Header Ads



சமய அறநெறிகள் மீது பற்றுக்கொண்ட தலைமுறையொன்று எதிர்காலத்திற்கு வேண்டும் - ஜனாதிபதி


சமயத்தின் மீதும் அறநெறிகள் மீதும் பற்றுக்கொண்ட ஆன்மீக பண்புகள் நிறைந்த தலைமுறையொன்றை நாட்டின் பௌதீக அபிவிருத்தியுடன் இணைந்ததாக எதிர்காலத்திற்கு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

இலங்கை நன்நெறிகளால் வளம்பெற்ற ஒரு நாடாக விளங்குவதற்கு பௌத்த சமயமும் ஏனைய சமயங்களும் போதிக்கும் சமய சகவாழ்வே காரணமாகும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

அறநெறிப் பாடசாலைகள் மற்றும் பிரிவெனா கல்வியின் மேம்பாட்டின் ஊடாக ஒழுக்கப்பண்பாடான ஒரு பயணத்திற்கு பலமான அடித்தளத்தை இட முடியுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

அறநெறிப் பாடசாலைகள், பிக்குமார் கல்வி, பிரிவெனாக்கள் மற்றும் பௌத்த பல்கலைக்கழகங்கள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். 

நீண்டகாலமாக அமைதியாகவும் நல்லிணக்கமாகவும் வாழ்ந்து வரும் இலங்கை சமூகத்தினுள் தீவிரவாதமற்ற உண்மையான சமயக் கல்வியை மேம்படுத்துவதற்கு அனைத்து சமயங்களினதும் பதிவு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலைகளின் குறைபாடுகளை முழுமைப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் இராஜாங்க அமைச்சின் முழுமையான தலையீடு இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்களின் தேவைகளையும் அவர்களை வலுவூட்டுவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களையும் கண்டறிந்து அவற்றை செயற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். 

பல்கலைக்கழக நுழைவு மற்றும் தொழில் வாய்ப்புகளின்போது தர்மாச்சாரிய சான்றிதழுக்கு ஒரு பெறுமானத்தை வழங்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. பிரிவெனா மற்றும் அறநெறிப் பாடசாலைகளின் பாடநூல்களை மீளத்தொகுக்க வேண்டியதன் அவசியம் மற்றும் பிரிவெனா ஆசிரியர்களாக உள்ளவர்கள் இம்முறை பட்டதாரி தொழில்வாய்ப்புகளை பெற்றிருந்தால், சேவை செய்த பிரிவெனாக்களிலேயே நியமனங்களை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

பிக்குமார்களின் ஆங்கில மொழி அறிவு. கணனி மற்றும் தொழிநுட்ப அறிவை மேம்படுத்துவதற்கு பிரிவெனா ஆசிரியர்கள் நியமனம்இ சம்பளம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

பிரிவெனாக்களுக்கு அபிவிருத்தி அதிகாரி ஒருவர் மற்றும் சிற்றூழியர்களை பட்டதாரி தொழில்வாய்ப்பு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகள் நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றின் கீழ் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

பிரிவெனா மற்றும் பிக்குமார் கல்வித்துறையை பிரதிநிதித்துவப்படுத்தி மகாசங்கத்தினர் மற்றும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் விஜித்த பேருகொட, புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷஇ ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர ஆகியோருடன் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மற்றும் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

1 comment:

Powered by Blogger.