Header Ads



பிரேமலால் எனும் “ச்சொக்கா மல்லி”யும் மரணமும்

- மயில்வாகனம் திலகராஜ் -

இன்றைய நாளில் பேசுபொருளாகி இருக்கும் பிரேமலால் ஜயசேகர எனும் பாராளுமன்ற உறுப்பினரின் சத்தியபிரமாணம் குறித்த மாற்றுப்பார்வை இந்தப் பதிவு. எந்தவிதத்திலும் அந்த சத்தியபிரமாணத்தை சரி என சொல்வதல்ல. ஆனால், இந்த ஆட்சி முறைமையை விளங்கிக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பம்.

பிரேமலால் ஜயசேகரவை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அறிந்து கொண்டதே 2015 இல் இடம்பெற்ற அந்த சம்பவத்தின்போதுதான். அதன்பிறகு அவர் நேரடியாக அறிமுகமானது பாராளுமன்ற குழு அறையில். இறுதியாக நான் தலைவராக செயற்பட்ட “சுகாதாரம், நலனோம்பு, சமூக அபிவிருத்திசார்ந்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் (Sectoral Oversight Committee on Health, Welfare and Social Development) தலைவராக இருந்த, அந்தக் குழுவின் முதல் தலைவர் இந்த பிரேமலால் ஜயசேகர.

முறைப்படி எதிர்கட்சி வரிசைக்கு போகவேண்டிய அந்தப் பதவிக்கு அன்று வருகை தந்திருந்த எதிர்கட்சி உறுப்பினரான இவர் தெரிவு செய்யப்பட்டார். இந்தக் குழுவின் மேற்பார்வைக்கு உள்ளாகி இருந்த அமைச்சுகள் 1. சுகாதாரம் 2. தேசிய வீடமைப்பு 3.சமூக அபிவிருத்தி (சமுர்த்தி) 4.மலைநாட்டு புதிய கிராமங்கள் இதனோடு விடயதானத்துக்கு தொடர்பு என்றால் ஏனைய அமைச்சு விவகாரங்களும்.

இந்த விபரங்களை செயலாளர் (உத்தியோகத்தர்) அறிவித்ததும் அவர் அருகே அமர்ந்திருந்த பிரேமலால் என்காதில் சொன்னது “மேவா மட்ட ஹரியன்னே மச்சங். ஓயா கன்னக்கோ சபாபதி தூரய” (இந்த வேலை எனக்கு சரிவராது மச்சங். நீ தலைமைப் பதவியை பொறுப்பேற்கிறாயா?). சிங்களவர்கள் இந்த “மச்சங்” என்ற சொல்லை இலகுவாகவும் சரளமாகவும் பயன்படுத்துவார்கள். அது சகோதரா (Cousin)என்ற அர்த்தம்தான். ஆனால், அவர்கள் கையாளும்போது ஒரு நெருக்கம் தெரியும் அல்லது வந்துவிடும்.

அப்படி முதல் சந்திப்பிலேயே நெருக்கமானவர் இந்த பிரேமலால். அப்போதும் சிறையில் இருந்தே (இதே குற்றம்தான்) அதிக விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று பாராளுமன்றம் வந்திருந்த சந்தேகத்துக்குரிய குற்றவாளியான இவர் என்னிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது. “இந்தப் பதவி எதிர்கட்சி உறுப்பினர்க்கானது. எனவே நீதான் ஏற்கவேண்டும் மச்சங். நான் உனக்கு உதவுகிறேன்” என்றேன் நான். புன்னகையை உதிர்த்து எனது தோளில் தட்டிவிட்டு ஒத்துக் கொண்டார். இரண்டொரு கூட்டங்களுக்கு வந்தார். அருகில் இருந்து உதவினேன்.வராதபோது நான் Acting Chair ஆக இருந்தேன். அவ்வாறு செய்யுமாறு அவர் அழைப்பெடுத்துக் கேட்டுக் கொள்வார். (மச்சங் பாஷையில்) பின்னர் இராஜினாமாவே செய்துவிட்டார்.

