Header Ads



பிக்குகளின் எதிர்ப்பை மீறி, நீதி அமைச்சராக அலி சப்ரி நியமனம் - மஹிந்தவை பாராட்டும் மங்கள


(நா.தனுஜா)

பௌத்த பிக்குகளின் எதிர்ப்பையும் மீறி நீதியமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைப் பாராட்டியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு அமைச்சின் கீழ் 'உள்நாட்டு அலுவல்கள்' என்ற விடயதானம்  கொண்டுவரப்பட்டமை சீனப்பாணியிலான 'கண்காணிப்பு மிகுந்த' அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அடித்தளமிடப்படுவதையே காண்பிக்கின்றது என்றும் எச்சரித்திருக்கிறார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று புதன்கிழமை கண்டியிலுள்ள தலதா மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. 

அதன்படி நீதியமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியமிக்கப்பட்டிருப்பதுடன், இராஜாங்க அமைச்சுக்களின் கீழ் பல்வேறு புதிய விடயதானங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மங்கள சமரவீர செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

பௌத்த பிக்குகளின் எதிர்ப்பையும் மீறி நீதியமைச்சராக அலி சப்ரியை நியமித்தமைக்காக பிரதமரைப் பாராட்டுகின்றேன். எஞ்சிய அமைச்சரவை நியமனங்கள் அத்தனை வரவேற்கத்தக்கவையாக இல்லை என்பதுடன் பெரும்பாலும் இராஜாங்க அமைச்சர்களுக்குப் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ள விடயதானங்கள் பெரும் நகைப்பிற்குரியதாக இருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் பாதுகாப்பு அமைச்சிற்குக் கீழான விடயதானங்களில் ஒன்றாக 'உள்நாட்டு அலுவல்களை' உள்ளடக்கி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலானது, சீனப்பாணியிலான கண்காணிப்பு மிகுந்த அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முதல் அடித்தளமாகவே அமைந்திருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

No comments

Powered by Blogger.