September 24, 2020

ஹிஜாஸ் விசாரணைகள் நிறைவு - நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்


(எம்.எப்.ம்.பஸீர்)

உயிர்த்தஞாயிறு தின தொடர்  தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. 

இது குறித்த விசாரணைகளை கடந்த 17 ஆம் திகதி நிறைவு செய்து, விசாரணை கோவையை சட்ட மா அதிபருக்கு அனுப்பியுள்ளதாக  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் தீபானி மெனிகே நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தார்.

கடந்த 2019 உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல்  21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில், சினமன் கிரான்ட்  ஹோட்டலில் இடம்பெற்ற சம்பவத்தில் தற்கொலைதாரியாக செயற்பட்ட மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் என்பவருடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறி சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் , தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில்,  அந்த சம்பவத்தை மையப்படுத்திய நீதிவான் நீதிமன்ற விசாரணையின் கீழேயே ஹிஜாசஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் மன்றுக்கு விடயங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று அவ்வழக்கு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது,  விசாரணையாளர்கள் சார்பில் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் தீபானி மெனிகே ஆஜரானதுடன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம், ஹபீல் பாரிஸ், தனுஷன் கனேஷ்யோகன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் ஆஜரானது.

இதன்போது ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, ஹிஜாஸ் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளனவா என ஆராயப்பட்டது.  

இதன்போது மன்றுக்கு மேலதிக விசாரணை அறிக்கையினை சமர்ப்பித்த சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரி தீபானி மெனிகே,  ஹிஜாஸ் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கூறினார். அது குறித்த  கோவை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் அடிப்படைவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 இந் நிலையில் மேலதிக தகவல்களை அவர் முன்வைக்கும் போது,

'சி.ஐ.டி.யின் தடுப்பில் உள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் அறக்கட்டளை நிறுவனமான சேவ் த பேர்ள் எனும் அமைப்புக்கு கட்டிடம் ஒன்றினை அமைக்க கட்டார் அறக்கட்டளை 13 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

சட்ட விரோத  அமைப்பான இந்த அறக்கட்டளை, சேவ் த பேர்ள்  அமைப்புக்கு அளித்த நிதி, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதா, அவ்வாறான நடவடிக்கைகளுக்காக வழங்க்கப்பட்ட நிதியா என நாம் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.  ஹிஜாஸ் குறித்த விசாரணைகளை நிறைவு செய்தாலும், சினமன் கிராண்ட் ஹோட்டல் மீதான தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் நிறைவடையவில்லை. அது தொடர்பில் 4 சந்தேக நபர்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.' என  விசாரணை அதிகாரி தீபானி மெனிகே குறிப்பிட்டார்.

இதன்போது மன்ரில் ஆஜரான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் சட்டத்தரணிகள், கட்டார் அறக்கட்டளை, சட்ட விரோத, பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கும் அமைப்பு எனும் சி.ஐ.டி.யின் விளக்கத்தை மறுத்தனர். உலக அளவில் செயற்படும் குறித்த அறக்கட்டளையானது, சவூதி அரேபியாவில் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ள பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அது சவூதி - கட்டார் அரசியல் முறுகல் காரணமாக  இடம்பெற்றது எனவும்  ஹிஜாஸின் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கொவிட் 19 காலப்பகுதியில் கூட, குறித்த அறக்கட்டளை  கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து பணியாற்றியமையையும், ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவங்களுடன் இணைந்து பணியாற்றுவதையும் நினைவு கூர்ந்த சட்டத்தரணி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக குற்றம் சுமத்த சான்றுகள் இல்லாத நிலையில், தற்போது புதிதாக இவ்வாறான வேறு வழிகள் ஊடான சான்றுகளை உருவாக்க முயல்வதாக அவர் குற்றம் சுமத்தினார்.

இந்நிலையில் ஏற்கனவே, நீதிமன்றம் ஊடாக சிறுவர் உளவியல் மருத்துவ நிபுணர் ஒருவருக்கு பகுப்பாய்வுக்கு அனுப்பட்டுள்ள, ஹிஜாச் ஹிஸ்புல்லாஹ் தொடர்புபட்டதாக கூறப்படும் மத்ரஸாவில் இருந்து கைப்பற்றப்பட்ட ' நவரசம் ' எனும் புத்தகம் தொடர்பில் அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என சி.ஐ.டி. மன்றுக்கு அறிவித்த நிலையில், அப்புத்தகத்தின் சிங்கள மொழி பெயர்ப்புப் பிரதி ஒன்றினை மன்றுக்கும் அளிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டு, வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

0 கருத்துரைகள்:

Post a comment