September 27, 2020

சுமந்திரன் இரட்டை முகம், சிங்களவரோடு மோதவிடும் கருவியாக முஸ்லிம்களை மாட்டிவிடக்கூடாது - ஹரீஸ்


(சர்ஜுன் லாபீர்)


முஸ்லிம் சமூகத்தினை சில அரசியல்வாதிகள் தெற்கில் உள்ள பெரும்பான்மை இனத்தோடு மோதவிடுகின்ற ஒரு கருவியாக பயன்படுத்துகின்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார்.


சாய்ந்தமருது சஹிரியன் விளையாட்டுக் கழகம் நடாத்திய கெளரவ கலாநிதி பட்டம் பெற்றவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று(27) சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் தொடர்ந்து பேசுகையில் கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகம் பாக்குவெட்டியில் அகப்பட்ட பாக்கு போல தேசிய ரீதியான அரசியலில் முகம் கொடுக்கவேண்டி உள்ளது.அதேநேரம் எமது பிராந்திய முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமையை எங்களுடைய அதிகாரமையத்தினை தக்கவைக்கவேண்டிய நிலையில் நாங்கள் இருந்து கொண்டு இருக்கின்றோம் அதற்கான வழிவகைகளை எங்களது அரசியல் தலைமைகள் செய்யும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்.


அதேநேரம் இன்று சம்மாந்துறையில் மறைந்த தலைவரின் நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பேசும்போது முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் சுயநிர்ணய போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அரைகூவல் விட்டு இருக்கின்றார்.அதே சுமந்திரன் முஸ்லிம் சமூகத்தின் முகவெற்றிலையாக இருக்கின்ற கல்முனை நகரினை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்று கடந்த வருடம் தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்.இவ்வாறு அவர் இரட்டை முகத்தினை கொண்டு செயற்படுகின்ற சூழ்நிலையில் இன்னும் இன்னும் தெற்கில் உள்ள பெரும்பான்மையின மக்களோடு மோதவிடுவதற்கான ஒரு கருவியாக முஸ்லிம் சமூகத்தை மாட்டிவிடக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும்.


ஏனென்றால் தமிழ் சமூகத்தினுடைய போராட்டத்திற்கு வலிமை சேர்க்கின்ற சக்தியாக பெரும் வல்லரசு நாடான இந்தியா இருக்கின்றது. அண்மையில் இந்திய பிரதமர் மோடியினுடைய உரை கூட தமிழ் தலைமைகளுடைய 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக பேசி இருக்கின்றார் ஆனால் முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸா எரிக்கப்பட்ட விடயத்தில் கூட எந்தவொரு வடகிழக்கில் உள்ள தலைமைகளோ, வல்லரசுகளோ! குரல் கொடுக்கவில்லை என்பதன் மூலம் நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.


எமது சமூகத்தை மிகவும் நுட்பமாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு எமது சமூகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும்மன்றி ஒவ்வொரு சமூக ஆர்வலர்களுக்கும் உண்டு என குறிப்பிட்டார்.


இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் கல்வியாளர்கள்,சமூக அமைப்புகளின் தலைவர்கள் என பலரும் கொண்டனர்.

4 கருத்துரைகள்:

வடகிழக்கு பிரிவினைவாத ஹர்த்தாளுக்கு கிழக்கில் எந்த முஸ்லிம்களும் துணைபோகக்கூடாது

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

அன்புக்குரிய ஹரீஸ் அவர்களுக்கு, கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை. கோட்பாட்டு ரீதியாக எப்பவோ முடிந்த காரியம். ஆனால் செயற்பாட்டு அடிப்படையில் தமிழரும் முஸ்லிம்களும் பேசி இறுதி தருண விட்டுக் கொடுப்புகள்மூலம் இன உறவுகளை பாதுகாக்க இன்னும் சிறிது அவகாசம் உள்ளது. 2009ல் போர் முடிந்துவிட்டது என்பதை இனியாவது நாம் உணர்வது அவசியம். புதிய சூழலை உணருவது புதிய சமரசத்துக்கான ஒரே வழி என்பதை தமிழரும் முஸ்லிம்களும் இனியாவது உணர்ந்து செயல்படவேணும். அத்தகைய ஒரு சூழலையும் இராசதந்திர செயல்பாடுகளையும் முன்னெடுங்கள். காலமெல்லாம் தமிழரும் முஸ்லிம்களும் உங்கள் புகழ் பாடுவார்கள்.

நீங்கள் மாட்டிவிட்டதை முதலில் எடுத்து விடுங்கள். அனைத்தும் சரியாகி விடும்.

Post a comment