Header Ads



வெளிநாட்டிலிருந்து இலங்கையர்களை அழைத்து வர, எவ்வழியிலேனும் நடவடிக்கை எடுக்கப்படும் - பவித்திரா


(எம்.மனோசித்ரா)

மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைத்து இலங்கையர்களையும் எவ்வழியிலேனும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இராஜாகிரியவிலுள்ள கொவிட்-19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் இன்று வியாழக்கிழமை -03- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொவிட்-19 இன்று முழு உலகிலும் சமூகத்தினுள் பரவியுள்ள நோயாகியுள்ளது. இந்த வைரஸ் சமூகத்தினுள் பரவாமல் கட்டுபடுத்தியுள்ள ஒரே நாடு இலங்கையாகும். ஜனாதிபதியினுடைய நேரடி தலையீட்டின் காரணமாகவே எம்மால் இதனை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

மத்திய கிழக்கு உள்ளிட்ட உலகில் ஏனைய பல நாடுகளிலிருந்தும் பல இலங்கையர்கள் நாட்டுக்கு வர எதிர்பார்த்துள்ளனர். எனினும் எமது பிரதான பொறுப்பு நாட்டிலுள்ள மக்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதாகும். அது அரசாங்கம் என்ற அடிப்படையில் எமக்கு காணப்படும் பாரிய பொறுப்பாகும்.

நாட்டுக்கு வர எதிர்பார்த்துள்ள மத்திய கிழக்கு உள்ளிட்ட ஏனைய பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களை கட்டம் கட்டமாக அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் போது எம்மால் முடிந்தளவிற்கே அவர்களை அழைத்துவர முடியும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமக்கு மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டிய தேவை உள்ளது.

காரணம் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் சிறு தவறு ஏற்பட்டாலும் மீண்டும் சமூகத்தினுள் வைரஸ் பரவல் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளதைப் போன்று சுவாசம் மூலமும் இந்த வைரஸ் பரவக்கூடும். இவ்வாறான நிலையில் உலகிலேயே கொரோனா வைரஸிடமிருந்து மக்களை பாதுகாத்துள்ள ஒரேயொரு நாடு இலங்கையாகும்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அரசாங்கம் என்ற ரீதியில் எவ்வாறேனும் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறுகின்றோம். எனினும் ஒரே தடவையில் அனைவரையும் அழைத்துவர முடியாது. இராணுவத்தினரால் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அந்த பலத்தின் அடிப்படையிலேயே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

65 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுதிரும்பியுள்ளனர். இதே போன்று வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து தீர்க்கமாகவும் ஆழமாகவும் சிந்தித்து முறைப்படி கட்டம் கட்டமாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை பற்றி சிந்தித்தே இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

No comments

Powered by Blogger.