Header Ads



தீப்பற்றி எரிந்த கப்பலின், தற்போதைய நிலை


சங்கமன்கண்டி கடற்பிராந்தியத்தில் MT New Diamond எண்ணெய்க் கப்பல் முழுவதுமாக கடற்படையின் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை நேற்று (04) அறிவித்திருந்த நிலையில் தற்போது இலங்கை கடற்பரப்பில் இருந்து சுமார் 40 கடல் மைல் வரையில் கப்பல் இழத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

குவைத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த ‘நியூ டைமண்ட்’ கப்பல், நேற்று முன்தினம் (03) நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் வந்தபோது அதன் இயந்திர பகுதியில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் அது கப்பலின் பிற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. 

இதனையடுத்து இலங்கை கடற்படையின் 4 கப்பல்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் 2 போர் கப்பல்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு பணிகளை மேற்கொண்டன. 

பின்னர் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சவுரியா, சரங் மற்றும் சமுத்ரா ஆகிய 3 கப்பல்களை இந்தியா அனுப்பி வைத்தது. 

அத்துடன் இந்தியாவின் டோர்னியர் விமானம் ஒன்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் இணைந்தது. 

கப்பலில் ஊழியர்கள் தங்கியிருந்த பகுதியில் பிடித்த தீயை தீயணைப்பு குழுவினர் விரைவாக அணைத்தனர். மற்ற பகுதியில் தீயை கட்டுப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. ஏற்கனவே தீப்பிடித்த இடத்தில் மீண்டும் தீப்பற்றாமல் தவிர்ப்பதற்காக குளிரூட்டும் பணிகளையும் மேற்கொண்டனர். 

மூன்றாவது நாளாக இன்றும் தீயணைப்பு பணி நடைபெறுகிறது. இன்று காலை தீயின் உக்கிரம் தணிந்துள்ளதாகதாவும், கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. கடற்பகுதியில் எண்ணெய் படலம் எதுவும் காணப்படாததால் இதுவரை எண்ணெய்க் கசிவு ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. 

அதேசமயம், கப்பலில் சேதம் ஏற்பட்டால் கச்சாய் எண்ணெய் கசிந்து கடலில் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே, கப்பல் இலங்கை கடற்கரையில் இருந்து 40 கடல் மைல்களுக்கும் அப்பால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த பணியை கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் இணைந்து வெற்றிகரமாக செயல்படுத்தின. கப்பலில் இருந்த 23 மாலுமிகளில் 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒருவரை மட்டும் காணவில்லை. அவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என கடற்படை தெரிவித்துள்ளது. 

1 comment:

  1. அந்த கப்பலை கூடிய சீக்கிரம் ஏதாவதொரு துறைமுகத்துக்கு கொண்டு வந்து அதிலுள்ள எண்ணையே வேறொரு கப்பலுக்கு மாற்ற வேண்டும்,இன்னும் அதை நடுக்கடளுக்கு எடுத்து செல்லுவதில் இன்னும் ஆபத்து தான் அதிகம் ஏனேனில் தாட்செயலாக கடலில் மூழ்கினால் எண்ணெய் அபாயம் மிகவும் மோசமாக அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.