August 09, 2020

பாராளுமன்றம் செல்லும் 'னானா' மாருக்கு, 'தம்பி' யிடமிருந்து ஒரு சிறு மடல்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும், பௌத்த , முஸ்லிம், ஹிந்து, கிறிஸ்தவ, மலே  உட்பட்ட அனைத்து இலங்கை பிரஜைகளது வாக்குகள் மூலமும் புதிய பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்! அல்ஹம்துலில்லாஹ்! வாழ்த்துக்கள்!

இதற்கு நன்றிக்கடனாக  எவ்வித இன, மத, சாதி, மொழி, கட்சி  பாகுபாடும் இன்றி அனைத்து இலங்கை மக்களதும் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய அனைத்து மக்கள் பிரதிநிதிகளாக நீங்கள் அனைவரும் என்றென்றும் திகழ்வீர்கள் என உறுதியாக நம்புகிறோம். இந்த நம்பிக்கையில் கலங்கம் ஏற்படுத்த வேண்டாம் எனவும் மிகவும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

இதனை அடைந்து கொள்ள நீங்கள் ஊரில், குடும்பத்தில், நண்பர்களிடத்தில், மக்களிடத்தில், உள்நாட்டில் வெளி நாட்டில் பட்ட கஷ்ட நஷ்டங்கள் ,  எச்சுப் பேச்சுக்கள்,  துன்பங்கள்,அவமானங்கள்,  சகிப்புத்தன்மைகள்,  இன்னும் இன்னும் எத்தனையோ சொல்ல முடியாத விடயங்கள் இமய மலை போன்றிருந்திருக்கும்! ஆனால் அவை எல்லாவற்றையும்  சவால்களாக எடுத்து அந்த இமய மலை உச்சியைச் தொட்டு விட்டீர்கள்!  பொறுமையாக இருந்து பெருமை சேர்த்துக் கொண்டீர்கள்!

நீங்கள் மக்கள் சேவகன் என்ற வகையில் எமது இஸ்லாமிய வரலாற்றில் எனது  மனதில் பதிந்த ஓரிரு விடயங்களை இங்கு ஜாபகமூட்ட விரும்புகிறேன்.

உலகப்பற்றற்ற எளிமையில் தன்னலமற்ற தூய்மையான சேவை செய்த உமர்(ரழி ) அவர்களதும் அதன் பின் வந்த உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களதும் செங்கோல் ஆட்சி பற்றியும் அவர்களது வாழ்க்கை வரலாறு  பற்றியும் உங்களுக்கு நன்கு தெரியும் படியால் உங்கள் மீது இப்போது சுமத்தப்பட்டிருக்கும் அமானிதங்களை பொறுப்புக்களை மிகவும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள் என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

'ஊரார் கோழி அறுத்து வாப்பாட கத்தம் கொடுப்பது போல்' அல்லாமல் வாழ்க்கைப் போராட்டத்தில் அன்றாடம் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துப் பிழைக்கும் ஏழைப் பிரஜைகளின் வரிப்பணத்தில் உருவான திறைசேரி (பைத்துள் மால்) நிதியினூடாக உங்களுக்குத் தரப்படும் வீடுகள் , வாகனங்கள், கொடுப்பனவுகள் உட்பட்ட அனைத்து சலுகைகளையும் இஸ்லாமிய வழிகாட்டலின் அடிப்படையில் மிகவும் அளவுடனும் சரியாகவும் உபயோகித்து, அவற்றை வீண் விரயம் செய்யாது  ஏனைய சமூகங்களுக்கும், எமது எதிர்கால சந்ததியினருக்கும், முழு உலகத்துக்கும் முன்மாதிரியாக நடந்து காட்டுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். 

சிறந்த குடும்பங்களில் பிறந்து வளர்ந்த நீங்கள் மிகவும் அழகிய முன்மாதிரிகளையும் சிறந்ததொரு கலாச்சாரத்தையும் நாட்டு மக்களுக்கு தடயங்களாக  வைத்துவிட்டுப் போகும் இலங்கை மண்ணின் மைந்தர்களாக உங்களை நாம் காண ஆசைப் படுகிறோம். அல்லாஹ்வும் அவனது றஸூலும் அதனைத் தான் ஏவியும் உள்ளார்கள்!

எல்லாம் வல்ல நாயன் உங்கள் அனைவருக்கும்  நல்லறிவையும், புத்திசாலித்தனத்தையும், சிறந்த தேகாரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியான வாழ்வையும் தந்து நாட்டு மக்களுக்கு சிறந்த சேவை ஆற்றி ஈருலகிலும் வெற்றி பெற மனமார வாழ்த்துகிறோம்.

பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும் 

உங்கள் அன்புத் தம்பி 

ஹரீஸ் ஸாலிஹ்

0 கருத்துரைகள்:

Post a comment