Header Ads



சிங்கராஜ வனப்பூங்காவுக்கு ஜனாதிபதி நேரில் சென்றார் - நிலைமைகளை ஆராய்ந்து உத்தரவுகளும் பறந்தன


சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது தனது எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

நெலுவ - லங்காகம வீதி புனர்நிர்மாணத்தின்போது சிங்கராஜ வனப் பூங்காவிற்கு பாதிப்பு ஏற்படுவதாக இலத்திரனியல், அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன் உண்மைத்தன்மை பற்றி நேரில் கண்டறிவதற்காகவும் நிபுணர்கள் மற்றும் பிரதேச மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்காகவும் ஜனாதிபதி அவர்கள் இன்று (29) நெலுவ லங்காகம பிரதேசத்திற்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டார். 

சிங்கராஜ வனப்பூங்கா மற்றும் வீதி புனரமைப்புக்கு உள்ளாகும் கிராம பிரதேசங்களில் சுற்றாடல் முறைமையை பாதுகாத்து நீண்டகாலமாக இருந்து வரும் மக்களின் தேவையான வீதி நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

லங்காகம கிராமம் வலகம்பா மன்னர் காலம் வரை நீண்ட வரலாற்றைக் கொண்ட கிராமமாகும். தேயிலை பயிர்ச் செய்கை இப்பிரதேசத்தின் பிரதான வாழ்வாதாரமாகும். 100 வருடங்களுக்கு மேலாக கிராமவாசிகள் சிங்கராஜ வனப் பூங்காவை அண்மித்ததாக உள்ள வீதியின் தெனியாய மற்றும் நெலுவ பகுதிகளுக்கு தேயிலை கொழுந்தினை எடுத்துச் செல்கின்றனர். 

நெலுவ, உடுகம, கராபிட்டிய வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளை எடுத்துச் செல்வதற்கும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் நாளாந்த ஜீவனோபாய நடவடிக்கைகளில் வீதிப் போக்குவரத்து பெருந் தடையாக உள்ளது. இதற்கு தீர்வாக “நெலுவ – லங்காகம - பிட்டதெனிய” வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 

சிங்கராஜ வனப்பூங்காவிற்கு பாதிப்பு ஏற்படுவதாக சூழலியலாளர்கள் சிலர் முன்வைத்த குற்றச்சாட்டு காரணமாக புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்திருந்தார். 

வீதி அபிவிருத்தி, வன ஜீவராசிகள், வனப்பூங்கா, சுற்றாடல் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சு அதிகாரிகளுடனும் புனரமைக்கப்படும் வீதியை ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார். 

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் இராணுவத்தினர் வீதி புனர்நிர்மாணப் பணிகளை பொறுப்பேற்றுள்ளனர். 18 கிலோமீற்றர் தூரத்தை 3 மாதக் காலப்பகுதியில் நிறைவு செய்வதற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வீதி நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் லங்காகமவில் இருந்து தெனியாயவிற்கு செல்வதற்கு செலவான சுமார் 4 மணி நேரம் 45 நிமிடங்களாக குறைவடையும். 

புனர்நிர்மாணப் பணிகளின்போது வனப்பூங்காவிற்கு அல்லது சுற்றாடல் முறைமைக்கு பாதிப்பு ஏற்படக்கூடாதென ஜனாதிபதி அவர்கள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார். 

புனர்நிர்மாணப் பணிகளின் பின்னர் நெலுவையிலிருந்து தெனியாயவிற்கு பஸ் வண்டி ஒன்றை நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பபட்டது. 

லங்காகம கிராமத்தில் உள்ள சங்கிலிப் பாலத்திற்கு பதிலாக 120 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்ட பாலம் ஒன்றும் இதனுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்படுகின்றது. வத்துகல, லங்காகம, நில்வெல்ல, கொலன்தொட்டுவ மற்றும் பிட்டதெனிய கிராமங்களில் உள்ள பிள்ளைகளுக்கு பாடசாலைக்கு செல்வதில் இதுவரை இருந்து வந்த தடை இதன் மூலம் நீக்கப்படும்.

சுமார் 700 குடும்பங்கள் வசிக்கும் லங்காகம பிரதேசத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் 03 மரக்கன்றுகள் வீதம் இலவசமாக வழங்கி 2100 மரக் கன்றுகளை நாட்டி அவர்களினாலேயே வனப்பூங்காவிற்கு பங்களிப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார். 

சிங்கராஜ வனப்பூங்கா மற்றும் சுற்றாடல் முறைமையை பாரம்பரியமாக பாதுகாத்து வந்த தங்களுக்கு தமது அடிப்படை தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு எதிராக சூழலியலாளர்கள் குழுவொன்று விடயங்களை சரியாக அறியாது அழுத்தம் கொடுத்து வருவதாக குறிப்பிட்டு பிரதேச வாசிகள் அதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். தந்தை ஒருவர் தனது சிறு பிள்ளையை சுமந்தவாறு நாம் பட்ட கஷ்டங்களை எமது பிள்ளைகள் படுவதற்கு இடம் வைக்க வேண்டாம் என்று ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டார். 

அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பிரதேசவாசிகளுக்காக வீதி புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட தீர்மானத்தை மகாசங்கத்தினர் வரவேற்றனர். 

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சுற்றடால் அமைச்சர் மஹிந்த அமரவீர, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் மொஹான் பி. த சில்வா , பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பத் அத்துகோரல, நிபுன ரணவக்க, சந்திம வீரக்கொடி, வீரசுமன வீரசிங்க ஆகியோரும் மாகாண ஆளுநர் விலீ கமகே மற்றும் அமைச்சு அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

மொஹான் கருணாரத்னபணிப்பாளர்ஜனாதிபதி ஊடகப் பிரிவு 29.08.2020 

2 comments:

  1. What about Vilpaththu ???

    ReplyDelete
  2. What about Vilpathu Road construction ??? Will you complete it ?

    ReplyDelete

Powered by Blogger.