Header Ads



நல்லாட்சி காலத்தில் நிதி முறைகேடுகள் தொடர்பில் 100 க்கும் அதிக முறைப்பாடுகள்


நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவில் நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

குறித்த அரச வங்கிகள் அதனுடன் தொடர்புடைய தொழிற்சங்கள் மற்றும் பொதுமக்களினால் இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதால்

முறைப்பாடுகளை ஏற்கும் இறுதி திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடுகளை பரிசீலித்த பின்னர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தரப்பினரை அழைத்து வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

5 முன்னணி அரச வங்கிகளில் 2015 ஜனவரி மாதம் 08 ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெற்றுள்ள முறைகேடுகள், அந்த நிறுவனங்களின் இலக்குகளுக்கு முரணாக வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகளுக்கு முரணாக இடம்பெற்றுள்ள சந்தர்ப்பங்கள் மற்றும் செயற்திறனற்ற நடவடிக்கைகளை ஆராய்ந்து, கொடுக்கல் வாங்கல்களை முறையாக மதிப்பீடு செய்வதற்காக இந்த குழு பிரதமரினால் நியமிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு எடுக்கக்கூடிய நாளாந்த, நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பிலான சிபாரிசுகளை முன்வைப்பதற்கும் நட்டத்திற்கு பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகள் மற்றும் வௌிதரப்பினரை அடையாளங் காண்பதற்கும் அரச வங்கி கட்டமைப்பின் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு தேவையான சிபாரிசுகளை முன்வைக்கும் பொறுப்பும் இந்த குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக அரச வங்கி கட்டமைப்பை செயற்றிறன் மிக்கதாக மாற்றுதல் மற்றும் அரச வங்கிகளில் இடம்பெறும் குளறுபடிகளை ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதியமைச்சராக முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு ஏற்ப இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.