Header Ads



பிரபாகரனுக்கு இறுதியில் நடந்ததை, கேட்டபின் மிக வேதனையாக இருந்தது - மதியமும், இரவும் உணவருந்தவில்லை


புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு யுத்தத்தின் இறுதியில் நடந்தது தொடர்பான செய்தியைக் கேட்ட பின்னர் மிகவும் வேதனையாக இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.


ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,


தலைவர் மறைந்த செய்தியை கேட்டதும் மிகவும் கஷ்டமாக உணர்ந்தேன், மதியம் மற்றும் இரவில் உணவருந்த கூட முடியாமல் மிகவும் கவலையாக இருந்தது. இது ஒரு இயல்பான விடயம். என்னதான் எதிரியாக இருந்தாலும் அவர்களது இறப்பில் கவலைகொள்வது சாதாரணமான விடயம். அது இயல்பு.


விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா விலகுவதாக அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் என்னை அழைத்துப் பேசியிருந்தார். பிள்ளையான் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டி வரும் போல இருக்கு, நாங்கள் தனியாக இயங்குவது பற்றி யோசிக்கலாம் என தெரிவித்தார்.


அதற்கு நான், நீங்கள் முடிவு எடுத்தால் அதற்கு நான் உடன்படுகின்றேன். ஆனால் அந்த முடிவு ஊடகங்களில் பெரிதாக்கப்பட்டு, நிரந்தரமாக பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டால் எல்லாமே முடிந்து போய்விடும். எனவே கவனமாக முடிவெடுங்கள் என நான் தெரிவித்தேன்.


அதன் பின்னர் சில தினங்களில் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து விட்டதாக ஊடகங்களில் பார்த்தவுடன் மிகவும் வேதனையடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, இந்தமுறை நடந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். கடந்த காலங்களில் எனது செயற்பாட்டை மக்கள் நம்பியிருக்கின்றார்கள் என்பதன் வெளிப்பாடே இந்த முறை எனக்கான வெற்றி.


கடந்த காலங்களில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நான் பழிவாங்கப்பட்டேன். இதனை உறுதியாக கூற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.