Header Ads



என்னை வீழ்த்த நினைத்தவர்களுக்கு, மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் - முஜிபுர் ரஹ்மான்

பொதுஜனபெறமுனவினரும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் இணைந்து என்னை வீழ்த்துவதற்கு பலவிதத்திலும் முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் அனைத்து சதி திட்டங்களுக்கும் மக்கள் தேர்தலில் சிறந்த பாடத்தை புகட்டியுள்ளனர் என கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

கிராண்பாஸில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே நான் கட்சியிலிருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டேன். மக்கள் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறனர் என்பதை தேர்தல் முடிவுகள் தெட்டத்தெளிவாக காட்டுகின்றது. மத்திய கொழும்பு தொகுதியானது ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த கோட்டையை நாம் தகர்த்திருக்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சி மூவாயிரத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுக்கொண்டது. எம்மை இந்த மக்கள் ஏற்றுக்கொண்டனர். 

நாம் இந்த பகுதியில் பலமிக்கவர்களாக இருப்பதையிட்டு என்மீது பல வகையிலும் குற்றச்சாட்டுகளை ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்வைத்தனர். அவற்றை மக்கள் பொருட்படுத்தாது என்னை பலப்படுத்தியுள்ளதையிட்டு பொதுமக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு 87 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை தந்து ஐக்கிய மக்கள் சக்தியில் கொழும் மாவட்டத்தில் மூன்றாம் நிலையை தந்திருக்கின்றனர். அத்துடன், எனது தொகுதியான மத்திய கொழும்பு தொகுதியை 73 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை தந்து பாரிய வெற்றியை தந்திருக்கின்றமையான எமது கட்சிக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமாகும். 

அத்துடன், என்னை பலவீனப்படுத்துவதற்கு பொதுஜனபெறமுனவினர் பலவகையிலும் செயற்பட்டனர். எனது பிரசார கூட்டங்களுக்கு தடைகளை ஏற்படுத்தினர். எனக்கு இனவாத சாயம் பூசி வெறுப்புப் பிரசாரங்களை மேற்கொண்டனர். இவை முறியடிக்கப்பட்டுள்ளது. 

எனினும், வெற்றிபெற்றிருக்கும் தரப்பானது மக்கள் மத்தியில் விதைத்திருக்கும் வெறுப்புப் பிரசாரம் எதிர்வரும் காலங்களில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்துடன், ஒரு நாடு ஒரே சட்டம் என்ற வகையிலான பிரசாரத்தை முன்னெடுத்து நாட்டில் சிங்கள் பௌத்த வாதத்தை தூண்டி பரப்புரை செய்தனர். இவர்களின் முன்னெடுப்புகள் இந்த ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தும்.

1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அரசாங்கம் தனிச் சிங்கள் சட்டத்தை முன்னிருத்தி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து பெரு வெற்றியை பெற்றது. அதேபோன்றுதான், இன்று ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பிரசாரத்தை முன்னெடுத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கின்றனர். இவர்கள் சட்ட ரீதியிலான் பல சிக்கல்களை ஏற்படுத்தலாம். இதானல் பல்லின சமூகம் வாழும் இந்நாட்டில் பல்வேறு முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படலாம். எனவே, நாம் மிகுந்த அவதானத்துடனேயே எமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது என்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.