Header Ads



கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் லீவு தொடர்பான சர்ச்சை தீர்க்கப்பட்டது - நிஸாம் உடனடி நடவடிக்கை


(எஸ்.அஷ்ரப்கான்)

கொரனா வைரஸ் தொற்றுக்காரணமாக ஏற்பட்ட பாடசாலை விடுமுறைக் காலத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஆசிரியர்களுக்கான ஆண்டுக்குரிய அமைய சுகயீன விடுமுறை நாட்களை (41) குறைத்து  மட்டுப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் 2020.07.13 ஆம் திகதியக் கடிதத்தின் மூலம் வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. 

முன்னாள் மகாணக் கல்விப் பணிப்பாளரது இச் செயற்பாடு கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் மட்டும் நடைமுறைப்படுத்த எடுத்த ஒரு முயற்சியாக முன்வைக்கப்பட்டிருந்தது.

மேற்படி விடயம் தொடர்பாக கல்வி அமைச்சின் எத்தகைய தீர்மானமும்  அறிவுறுத்தலும்  இல்லாமல் நாட்டிலுள்ள ஏனைய மாகாணங்களிலும் இவ் நடைமுறை பின்பற்றப்படாத நிலையில் கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு மட்டும் இந்நடைமுறையை அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே தான் இது விடயமாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இதனை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்த நிலையிலும்,

இதனால் குழப்பமுற்ற கிழக்கு மகாண ஆசிரியர்கள் இது தொடர்பான விமர்சனங்களை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ள நிலையிலும் பல்வேறு எதிர்வாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பின் வருமாறு குறிப்பிட்டார், 

இன்று 04.09.2020 (வெள்ளி)  தற்போதுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர் லீவு  விடயம் தொடர்பாக ஆசிரியர் குழுவொன்று முறையிட்டனர். அதுபோல் ஊடகங்களிலும் வெளியிடப்பட்டிருந்தது.

அதற்கமைய இது தொடர்பான முறைப்பாட்டினை உடனே ஆராய்ந்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு இதனை  கொண்டு சென்று ஆசியர்களுக்கு உரிய லீவுகளை குறைத்து மட்டுப்படுத்த முடியாது என்ற விடயத்தை செயலாளருக்கு தெளிவுபடுத்தினோம்.

கடந்த காலங்களில் தான் இந்த விடயம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தலாக முன் வைக்கப்பட்டிருக்கின்றது.  என்பதை தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து, இந்த லீவு தொடர்பாக ஏற்கனவே வழங்கிய குறிப்பிட்ட அறிவுறுத்தலை இரத்துச் செய்து, புதிய அறிவுறுத்தல் கடிதங்களை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் உடனடியாக இன்று (04) பணிப்புரை வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் உடை டியாக செயற்பட்டு ஆசிரியர் லீவு தொடர்பாக வழமையாகவுள்ள  அமைய, சுகயீன, விடுமுறை நாட்களான 21, 20 நாட்களை பின்பற்றும் அறிவுறுத்தல் சகல பாடசாலைகளுக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

என்றாலும் லீவு உரிமை அல்ல சலுகைதான் என்ற அடிப்படையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இருக்கின்ற காலத்திற்குள் பாதிக்கப்படாதவாறு உரிய பாட அலகுகளை இவ்வருடத்திற்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியத்திற்கு அமைய, ஆசிரியர்களின் லீவு விடயத்தில் அதிபர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதும்  அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கம்  காரணமாக இலங்கையும் அதன் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. இதில் முழு நாட்டுக்குமான பாடசாலைக் கல்வி இவ்வருடம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. இதற்கு தீர்வாக இருக்கின்ற இக்காலத்திற்குள் மாணவர் நலனையும் ஆசிரியர் நலனையும் கருத்தில்கொண்டே வெற்றிகரமான கல்வி நடவடிக்கைகளையும் திட்டங்களையும் நாம் முன்னெடுக்க வேண்டும். 

அதற்காக கிழக்கு மாகாணத்திலே தியாக உணர்வோடு சேவையாற்றுகின்ற ஆசிரியர்களை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் சனி, ஞாயிறு போன்ற லீவு காலங்களில் கூட தங்களை அர்ப்பணித்து மாணவர்களின் நலனுக்காக சேவையாற்றுகின்ற நிலையில் அவர்களின் உணர்வுகளை புரிந்து நாம் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில் உடனடியாக நாம் இந்த  பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டிருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. "மாணவரகள் இல்லாவிடடால் கல்வித் திணைக்களமும் இல்லை அதனோடு சம்பந்தப்பட்ட எதுவும் இல்லை. மாணவரகள் எமது எஜமான். நாம் அவரகளுக்காகவே. அவரகள் எமக்காக அல்ல" இந்தக் கருத்து முன்னாள கல்விச் செயலாளர் சுந்தரம் திவகலாலா அவரகள் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியவையாகும். மாணவரகளின் நன்மை கருதி தற்போதைய மாகாணக் கல்விப் பணிப்பாளரும் கல்வி அமைச்சகமும் இத்திட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டு வந்தமைக்காக நாங்கள் அவரகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்காமல் இருக்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.