Header Ads



கப்பல் தீயைக் கட்டுப்படுத்த மாலுமி உள்ளிட்ட பணியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென குற்றச்சாட்டு


பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்களுக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்காமல், MT New Diamond கப்பலை கைவிட்டுவிட்டு, கப்பலின் மாலுமி உள்ளிட்டவர்கள் உயிர் பாதுகாப்பு படகுகளில் ஏறியுள்ளதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று தெரியவந்தது.


இந்த அனர்த்தம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று இந்த விடயங்களைத் தௌிவுபடுத்தியது.


தீயைக் கட்டுப்படுத்துவதற்கு கப்பலில் பொருத்தப்பட்டிருந்த நவீன உபகரணங்களை செயற்படுத்துவதற்கு அதன் தலைமை மாலுமி உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்கவில்லையென குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


MT New Diamond கப்பலின் மாலுமி உள்ளிட்ட ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு, பிரதம நீதவான் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியதுடன், கடலில் கலந்துள்ள எரிபொருள் தொடர்பில் விசாரணைகளுக்குத் தேவையான மாதிரிகளை சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் மூலம் பெற்றுக்கொள்வதற்கும் அனுமதி வழங்கினார்.


அந்த செயற்பாட்டிற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கடற்படைத் தளபதிக்கும் கடற்கரை பாதுகாப்பு படைக்கும் கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கும் நீதவான் உத்தரவிட்டார்.


பனாமா கொடியுடன் பயணித்துள்ள இந்த கப்பலின் GPS-இல் பதிவாகியுள்ள தகவல்களின் பிரதியொன்றை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்குமாறும் இந்தக் கப்பலை மீட்டெடுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ள கப்பல் நிறுவனத்தின் செயற்பாட்டு பணிப்பாளருக்கு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.


கப்பல் தீப்பற்றிய போது 2,70,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் அதில் களஞ்சியப்படுத்தப்பட்டு இருந்தாகவும் அதற்கு மேலதிகமாக கப்பலின் பயன்பாட்டிற்கு அதிகளவு எரிபொருள் காணப்பட்டதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


1.6 கிலோகிரோம் எரிபொருள் கடல் நீரில் கலந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் பெற்றுக்கொண்ட மாதிரிகள் மூலம் தௌிவாகியுள்ளது.


இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது.

No comments

Powered by Blogger.