August 21, 2020

முஹர்ரம் மாதமும், ஆஷுரா தினத்தில் தவிர்க்கப்பட வேண்டியவைகளும்

அல் ஹாபிழா – அல் ஆலிமா உம்மு ஹபீப் பின்தி இஸ்ஸத்

முஹர்ரம் மாதம் ஆரம்பித்து விட்டது. இது இஸ்லாத்தின் முதல் மாதமாகும்.  மக்கள் இந்த மாதத்தை வரலாறு நெடுகிலும் கண்ணியப் படுத்தியே வந்திருக்கின்றனர். அறியாமை காலத்து மக்கள் கூட இம் மாதத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கக்கூடியவர்களாக இருந்துள்ளனர்.

இந்த மாதம் வந்து விட்டால் ஜாஹிலிய்யாஹ் காலத்து மக்கள் கூட யுத்த நிறுத்தங்கள் செய்து கொள்வார்கள்;. யாரும் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டார்கள். அனைவரும் தமது வியாபாரம் மற்றும் தொழில்களில் ஈடுபடுவார்கள்.

இஸ்லாமிய மார்க்கமும் இந்த மாதத்தின் புனிதத்துவத்தையும்  கண்ணியத்தையும் அதே நிலையில் தரிபடுத்தியுள்ளது.

பரிசுத்தமான குர்ஆனில் அல்லாஹ் பின் வருமாறு கூறியுள்ளான்.

 اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَا ارْبَعَةٌ حُرُمٌ‌ ؕ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ) التوبة :(36

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். (தவ்பா:36)

இம்மாதத்தில் ஒன்பதாவது நாள் தாஸுஆ என்பதாகவும் பத்தாவது நாள் ஆஷுரா என்பதாகவும் கூறப்படும்.

இத்தினங்களில் நோன்பு வைப்பதை இஸ்லாம் சுன்னத்தாக்கியிருப்பதுடன். ஆஷுரா நாளில் நோன்பு நோற்பதால் கடந்த வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பது ஹதீஸ்கள் மூலம் தெளிவாகின்றது.

இவை இவ்வாறு இருக்க வழிகெட்ட அமைப்புகளின் சூழ்ச்சியில் வீழ்ந்து விடாமல் நாம் எம்மையும் எம்குடுப்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வதும் கட்டாயமாகும்.

ஆஷுரா நாளை மையப்படுத்தி இரவு வணக்கங்களில் ஈடுபடுவது, நபி(ஸல்) அவர்களின் பேரக் குழந்தை ஹுசைன் (ரழி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட  தினம் என்பதற்காக சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்து, துக்க அனுஷ்டானம் மேற்கொள்வது, அத்தினத்திற்காக பிரத்தியேகமாக குளிப்பது, சுர்மா இடுவது, மணம் பூசுவது, எண்ணெய் தேய்ப்பது, சாயம் பூசுவது, நின்று வணங்குவது மற்றும் விஷேட துஆ மஜ்லிஸ்கள் ஏற்பாடுசெய்வது பேன்ற விடயங்கள் மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவையாகும். அவற்றை கட்டாயம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் சிலர் தாம் அஹ்லுல் பைத்தினர் மீது அன்பு வைத்திருப்பதாகக் கூறி அத்தினத்தில் கன்னத்தில் அறைந்து கொள்கின்றனர், தமது ஆடைகளை கிழித்துக்கொள்கின்றனர். தும்மைத்தாமே காயப்படுத்தி இரத்தம் ஓட்டுகின்றனர்,  அதையும் மீறி தனது கைக் குழந்தைகளைக் கூட காயப்படுத்துகின்றனர். இவைகள் முற்றும் முழுதாக இஸ்லாத்திற்கு முரணானதே

நபி (ஸல்) கூறினார்கள்:

عن عبد الله رضي الله عنه، قال: قال النبي صلى الله عليه وسلم: «ليس منا من ضرب الخدود، وشق الجيوب، ودعا بدعوى الجاهلية» البخاري:1298

கன்னங்களில் அறைந்து கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சேர்ந்தவன் அல்லன்.'  என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) அறிவித்தார்கள். (புகாரி:1298)

சில வழிகேடர்கள் இத்தினத்தில் ஏழை எளியவர்களுக்கு காசு பணத்தைக் காட்டி சில அமர்வுகளை  ஏற்பாடு செய்கின்றனர். பின் அந்நிகழ்வின் புகைப்படங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கின்றனர்.

எனவே ஒவ்வொரு முஸ்லிம் உள்ளங்களும்  விழிப்புடன் இருப்பதுடன் எச்சந்தர்ப்பத்திலும் தமது ஈமானுக்கு பங்கம் விளைவிக்கும் எந்நிகழ்வினும் கலந்துகொள்ளாமல் தன்னை பாதுகாத்துக் கொள்வது காலத்தின் மிகத் தேவையாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மை ஈமானுடன் வாழ்ந்து ஈமானுடன் மறணிக்கச்செய்வானக! ஆமீன்

1 கருத்துரைகள்:

Post a comment