Header Ads



20 க்கு எதிராக இதுவரை 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல்


நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இன்று -23- உயர்நீதிமன்றில் எதிர்ப்பு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல வரைவின் சில சரத்துக்கள் தற்போதைய அரசியலமைப்புக்கு முரணானது என்று அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அந்த திருத்தசட்டமூலத்தின் சர்சைக்குரிய சரத்துக்களை நிறைவேற்ற வேண்டுமாயின் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுசன வாக்கெடுப்பின் ஊடாக அதனை நிறைவேற்ற வேண்டும் என தீர்ப்பு வழங்குமாறு கூறி அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் இன்று உயர்நீதிமன்றில் 20ம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளது.

இந்தநிலையில், 20ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தரணி இந்திக்க கால்லகே, அனில் காரியவசம், மாற்று கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியார் முன்னதாக எதிர்ப்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

No comments

Powered by Blogger.