Header Ads



விளையாட்டு வீரரான நாமல், சிறப்பாக செயற்படுவாரென்று நம்புகிறோம் - ஐக்கிய மக்கள் சக்தி வாழ்த்து


(நா.தனுஜா)

புதிதாகப் பதவியேற்றுக்கொண்டிருக்கும்  அமைச்சரவைக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இனிவரும் காலத்தில் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார். அத்தோடு ஒரு பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று புதன்கிழமை கண்டி தலதா மாளிகையில்  பதவி யேற்றுக்கொண்டது. புதிதாக நியமனம் பெற்றிருக்கும் அமைச்சரவைக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, மேலும் கூறியிருப்பதாவது:

நாமல் ராஜபக்ஷ, அஜித் நிவாட் கப்ரால் உள்ளடங்கலாக புதிதாகப் பதவியேற்றுக்கொண்டிருக்கும்  அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள். எதிர்வரும் காலத்தில் நாம் பொறுப்பு வாய்ந்த ஒரு எதிர்க்கட்சியாக செயற்படுவோம். ஆனால் நாட்டுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய அதேவேளை, ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பாரிய பொறுப்பு தற்போது அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அதேவேளை விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் நாமல் ராஜபக்ஷவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக வாழ்த்துக் கூறியிருக்கும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, அரசியலும் ஊழலும் அற்ற - சுதந்திரமான  விளையாட்டுத்துறைக்கான சூழலை ஏற்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வார் என்று நம்புவதாகவும், நாமல் ராஜபக்ஷவும் ஒரு விளையாட்டு வீரராக இருப்பதால் இவ்வமைச்சில் சிறப்பாக செயற்படுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். 

2 comments:

Powered by Blogger.