Header Ads



மோட்டார் வாகன இறக்குமதி, தற்காலிகமாக இடைநிறுத்தம்


இறக்குமதியை முறையாக முன்னெடுப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களை மூன்று வகைகளாக வகைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 


இதற்கமைவாக உள்ளுரில் உற்பத்தி செய்யக்கூடிய அல்லது தயாரிக்க கூடிய அத்தியாவசியம் அல்லாத பொருட்கள், வர்த்தக பொருட்கள், மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 

01. 1969 ஆம் ஆண்டு இலக்கம் 1 இன் கீழான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுபாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல் 

கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக வெளிநாட்டு நாணய மதிப்பின் மீது ஏற்பட்ட தாக்கத்தை குறைக்கும் நோக்குடன் இறக்குமதியை முறையாக முன்னெடுத்தல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை வழமை நிலைக்கு கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை 2020.04.01 திகதியன்று நடைபெற்ற கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டது. 

அதற்கமைவாக ´சௌபாக்கிய தொலைநோக்கு´ என்ற கொள்கைக்கு ஏற்ப தேசிய பொருளாதாரத்தை வலுவூட்டுதல் மற்றும் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியினால் சுங்க வரிகளை தீர்மானிக்கும் குழு நியமிக்கப்பட்டது. 

அத்தோடு அந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இடைக்கால நடவடிக்கை என்ற ரீதியில் இறக்குமதியை முறையாக முன்னெடுப்பதற்காக இறக்குமதி பொருட்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி கீழ் கண்டவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

• உள்ளுரில் உற்பத்தி செய்யக்கூடிய அல்லது தயாரிக்கக்கூடிய அத்தியாவசியமற்ற பொருட்கள், வர்த்தக பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்தலை தற்காலிகமாக இடை நிறுத்துதல். 

• வழங்குபவர்களினால் வழங்கப்படும் கடன் வசதியின் அடிப்படையில் அல்லது வெளிநாட்டு நாணயம் செலவிடப்படாத அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்குதல். 

• உள்ளுர் கைத்தொழிற்சாலைகள், விவசாயத்துறை, ஏற்றுமதி தயாரிப்பு மற்றும் உள்ளுர் நுகர்வுக்கான பொருட்களை இறக்குமதிக்கு அனுமதி வழங்குதல். 

இதற்கமைவாக மேலே குறிப்பிடப்பட்ட படிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 1969 ஆம் ஆண்டு இலக்கம் 1 இன் கீழான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான விதிகளை அறிந்து வெளியிடப்பட்ட 04 விஷேட வர்த்தமானிகளுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கென சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.