அந்த குழுவுக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் வருவதாக இல்லை. இரத்தினபுரியின் இன்னொரு எம்பி ஏ.ஏ.விஜேதுங்க ஆளுங்கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்டபோதும் அவரும் “மேவா மட்ட ஹரியன்னே” தான். பிறகு கண்டி மாவட்ட எம்பி லக்கி ஜயவர்தன நியமிக்கப்பட்டார். 2019 இல் அவர் இராஜாங்க அமைச்சர் ஆனதும் அதுவரை பலதடவை Acting தலவராக செயற்பட்ட எனக்கு தலைவர் பதவி உத்தியோகபூர்வமாக கிடைத்தது. அதுவரை அந்தக்குழுவில் அமைக்கப்பட்ட உபகுழு ஒன்றின் தலவராக ( Sub Committee ) செயற்பட்டு ‘தோட்ட சுகாதார முறைமையை தேசியமயமாக்க’ கூட்டங்கள் நடாத்தி வந்தேன். அந்த அனுபவமும் அவ்வப்போதைய Acting அனுபவமும் தலைவரானதும் பல பணிகளை விரைவாக ஆற்ற உதவியது. (இதனை தனியாக பேசலாம்)

இப்படி ஏற்பட்ட நெருக்கம் இருக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் உத்தியோகபூர்வ சீன பயணத்தில் பிரேமலால் ஜயசேகரவும் இணைந்தார். இணைந்தவர் ஏனோ என்னுடன் அதிகமாகவே ஒட்டியிருந்தார். குழு அறை நெருக்கம் காரணமாக இருக்கலாம். (இந்தப் படமும் அதனை உறுதி செய்கிறது) பத்துநாட்கள் பயணம். நான்கு மாகாணங்களுக்கு சென்றோம். பலதையும் கற்றோம். ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகவும் முடிந்தது. பிரேமலால் உடன் பல விடயங்களைப் பேச முடிந்தது. இந்தக் கொலைக்குற்றச்சாட்டு தொடர்பிலும் கூட. அப்போதுதான் இவருக்கு “ச்சொக்கா மல்லி” எனும் செல்லப் பெயரும் உண்டு என அறியமுடிந்தது. ஊரில் எல்லோரும் அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள்.

இப்போது சீனா சென்ற குழுவினரும் “கோ … ச்சொக்கா” ( ச்சொக்கா எங்கே) என விளிக்க தொடங்கி இருந்தோம். நான் “ மச்சங் ச்சொக்கா” என அழைக்கப் பழகிவிட்டேன். பயணம் முடிய இரண்டொரு நாளைக்கு முன்பதாக ச்சொக்கா சோகமாக இருந்தார்.

“ஏன்? மச்சங் சீனாவை விட்டுப் போகிற கவலையா” என கிண்டல் செய்தேன்.

“இல்லை மச்சங். எப்போ ஊருக்கு போவம் என்ற கவலை.”

“ஹோம் சிக் – Home Sick ?”

“உண்மையில் சிக்தான்.எனக்கு உடம்புக்கு நல்லா இல்லை. அசதியாக .. தூக்க உணர்வாக ..உடம்பு வலியாக.. “

“சரி. இன்னும் 3 நாள்தானே.. பனடோல் போடு .. தைலம் பூசு” என நான் வழமையாக கொண்டுபோகும் first aid பையில் இருந்து எடுத்துக் கொடுத்து உதவினேன். இரவு நேரத்தில் உதவி ஏதும் தேவை எனில் அழைப்பு எடு என்றேன். அடுத்த நாள் அவர் நிலை இன்னும் மோசமானதை உணர்ந்தேன்.

