாப்தத்தின் முடிவு

இலங்கை பற்றிய எனது அவதானிப்பை நான் வெளியிட்ட பிறகு, நாட்டில் என்ன நடக்கின்றது என்பதைப் பார்க்கும்  ஒரு  அவதானிப்புக் கொள்கையை நான் பின்பற்ற வேண்டியிருந்தது, மேலும் எனது இந்த  அவதானிப்பு உண்மையானதா எனவும் விமர்சன ரீதியாகவும். நோக்கவேண்டியிருந்தது.                            இந்த வகையில் எனது அவதானிப்புகள் நிஜமாகும் வகையில்  விடயங்கள் உண்மையில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. தற்போது எனது அவதானிப்பு மிகப் பெரிய அளவிற்கு உண்மையாகிவிட்டது என என்னால் கூற முடியும்.

எனது கருத்துப்படி, நாடு பெரும் நெருக்கடியில் இருந்தபோது நடைபெற்ற இரண்டு தேர்தல்களில்மொட்டுக் கட்சி   பெரும்பான்மையைப்பெற்று வெற்றியீட்டியதன் மூலம், இலங்கையில் ஒரு அரசியல் சகாப்தம்   முடிவுக்கு வந்துவிட்டது எனக் கூறலாம். ஒரு கட்சியின் முடிவு அதன் முழு திறனை அனுபவித்து நீண்ட காலத்திற்குப் பிறகு ஏற்படவில்லை. மாறாக, மிகவிரைவிலேயே முடிவடைந்துவிட்டது. நிலைமைகளை முறையாகப்  பராமரிக்கத் தவறியதால் ஏற்பட்ட ஒரு அகால மரணம் என அதனைக் குறிப்பிடலாம்.

நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கை பெரும்  அதள பாதாளத்தை நோக்கிச் செல்வதோடு, தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எதிர்க்கட்சி அழிக்கப்படும் ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது எனக் கூறலாம். நாட்டின் மிகப்பெரிய கட்சியான ஐதேக மீது ஏற்பட்ட பேரழிவு நம்பமுடியாதது. நிகழ்ந்த அரசியல் மாற்றம் எதிர்க்கட்சி இயக்கங்களை அழித்து ராஜபக்ச இயக்கத்திற்கு ஒரு வலுவான இருப்பைக் கொடுத்ததுள்ளதாகத் தெரிகின்றது, ஆனால், அதனை  நான் பார்க்கும் கோணம் வித்தியாசமானது.

என்ன நடைபெறும்!

அந்த வகையில், எதிர்க்கட்சிகளின்  இயக்கமும் அவற்றின் இருப்பும் அழித்துவிட்டது என்றும் கூறலாம். அவர்கள் மீண்டும் உற்சாகத்துடன் அவர்களுடைய கட்சியைக் கட்டியெழுப்புவதில் நம்பிக்கையற்ற  ஒரு பரிதாபகரமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனால், இரண்டு தேர்தல்களிலும் ராஜபக்சர்கள் மகத்தான வெற்றியைப் பெற்றிருந்தாலும், அது ஒரு நீடித்த அல்லது நிரந்தர வெற்றியாக  ஒருபோதும் கருத முடியாது. அவர்களுக்கு கிடைத்திருப்பது பராமரிக்க மிகவும்  எளிதான ஒரு நாடு அல்ல,  அதற்கு மாற்றமாக அரசாங்கத்தின் நற்பெயரை அழிக்கும் குழப்பமான நிலையில் உள்ள ஒரு நாடு அவர்கள் கையில் கிடைத்திருக்கின்றது.. தற்போது நிர்வகிக்கக்கூடிய நிலையில் இந்த நாடு இல்லை, அதற்கு மாற்றமாக நிர்வாகத்தில் தலையிடுவோர் நாட்டை அழித்து, அதனைக் குட்டிச் சுவராக்கும் நிலையில் தான் இருக்கின்றனர். ஒரு வலுவான இனவெறியை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கையாளும் ஒரு நபர் இந்த நெருக்கடியை ஒருபோதும் வெற்றிகரமாக நிர்வகிக்க முடியாது. அது ஜனாதிபதி பற்றிய மக்கள் நிலைப்பாட்டை மட்டுமன்றி, அரசாங்கத்தின் வெற்றிகரமான நிலைப்பாட்டையும்  முற்றாக அழித்துவிடும் எனக் கூறுவது  மிகப்பொருத்தமாக இருக்கும் என நான் நம்புகின்றேன்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு,   ஆடை ஏற்றுமதித் தொழில் மற்றும் உல்லாசப் பிரயாணத்துறை போன்றவை நாட்டில் உள்ள அந்நிய செலாவணியைச் சம்பாதிக்கும்  பிரதான வழிமுறைகளாகும். இந்த மூன்று துறைகளில் மாத்திரம் வேலையை இழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் பெரியது. சிலவேளை அது ஒரு மில்லியனையும் தாண்டக்கூடும். இந்த நிலைமையில்  இலங்கையின் படுகடன்களுக்கான   வட்டி உற்பட கொடுப்பனவுகளை மீளச் செலுத்துவதிலும் நாடு மற்றொரு பாரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அரசாங்கத்தின் நிர்வாகத்தை நடாத்திச் செல்ல  குறைந்தபட்சத் தேவையான செலவினங்களில் 25% சதவீதத்திற்கும் குறைவான தொகையையே அரசாங்கம் சம்பாதிக்கின்றது. இந்த நிலைமையில் அரசாங்கத்திற்கு தனது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் கடினமாகும். வணிக அடிப்படையில் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களுக்கான ஒரு தவணை வட்டி மற்றும் தவணைக்கட்டணங்களைக் கூட செலுத்த நாடு தவறியுள்ளது  இலங்கை  ஒரு   தோல்வியடைந்த நாடாக அறிவிக்கும் அபாயங்கள் வெகு தூரத்தில் இல்லை. அப்படியானால், நாடு எதிர்கொள்ள வேண்டிய நிலைமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

