Header Ads



நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம், அதிகாரங்கள் கிடைத்துள்ளது, பெளத்த கொள்கையை பாதுகாப்போம்

(ஆர்.யசி)


செய்யாத போர்க்குற்றத்தை செய்ததாக கூறி இராணுவத்தை தண்டிக்க முயற்சித்த ஆட்சியை வீழ்த்தி இராணுவத்தையும், சிங்கள பெளத்த கொள்கையையும் பாதுகாக்கும் அரசாங்கமொன்ரை உருவாக்கியுள்ளோம். எக்காரணம் கொண்டும் இராணுவத்தை சர்வதேச அரங்கில் தண்டிக்க இடமளிக்க மாட்டோம் என்கிறார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்  ரியல் அட்மிரல் சரத் வீரசேகர.


போர் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துக்களை முன்வைத்துவரும் சரத் வீரசேகரவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து வியவிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,


இறுதி யுத்தத்தில் நாம் செய்யாத குற்றமொன்றை செய்ததாக கூறி முன்னைய நல்லாட்சியாளர்கள் ஜெனிவாவில் பொய்யான சாட்சியங்களை கொடுத்தனர். அதனை எம்மால் ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது. அவ்வாறான சூழ்நிலையில் நான்  எந்தவித அரசியல் பின்னணியும், தூண்டுதலும் இல்லாது சுயமாக ஜெனிவாவில் எமது இராணுவத்தை நியாயப்படுத்தி பேசினேன். தொடர்ச்சியான எனது முயற்சியை நான் முன்னெடுத்துக்கொண்டே இருந்தேன். எனினும் மங்கள சமரவீர போன்றவர்கள் செய்த அநியாயத்தின் மூலமாக கடந்த காலங்களில் அளவுக்கு அதிகமான சர்வதேச அழுத்தங்களும் புலம்பெயர் புலி அமைப்புகளின் தலையீடுகளும் ஏற்பட்டது.


ஜெனிவா பிரேரணை கோரிக்கைகளை செய்வ வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் எந்தவொரு நாட்டுக்கும் இல்லை.  ஆனால் நல்லாட்சி அரசாங்கம் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலமாக வலுக்கட்டாயமான தலையீடுகள் ஏற்பட்டது. எமது இராணுவத்தை சர்வதேச அரங்கில் தண்டிக்கும் நிலைமைக்கு கொண்டு சென்றனர். அவர்களின் ஆட்சி தொடர்ந்திருந்தால் இன்று எமது இராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு சென்றிருக்க முடியாது. இராணுவத்தை கைது செய்து சிறையில் அடைக்கும் நிலைமையே உருவாகியிருக்கும். சர்வதேச ஆய்வாளர்கள் அறுவர் இலங்கையை நியாயப்படுத்திய போதும் கூட மங்கள சரமவீர மற்றும் நல்லாட்சி உறுப்பினர்கள் நாம் குற்றவாளிகள் என ஜெனிவாவில் கூறினர். அவற்றையெல்லாம் அங்கிருந்தே நான் பார்த்தேன்.


விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்து நாட்டில் இராணுவத்தின் கரங்களை கட்டிப்போட்டுவிட்டு விடுதலைப்புலிகளையும், கடல் புலிகளையும் சுதந்திரமாக செயற்பட வைத்தவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனும் அதே புலி புராணத்தையே பாட ஆரம்பித்தனர். அதுதான் உண்மை. இவற்றையெலாம் மனதில் வைத்துக்கொண்டே நாம் மக்களை ஒன்றிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தோம். சிங்கள பெளத்த நாட்டில் பெளத்த சிங்களத்தை அழிப்பது எம்மால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இன்று நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம், அதிகாரங்கள் எமக்கு கிடைத்துள்ளது. இப்போது எம்மால் நாட்டின் சிங்கள பெளத்த கொள்கையை பாதுகாப்போம். அதேபோல் எமது இரானுவத்தை பாதுகாக்கும் சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் என்றார்.

1 comment:

  1. Now the Jaffnakmuslim should forget and ignore all the racial statements because publishing these kind of reports Jaffnamuslims induce Muslim community towards racial Philosophy and thoughts. instead this media can tremendously contribute towards co-existence and harmony between Sinhalese and Muslims

    ReplyDelete

Powered by Blogger.