2012 ல் தொழில் விடயமாக நான் சீனாவில் நின்றபோது இலங்கையில் ஒரு வயது மகள் ஓவியாவுக்கு வந்த வருத்ததின் அறிகுறிகள் எனக்கு இவரில் தெரிந்தது. அதனைக் கூறி அவரை அதைரியப்படுத்தாமல் அருகே இருந்து உதவினேன். அதற்கடுத்த நாள் நாடுதிரும்பும் பயணம். ஏறக்குறைய குடிபோதையில் தள்ளாடும் ஒருவரைப்போல வந்தார். அவர் குடித்திருக்கவில்லை. அவரது வருத்தம் உச்சத்தை அடைந்திருந்தது.

விமான நிலைய நடைமுறைகள் முடித்து எல்லோரும் வந்து கொண்டிருந்தோம். எனது கைப்பொதியில் ‘சீல்’ இல்லை என திரும்பி அந்த கவுண்டருக்கு போகும் வழியில் ச்சொக்கா எதிர்பட்டார். “நீ முன்ன போ .. நான் இந்த சீல் அடித்துக் கொண்டு வருகிறேன்” என சீனக்காரனை மனதில் திட்டிக் கொண்டு போனேன். திரும்பி வந்து விமானத்தில் ஏறியபோது “க்கோ ச்சொக்கா ?“ (ச்சொக்கா எங்கே ?) என்றார்கள் எல்லோரும் என்னிடம். “எனக்கு முன்னமே வந்துவிட்டானே” என அவன் தனியாக வந்ததை உணர்ந்து திரும்பவும் ஓடினேன். விமான ஊழியர்கள் Sir.. Sir .. எனக் கூப்பிடுவது மட்டும் காதில் கேட்டது. நான் போர்டிங் வாயிலை அடைந்தேன்.

தூரத்தே ச்சொக்கா வருவது கண்டு கடைசியாக விமானத்தில் ஏறுவதற்கு போர்டிங் பாஸ் உடைக்கும் இடத்தில் நின்று .. “ எனது நண்பர் வருகிறார்” என ஊழியர்களிடம் கூறினேன். தடுமாறி வந்தவர் சொன்ன செய்தி எனக்கு அதிர்ச்சி அளித்தது. “ மச்சங் .. மகே பாஸ்போர்ட்டெக்க நெத்திவெலாபங். மட்ட எவிதின்னத் அமாருய்” ( மச்சங். என்னுடைய கடவுச்சீட்டைக் காணவில்லை.என்னால் நடக்கவும் முடியவில்லை).

“ நீ இமிகிரேசன் பாஸ் பண்ணினாய்தானே”

“ஆம். அதற்கு பிறகு முடியாமல் ஓர் இடத்தில் உட்கார்ந்து இருந்தேன். அப்படியே எழும்பி வந்து இடையில் பார்க்கும்போது கையில் பாஸ்போர்ட் இல்லை”

நிற்க முடியாமல் என் தோளில் சாய்ந்தான் ச்சொக்கா.

“கவலைப்படாதே ..நான் இருக்கேன்.” அங்கிருந்த நாட்காலி ஒன்றைக் கேட்டு அவரை அமரவைத்துவிட்டு அதிகாரிகளுடன் பேசினேன். அவர்களோ .. “இவர்தான் கடைசி Pessanger .. இப்போது passport இல்லை என்றால் என்ன செய்வது. விமானம் தாமதமாகிறது. நீங்கள் உள்ளே போய்விட்டு வந்து நிற்கிறீர்கள். இதுவே முறை இல்லை. நீங்கள் விமானத்தில் ஏறுங்கள். நாங்கள் இவரை அடுத்த விமானத்தில் ஏற்றுகிறோம்”என்றார்கள்.

தொங்கிக் கிடந்த கழுத்தை உயர்த்தி என்னைப் பார்க்க முயன்றான் ச்சொக்கா. அவனது கண்கள் குளமாகி இருந்தன. கையில் சைகை காட்டினேன். நான் இருக்கிறேன் என மனதுக்குள் நினைத்தவனாக.

அதிகாரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசினேன். ஆனாலும், எனக்குத் தெரிந்த கொஞ்ச மென்டரின் பாஷை கைகொடுத்தது. நான் சீனாவுக்கு புதியவனல்ல என புரிந்து கொண்டார்கள். என்னுடைய passport ஐ காட்டினேன்.

“இவரை ஏற்றாமல் நானும் விமானம் ஏற மாட்டேன். சிறிது தாமதமானால் பெரிய பிரச்சினை இல்லை. நான் பலமுறை பயணித்து இருக்கிறேன். தாமதத்துக்கு பல காரணங்கள் சொல்லி மன்னிப்பு கேட்பார்கள். எனது நண்பர் “டெங்கி” காய்ச்சலினால் அவதியுறுகிறார். அவரை எப்படியாவது எங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்லவேண்டும். அவர் உட்கார்ந்த இடத்தில் பாஸ்போர்ட் விழுந்து கிடக்கலாம். அவரோடு என்னையும் அனுமதியுங்கள். தேடி பார்க்கிறோம். இந்தாருங்கள் எனது பாஸ்போர்ட்.”

ச்சொக்கா அதிர்ச்சியோடு என்னைப் பார்த்தான். “பயவென்ன எப்பா மச்சங். உம்பட்ட டெங்கு கியல மட்டய் செக்க” (பயப்படாதே.. மச்சங். உனக்கு டெங்கு என எனக்குத்தான் சந்தேகம்). 2003 ல் தெஹிவளை அறையில் தங்கி இருந்தபோது நண்பன் ருக்‌ஷானுக்கு டெங்கு வந்து அவன் இப்படி இருந்த நினைவு வந்தது.

அதிகாரிகளுக்கு ப்ரட்டோகோல் பிரச்சினை. அவர்களிடம் பேசிக்கொண்டே பாஸ்போர்ட்டை அவர்களிடம் வைத்துவிட்டு “அந்த உட்கார்ந்த இடத்தைக்காட்டு” என ச்சொக்காவை தோளில் தாங்கியவாறு உள்ளே நடக்க ஆரம்பித்தேன். Sir… Sir என எங்களைத் துரத்த ஆரம்பித்தார்கள். அப்போதே ஒரு விமான நிலையப் பெண் எங்கள் திசை நோக்கி ஓடி வந்தார். கையில் பாஸ்போர்ட்டுடன் !அப்பாடா…

(இவரை அறியாமல் உட்கார்ந்த இடத்தில் விழுந்து இருக்கிறது. அதனைக்கூட, கண்டெடுத்த சுத்தம் செய்வோர், மேலதிகாரிக்கு கொடுத்து அங்கு இங்குசுற்றி வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தது)

அதிகாரிகளிடம் மன்னிப்புக் கோரி நன்றியும் தெரிவித்து விமானம் ஏறியபோது எங்களது வருகைக்காக அது காத்திருந்தது.”மொக்கதபங் கரண்ணே உம்பலா தென்னா” (நீங்க ரெண்டுபேரும் என்னடா செய்றீங்க ) என ஏனைய உறுப்பினர்கள் எங்களைக் கிண்டல் செய்தனர். நடந்ததைச் சொன்னேன். ச்சொக்காவுக்கு சுகமில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். நான் டெங்கு என நான் சந்தேகித்ததும் எல்லோரும் பதட்டமானார்கள். இலங்கையில் இறங்கும்போது அம்புலன்ஸ் தயாராக இருந்தது.

அன்றே மரணத்தின் விளிம்புக்கு போன ச்சொக்கா மல்லி இன்று நிற்பதும் அதே விளிம்பில். அன்று நோய்க் காரணம். இன்று நீதிக் காரணம்.

எனக்கென்னவோ இரண்டு சந்தர்ப்பங்களிலும் மரணத்தை வெறுக்கிறேன். மரணத்தில் இருந்து மீள யாருக்குத்தான் விருப்பம் இல்லை. அதேபோல யாரையும் கொல்லவும் யாருக்கும் உரிமை இல்லை.