தூரநோக்கற்ற துர்ப்பாக்கியம்

இறக்குமதி செலவைக் குறைக்கும் நோக்கில் பல பொருட்களின் இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளது. அந்த நிலைமை பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கக்கூடும். வாகனங்களுக்கான உதிரி பாகங்களின்  இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது தொழில்துறை துறையிலும் போக்குவரத்துத் துறையிலும் பேரழிவைக் கொண்டுவரும். வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியது  எனக் கணிக்கப்பட்டால், சமூக- பொருளாதார, அரசியலில் அதன் தாக்கம் மிகவும் பாரதூரமானதாக அமையும்.

இந்த சிக்கலான நெருக்கடியை சமாளிக்க தேவையான நடைமுறை சார்ந்த நோக்கு அரசாங்கத்திற்கு இருப்பதாகத் தெரியவில்லை. போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் ஒரு திட்டம் மூலமாக அரசாங்கம் நெருக்கடிக்குச் செல்வதைத் தடுக்கலாம் என அரசாங்கம் சிந்திப்பதாகத் தெரிகின்றது. ஆனால் இந்த நடைமுறை 2010-2015  ஆண்டு காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய முறைமையாகும். பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயன்படுத்திய துரும்பும் அதுதான். இடைநிலை சிறு வர்த்தகங்களைப் பொறுத்தவரை  போதைப்பொருளைத்  தடுக்கும் செயன்முறை ஓரளவு பயன்படலாம், ஆனால் பெரிய அளவிலான  போதை வர்த்தக முயற்சிகளில் எந்த தாக்கத்தையும் அது  ஏற்படுத்தாது. அரசியல் செயல்பாடுகளுக்கான செலவத்தைக் கொட்டிச் செலவழிக்கும் முக்கிய தூண்களாக  பின்னணியில்  ​செயல்படுவது போதைப்பொருள் வியாபாரம் தான். பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் போராடும் திறமையோ ஆற்றலோ, அது பற்றிய தேவையோ அரசியல்வாதிகளுக்கு அறவே கிடையாது. 

அரசாங்கத்தின் நெருக்கடி

அரசாங்கம் எதிர்கொள்ளும் நெருக்கடியை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம். போட்டியின் முக்கியத்துவம் எப்போதுமே கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து அமையாது, ஆனால் அவர்களுக்கு அது வெற்றியுடன்  கிடைக்கும் கேக்கைப் போன்றதாகும். ஆனால் இந்த முறை ஆளும் கட்சி வெற்றியாக ஒரு கேக்கைப் பெற்றுக்கொண்டுள்ளது, ஆனால் அந்தக் கேக் சாப்பிட முடியாத நிலையில் இருக்கின்றது. ஆளும் கட்சியின் வெற்றியின் குழப்பம் அங்குதான் இருக்கின்றது.

தற்போது ஆளும் கட்சி அரசியல் ஆதிக்கத்தில் முழுமையான ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது. ஜனாதிபதிக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையில் பெரும் வீழ்ச்சிகள்  எதுவும ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் நாட்டில் உள்ள நெருக்கடி ஜனாதிபதியின் அதிர்ஷ்டத்தால் தீர்க்கப்படக்கூடிய நெருக்கடி அல்ல. நெருக்கடியின் தன்மையை பொதுமக்கள்  விளங்கிக்கொள்ள தொடங்கும் போது, அதன் அடக்குமுறையை  மக்கள் உணர ஆரம்பிக்கும்போது , ​​ஜனாதிபதி மீதும் அரசாங்கத்தின் மீதும்  மக்கள் வைத்துள்ள நம்பிக்கை ஆவியாகப் பறக்கும். அதே நேரத்தில், அரசாங்கத்தின் செயல்பாடுகள் செல்லாக் காசாக மாறி நாடு நலிவடைந்து அராஜகத்திற்குள் விழும்.


1 கருத்துரைகள்:

Superb! Mr.Victor kindly be safe and aware from tanker lorries in the street.!!

Post a comment