September 20, 2020

இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற நிலையை உருவாக்க வேண்டும் - பேராசிரியர் ரஞ்சித் பண்டார


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை  (19.09.2020) காலை 9.30 முதல் மாலை 5.00 மணி வரை இல 77, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கோட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அடுத்த இரண்டு வருடங்களுக்கான உதவித் தலைவர்கள், மஜ்லிஸுஷ் ஷூரா எனப்படும் மத்திய ஆலோசனை சபை உறுப்பினர்கள் தெரிவு, கடந்த கால செயற்பாட்டு அறிக்கைகள்… என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இந்நிகழ்வில், விஷேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் பொருளியல்‌ துறை சிரேஷ்ட பேராசிரியருமான கலாநிதி  ரஞ்சித் பண்டார பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்திய பேராசிரியர் ரஞ்சித் பண்டார, “சீகிரிய, தலதா மாளிகை, ருவன்வெலிசாய, காக்காப் பள்ளி ஆகியன எமது அடையாளங்கள். அவை எமது வரலாறு. அவை எமது‌ பாரம்பரியம். இவை அனைத்தும் இலங்கையர் அனைவருக்கும் பொதுவானது என்றே நாம் பார்க்கிறோம். இவற்றைப் பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும்” எனத் தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,

எனது ஊரில் வசித்து வந்த 55 குடும்பங்களில் மூன்று முஸ்லிம் குடும்பங்களும் இரண்டு தமிழ் குடும்பங்களும் இருந்தன. நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் போன்று பழகி வந்தோம்.

மகாவலி கங்கையில் நாம் அனைவரும் ஒன்றாக நீராடினோம். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், யானைகள், கால்நடைகள் என எல்லோரும் வெவ்வேறு நேரங்களில் நீராடினர். அப்போது எமக்குள் எவ்வித முரண்பாடுகளும் இருக்கவில்லை.

 எமதூரில் கடை வைத்திருந்த செய்னுல் ஆப்தின் மாமா ஊரில் யாராவது ஒருவர் மரணித்து விட்டால் தனது கடையில் வெள்ளைக் கொடியை தொங்க விடுவார். மட்டுமல்லாமல் மரணச் சடங்குகளையும் அவரே முன்னின்று நடத்துவார். இப்படி நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்தோம்.

நாம் மச்சான், அய்யா, நங்கி என்ற உரிமையுடன் எமக்குள் பேசிக் கொள்ளும் கலாசாரம் தனித்துவமானது. உலகில் எங்குமே இல்லாத தனித்துவ அடையாளங்கள், கலாசாரப் பண்பாடுகளை கொண்ட நாட்டின் பெருமை மிகு தேசத்தின் உரிமையாளர்கள். இத்தேசம் உலகில் வேறெங்கும் காண முடியாத "Limited Edition" - வரையறுக்கப்பட்ட உருவாக்கமாகும். இதை எமது முன்னோர் உருவாக்கினர். இது எமது நாட்டின் தனிச் சிறப்பு.

நான் இங்கிலாந்து, நோர்வே, அவுஸ்திரேலியா மற்றும் பல பல்கலைக்கழகங்களில் மாணவராக, விரிவுரையாளராக பணியாற்றி இருக்கிறேன். அங்கெல்லாம் இந்த நடைமுறையைக் காணவில்லை.

எமது அடுத்த தலைமுறையினர் இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற நிலையை உருவாக்க வேண்டும். உங்களது அமைப்பு இதனைச் செய்து வருகின்றமை பாராட்டுக்குரியது. 

இன்று எமது இளைஞர்கள் ஸ்மார்ட் ஸ்க்ரீன்களுக்கு முன்னாள் தலை குனிந்த வண்ணமே இருக்கிறார்கள். அவர்களது தலையை நிமிர்த்தி அடுத்தவர் முகம் பார்த்து உறவாடும் அழகிய கலாசாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டியது எம் அனைவரதும் பொறுப்பு.

நாம் அனைவரும் இலங்கையர். நாம் எல்லோருமாக ஒன்றிணைந்து பலமானதொரு சமூகமாக எழுந்து நிற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதன்போது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் உஸைர் இஸ்லாஹி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் கலாநிதி  ரஞ்சித் பண்டார அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

2 கருத்துரைகள்:

He is one of nice and friendly Professor in our institution...

எல்லா சமயங்களுக்குள்ளும் மிக உயர்ந்த மனிதர்கள் இன்னமும் இருக்கின்றார்கள். அவரகள் எப்படிப் படித்தவரகளாக, கலாச்சார மேம்பாடுடையவரகளாக இருந்தாலும் அவரகளது பார்வை மக்கள் பக்கமே நிறைவாக இருந்தது; இருக்கின்றது. சொற்ப காலமாக மனிதர்களின் மனங்களில் விஷம் ஊட்டப்பட்டுவிட்டது. அவரகள் எல்லாம் இப்பொழுது மக்களைப் பார்ப்பதற்குப் பதிலாக புத்தகங்களையும் ஐயா சொல்லுகின்றமாதிரி Smart Utilities களையுமே பார்த்தவண்ணம் இருக்கின்றனர். இதனால் அவரகளும் தலைகுனிந்தவண்ணமே இருக்கின்றனர் அதனால் மனிதர்களை தலையை உயர்த்திப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. ஒரு காலத்தில் மக்கள் இலங்கையர்களாகவே வாழ்ந்தார்கள். இப்போது சிங்களவரகள், தமிழர்கள், முஸ்லிம்கள் என இனரீதியாகவும் பௌத்தம், இந்து, முஸ்லிம், கிறிஸ்த்தவம் எனப் பல்வேறு மதத்தைச் சார்ந்தவரகளாகவும் இருப்பதனால் அவரகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது மிகக் கஷ்டமாகவே இருக்கின்றது. ஆயினும் இவரகளுல் "மிகவும் பலர்" இன்னமும் சமூக நல்லிணக்கத்துடன் சிறபபாக சமூகங்களுடன் இணைந்து வாழ்கின்றமையையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

Post a comment