Header Ads



இலங்கை அரசுக்கு யுனிசெப் பாராட்டு


தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) பாராட்டியுள்ளது. 


தொழில் செய்வதற்கான ஆகக் குறைந்த வயதினை 14 வயது என்பதிலிருந்து 16 வயதாக அதிகரிப்பதற்கான தீர்மானமானது, கல்வி கற்பதற்கான கட்டாய வயதான 16 வயது என்பதுடன் தொழில் சட்டங்கள் பொருந்திச் செல்ல வழிவகுக்கும். தொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம், கட்டாய கல்விக்கான சிறுவர்களின் உரிமைகள் அர்த்தப்பூர்வமான வகையில் நிஜமாக்க வழிவகுக்கும். 


சிறுவர்கள் மற்றும் இளம் பராயத்தினர் கட்டளைச் சட்டம் மற்றும் இளம்பராய குற்றவாளிகள் (பயிற்சி பாடசாலைகள்) கட்டளை சட்டம் என்பவற்றை திருத்துவதற்கான கொள்கை தீர்மானமானது அமைச்சரவையினால் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளம் குற்றவாளிகள், பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் செல்லாமல், நன்னடத்தை திணைக்களம் மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகளின் ஊடாக புனர்வாழ்வளிக்கப்படுவதனை உறுதி செய்யும். 


அரசாங்கத்தின் இந்த முக்கிய முடிவு, சிறுவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும், சிறுவர்களுக்கு நியாயத்தையும் நீதியையும் உறுதி செய்வதில் இலங்கையின் உறுதிப்பாட்டை முக்கியமாக நிரூபிக்கிறது´ என்று யுனிசெப் இலங்கையின் பிரதிநிதி டிம் சுட்டன் கூறினார். 


இருப்பினும், சிறுவர்கள் சட்டத்துடன் தொடர்பு கொள்ளும் போது, அவர்கள் சிறுவர்கள் என்பதற்கே முதலாவதும், முக்கியமானதுமான கவனம் செலுத்தப்படல் வேண்டும். கைது, தடுப்புக்காவல் மற்றும் சிறைத் தண்டனை உள்ளிட்ட அவர்களின் சுதந்திரத்தை இழப்பது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் எதிர்கால நல்வாழ்வுக்கு மிகவும் எதிர்மறையான மற்றும் தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்துகிறது´ என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 


கடந்த ஆண்டு, சிறுவர் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் (UNCRC) 30ஆவது ஆண்டு நிறைவின் ஒரு பகுதியாக, இலங்கை தெற்காசியாவில் தனது சிறுவர்கள் சார்பாக UNCRC இற்கு மீளுறுதி செய்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது. இந்த திருத்தங்கள் இலங்கையின் உறுதிப்பாட்டை மேலும் விளக்குகின்றன, குறிப்பாக உறுப்புரை 28 - சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கல்வி உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்கிறது மற்றும் பிரிவு 37 - (ஆ) கைது, தடுப்புக்காவல் மற்றும் சிறைத் தண்டனை ஆகியவை கடைசி முயற்சியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. 


2019ஆம் ஆண்டில், சிறைச்சாலைத் திணைக்களத்தின் புள்ளி விவரங்களின்படி, 16 வயதிற்குட்பட்ட 168 குழந்தைகளும், 16 முதல் 22 வயதுக்குட்பட்ட 11,203 இளைஞர்களும் சிறைகளில் குற்றம் நிரூபிக்கப்படாத கைதிகளாக நேரடியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16 முதல் 22 வயதுக்குட்பட்ட 1,933 இளைஞர்கள் சிறைச்சாலையில் நேரடியாக அனுமதிக்கப்பட்டனர். 


அதே நேரத்தில் 2016ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரத் துறையால் நடத்தப்பட்ட சிறுவர் செயல்பாடு கணக்கெடுப்பு 43,714 பேர் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 39,007 பேர் சுரங்கம், கல் உடைத்தல், கட்டுமான தளங்கள், மீன்பிடித்தல் மற்றும் நபர்கள் மற்றும் அல்லது சொத்துக்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். 


அனைத்து வகையான சிறுவர் புறக்கணிப்பு, வன்முறை, துஷ்பிரயோகம், சுரண்டல் மற்றும் தீங்கான பயிற்சிகளைத் தடுக்கும் மற்றும் பிரதிபலிக்கும் ஒரு முழுமையான தேசிய சிறுவர் பாதுகாப்பு முறைமையை கட்டியெழுப்புவது உள்ளடங்கலாக சிறுவர்களின் உரிமைகளையும், தேவைகளையும் நிறைவேற்றக் கூடியதாக தமது நீதி கட்டமைப்பை உறுதி செய்வதற்கும், அனைத்து சிறுவர்களுக்கும் நியாயத்தையும், நீதியையும் உறுதி செய்வதற்கும் இலங்கைக்கு உதவி செய்வதற்காக யுனிசெப் செயற்பட்டு வருகின்றது.

No comments

Powered by Blogger.