Header Ads



2 ஆவது குழந்தைக்கு முயற்சித்த சஹ்ரான், குண்டை வெடிக்க திட்டமிட்டிருந்தான் என்பது கேள்விக்குரியது


2018, ஒக்டோபரில் இல் இடம்பெற்ற 52 நாள் ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டத்திற்கு முன்னர், தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு பதிலாக, அரச புலனாய்வு சேவையினர் ஏனைய விடயங்களுக்கே முன்னுரிமை அளித்தனர் என்று சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொலிஸ் மா அதிபா் பூஜித் ஜயசுந்தர நேற்று -29- இந்த தகவலை வழங்கினார்.


அந்த நேரத்தில் நிலவிய அரசியல் நிலைமை காரணமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான முன்னுரிமைகளில் மாற்றம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


தேசிய ஜமாஅத் (என்.டி.ஜே) தலைவர் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான நேரடி தொடர்புகளை வெளிநாட்டு உளவுத்துறை அறிக்கை கிடைக்கும் வரை இலங்கை அரச புலனாய்வுத்துறையினால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்று ஜயசுந்தர கூறினார்.


ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அரச புலனாய்வு சேவையினர் தனது சொந்த உளவுத்துறையை தகவல்களை சேகரிக்கவில்லை என்றும், அவ்வப்போது மற்ற நாடுகள் தொடர்பான சம்பவங்களை வைத்துக்கொண்டு உளவுத்துறை அறிக்கைகளாக தமக்கு சமர்ப்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


பொலிஸ் திணைக்களம், புலனாய்வு பிரிவுகள் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு ஆகியவற்றுக்கு இடையில் ஜூன் 29 முதல் செப்டம்பர் 20, 2018 வரை பகிரப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சஹ்ரானும் அவரது குழுவும் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தியது என்றும் ஜயசுந்தர தெரிவித்தார்.


இதன்போது சஹ்ரான் தாக்குதலை நடத்தத் தயாராக இருப்பது குறித்து ஏன் பொலிஸ் மா அதிபராக இருந்த உங்களுக்கு தெரியவிலலை என்ற கேள்வியை எழுப்பியது.


இதற்கு பதிலளித்த ஜயசுந்தர, பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆரம்பகால தகவல்கள் தமக்கு கிடைத்ததாகவும், அரச புலனாய்வுப்பிரிவிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்கள் காவல் துறையில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.


இதேவேளை குடும்ப திட்டமிடல் குறித்த ஆலோசனைக்காக சஹ்ரானும் அவரது மனைவியும் 2019 மார்ச் மாதத்தில் ஒரு மருத்துவரை சந்திக்கச் சென்றதாகவும், அவர்கள் இருவரும் மற்றொரு குழந்தையைப் பெற திட்டமிட்டுள்ளதாகவும் தனிப்பட்ட தகவல்கள் கிடைத்ததாக சாட்சியான பூஜித் ஜெயசுந்தர கூறினார்.


இந்த மாதிரியான சூழ்நிலையில் ஏன் சஹ்ரான் ஒரு தற்கொலை குண்டை வெடிக்க திட்டமிட்டிருந்தார் என்பது கேள்விக்குரியது என்று அவர் ஆணைக்குழுவின் முன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.