September 17, 2020

பாலை நிலத்தில் கண்ணீரின் சுமை யாரறிவார், மத்திய கிழக்கிலிருந்து இன்று வந்த தொலைபேசி

மத்திய கிழக்கிலிருந்து இன்று -17.09.2020 பகல் வந்த தொலைபேசி அழைப்பு பலத்த சஞ்சலங்களை மனதில் ஏற்படுத்தி நிற்கிறது.

‘இந்த மாதம் கென்ட்ரக்ட் முடிகிறது, நாட்டுக்கு வரவேண்டும். இன்றைய சூழலில் அதற்கு 5000 சவுதி ரியால்கள் தேவை ( ரூபா 250,000), இந்த தொகை கொடுத்து வந்து சேர போதிய வசதி இல்லை. இத்தனை வருடங்களாக குடும்பத்தை, உறவுகளை, உணர்வுகளை பிரிந்து குருவி போல சேகரித்த சிறு தொகையினையும் இப்படி தண்டத்துக்கு இழந்து வந்தால் எங்களது இத்தனை வருடகால உழைப்பிற்கு என்ன பலன்?’

‘விமான நிலையம் திறக்கும் வரை , கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ள முடியாதா?’

‘எப்படி அட்ஜஸ்ட் பண்ணுவது? ஒப்பந்த தேதி முடிந்ததும் கம்பனி தங்குமிடத்திலிருந்து வெளியேற வேண்டும்... எங்கே போய் தங்குவது? எத்தனை நாளைக்கு தங்குவது?’

மேலுள்ள உரையாடலைப்போல கனக்க உரையாடல்கள் இந்நாட்களில் நடந்து வருகின்றன.

இலங்கை அரசு வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களை பராமரிக்கும் கொரோனா தடுப்பு நிலையங்களில் இப்போதைக்கு இடமில்லை. அதனை பெற்றுக்கொண்டு நாட்டுக்கு வரவேண்டுமென்றால் பலமாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இந்த மத்திய கிழக்கு தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

வேலையில் தொடர்ந்திருப்பவர்கள் ஓரளவு பொறுமையாக இருக்க வாய்ப்பிருந்தாலும் வேலை இழந்தவர்கள், ஒப்பந்தம் நிறைவடைந்தவர்களின் நிலையோ அந்தோ பரிதாபம்.

மாதம் 500-700 ரியால்கள் சம்பளத்திற்கு கூலிகளாக கட்டட நிர்மாண துறையில் வேலை செய்த எத்தனையோ உழைப்பாளிகளின் வேலை கால கொன்ட்ரக்ட் நிறைவடைந்ததால் போக்கற்றவர்களாக வீதிகளில் உறங்கித்திரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் உள்ளவர்கள் 5000 ரியால்கள் ( ரூபா 250,000) செலவு பண்ணி விமானமேறி வந்து இங்குள்ள நட்சத்திர தர விடுதிகளில் தனிமைப்படும் திட்டத்திற்கு எங்கே போவார்கள்?

இந்த பின்புலத்தில் அல்லல்படும் உழைப்பாளிகளை மீட்டெடுக்கும் கடமை அரசுக்கு இருக்கின்ற போதும் இங்குள்ள பாதுகாப்பு நடை முறைகளும், வளப்பற்றாக்குறையும் அவற்றை துரித கதியில் செய்ய முடியாமைக்கான காரணங்களாகவும் இருக்கின்றன.

இவ்வாறான இறுக்கமான நடைமுறையினை நமது நாடு பின்பற்றாமல் விட்டிருந்தால் நாம் இதுவரை பேரவலம் ஒன்றை எதிர் நோக்கி இருக்கவும் கூடும்.

இந்த விடயங்களை கருத்தில் கொண்டு மத்திய கிழக்கில் வேலை இழந்து வேறு வழி தெரியாமலும் , நாட்டுக்கு உடனடியாக வர போதிய வசதியில்லாமலும் தடுமாறும் உறவுகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டிய தருணம் இது.

ஸக்காத் கடமையான இஸ்லாமியர்கள் “வழிப்போக்கர்களுக்கு உதவுதல்” என்ற அடிப்படையில் தங்களது ஸகாத் தொகையினை இந்த அனர்த்த வேளையில் காத்திரமாக பாவிக்க முடியும்.

அது போல பொதுவாக உதவும் எண்ணம் கொண்ட நல்லோர்கள் இந்த உழைப்பாளிகளின் துயரில் முடிந்தளவு பங்கு பெறுங்கள்.

பாலைவன வெயிலில் நாள் தோறும் அடிபடுகிற ஒரு சாதாரண உழைப்பாளியின் வியர்வையும், வேதனையும் கனதியானவை.

அவன் இந்த இக்கட்டான சூழலில் வேலை இழந்து சொந்த வீடு வந்து ஒதுங்க முடியாமல் பாலை வெளியில் ஏதோ ஒரு கிழிந்த கூடாரத்துக்குள், அல்லது பாதை ஓரத்தில் கிடக்கும் கொங்ரீட் உருளைக்குள் தஞ்சம் புகுந்திருக்க கூடும்.

அவனது கண்ணீர் பெருஞ்சுமையானது.

அந்த கண்ணீரை துடைக்கும் கரங்களை இறைவன் நிச்சயம் ஆசீர்வதிப்பான்.

Mujeeb Ibrahim


4 கருத்துரைகள்:

500 ரியால் சம்பளம் இப்போதும் வழங்கப்படுகிறதா?

அது முன்பொரு காலத்தில் அல்லவா இப்போ 1000 ரியாலை விட குறைவாக யாருக்கும் சம்பளம் வழங்கப்படுவதில்லை

அது முன்பொரு காலத்தில் அல்லவா இப்போ 1000 ரியாலை விட குறைவாக யாருக்கும் சம்பளம் வழங்கப்படுவதில்லை

No, you are wrong. I know many personally who are paid less than 1000 Riyal. recently labor law has been amended in Qatar therefore in couple of months minimum wage could be 1000 QAR.

Post a comment