பிரேமலால் பதவி ஏற்க முடியுமா? என்ற கேள்வியை கடந்த வாரங்களில் ஊடக நண்பர்கள் கேட்டபோது, சட்டத்தில் வாய்ப்பு இருக்கிறது என்று பதில் அளித்தேன்.அப்போது சட்டமா அதிபர் திணைக்களம் முடியாது என்றே பதில் அளித்திருந்தது. இன்று நீதிமன்றம் முடியும் என அவரைச் சத்தியபிரமாணம் செய்ய அனுமதித்து இருக்கிறது.

இப்போது அந்த தீர்ப்பை விமர்சிக்கிறோம் என்றால் இவருக்கு மரண தண்டனை வழங்கிய தீர்ப்பை சரி என்கிறோமா?

சட்டமா அதிபர் திணைக்களம் அப்போது முடியாது என்பது எந்தச் சட்டத்தின்படி ?

நீதிமன்றம் இப்போது அனுமதி அளித்திருப்பது எந்தச் சட்டத்தின்படி ?

இதற்கு முன் இதே இரத்தினபுரி மாவட்டத்தில் இப்படியான கொலைகள் இடம்பெறவில்லையா? கொலை செய்யப்பட்டவர் , குற்றம் சுமத்தப்பட்டவர் அரசியல்வாதிகள். அதில் குற்றம் சாட்டப்பட்டவர் வழக்குகளை எதிர்கொண்டு மாவட்டம் மாறி தேர்தல் கேட்டு அமைச்சராகவில்லையா ?

பிந்துனுவெவ படுகொலை வழக்கில் மரணதண்டனை தீர்பளிக்கப்பட்ட ஒரு அதிகாரி மேன்முறையீட்டின் பின்னர் விடுதலை ஆகவில்லையா?

அடுத்து ஒருவர் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இல்லையா?

இப்படி பல கேள்விகளை முன்வைத்தால் பிரேமலால் ஜயசேக்கர என்ற தனிநபருடன் மாத்திரம் இந்தவிடயத்தைத் தொடர்பு படுத்தி பார்க்க முடியாது. ஜனநாயகத்தின் பெயரில் நாம் உருவாக்கிக் கொண்டுள்ள முறைமை பற்றி நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டாமா?

இந்தக் குற்றச்சாட்டு இருக்கத்தக்கதாகவே கடந்த 2015 லும், தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் 2020 லும் பிரேமலால் ஜயசேகரவுக்கு ஒரு லட்சத்தைத் தாண்டிய விருப்பு வாக்குகளை பெற்றுக் கொடுத்த இரத்தினபுரி மாவட்ட மக்கள் சொல்லும் செய்திதான் என்ன ?

இந்த சம்பவத்தை சரத் பொன்சேக்காவின் 2010 பாராளுமன்ற பிரவேசத்தை ஒப்பிட்டுபேசினால், 2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்து ஆறுமாதங்கள் 2010 ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு, மலையகம் என அவருக்கு வாரி வழங்கப்பட்ட வாக்குகளில் மக்கள் சொன்ன செய்தி என்ன ?

சீன பயண அனுபவத்தின் பின்னர் என்னோடு இன்னும் நெருக்கமாக கண்களில் நன்றி உணர்வோடு உறவாடும் நண்பன் என்பதற்காக இங்கே நான் ச்சொக்காவை நியாயப்படுத்தவில்லை.

மீண்டும் சொல்கிறேன்: இந்த பதிவு எந்தவிதத்திலும் பிரேமலால் ஜயசேக்கரவின் சத்தியபிரமாணத்தை சரி என சொல்வதல்ல. ஆனால், இந்த ஆட்சி முறைமையை விளங்கிக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பம்.

(கட்டுரையாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)


No comments

Powered by Blogger.