Header Ads



இந்த செய்தியை படித்த பின், புகைப்படத்தை பார்க்கும்போது, நாம் ஒருநிமிடம் திகைத்திருப்போம்

தனது மனைவி குழந்தையுடன் முதல் விமானப் பயணம் மேற்கொண்ட ஒவ்வொருவரும் இதுபோன்ற ஒரு செல்பி எடுத்திருப்பார்கள்!

அதுபோன்ற ஒரு செல்பிதான் துபாயிலிருந்து விமானம் கோழிக்கோடு கிளம்பும்போதும், பிலாச்சேரி ஷர்புதீன் எடுத்திருக்கிறார்!

இந்த செய்தியை படித்த பின்... இந்த புகைப்படத்தை பார்க்கும்போது நாம் ஒரு நிமிடம் திகைத்திருப்போம்!

இன்று இறங்கப்போவதில்லை இறக்கப்போகிறோம் என்று, ஷர்புதீனுக்கு

3 மணி நேரத்திற்கு முன்பு ஒரு மன அலசல் நிகழ்ந்திருக்கின்றது!

சிலருக்கு மரணம் முன்கூட்டியே தெரியப் படுத்தப்படுமோ என்னவோ?

இந்த ஷர்புதீன் விமானம் ஏறும் முன்பு தனது நண்பரிடம் மனம் பாரமாயிருக்கிறது என்று சொல்லி... லாக்டவுனில் ஏற்பட்ட வேலை இழப்பால்... சிரமப்படுபவர்களுக்கு சாப்பாடு வாங்கித் தரச் சொல்லி... தனது நண்பரிடம் பணம் கொடுத்திருக்கிறார்!

நாடு திரும்புகையில்..

விமானம் இறங்கும்போது பச்சைப் பசேலென்று தெரியும் உயர்ந்த மரங்களின் போன்சாய் தோற்றங்களும், கடற்கரைகளும் தெரியும்போதே, மண்வாசனை வர ஆரம்பித்துவிடும்!

3 மணி நேரம் காத்திருந்தவர்கள், மண் வாசனை உணர ஆரம்பித்தவுடன் , பொறுக்கமுடியாமல் விமானம் தரை இறங்கிய நொடியிலிருந்தே, ஹேண்ட் லக்கேஜ்களை எடுக்க ஆரம்பிப்பார்கள்!

சிலர் விமானம் நிற்கும் முன்னரே, 

எழுந்து நிற்பார்கள், ஏர்ஹோஸ்டஸ் கத்தினாலும் கண்டுகொள்ளாமல்!

அந்த நிமிடங்கள் அவ்வளவு பரவசமாய் இருக்கும். ஏர்போர்ட்ட்டின் வெளியே தனக்காக காத்திருப்பவர்களை அப்போதிலிருந்தே கற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்!

யார் யாரெல்லாம் விமான நிலையத்தின் வெளியே காத்திருப்பார்கள், விமான நிலையத்தில் வந்திருக்கும் மற்ற பயணிகளின் உறவினர்களின் ஏக்கமான பார்வைகள், அவர்களுக்குள் நடக்கும் பிரிவின் தழுவல்கள், ஆனந்த கண்ணீர்கள், 

தன்னை அழைத்துவர வந்திருக்கும் வாகனம், வாகனத்தில் யார் முன்னால் அமர்வது? யார் பின்னால் அமர்வது?, செல்லும் வழியில் எங்கு நிறுத்தி சாப்பிடுவது? எத்தனை மணிக்கு சென்றடைவது? தான் ஊர் போய் சேரும் வரையில் உள்ள காட்சிகளெல்லாம் விமானம் தரையிறங்கும் அந்த நேரத்தில்தான் அவர்கள் நினைத்துப் பார்ப்பார்கள்!

அதே நேரத்தில்தான், அதே அந்த நேரத்தில்தான் இந்த விபத்தும் நடந்திருக்கின்றது!

கொரோனாவின் பாதிப்பில், நாட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்த நேரத்தில், தேவதூதர்களைப் போல வந்த, வந்தேபாரத் விமானங்களில் ஊர் போய் சேர்ந்து...

எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் , உயிர் தப்பியதே பெரிய விசயம் இனி திரும்பி செல்ல வேண்டாம், ஊரோடு இருக்கலாம் என்று இந்த எமர்ஜென்சி நேரத்தில் தப்பி வந்தவர்களுக்கு, நேர்ந்த இந்த விபத்து நினைத்துப்பார்க்க இயலாத சோகம்!

இதோ பெட்டிகள் எல்லாம் சிதறிக்கிடக்கின்றன!

பார்த்து பார்த்து மாதக்கணக்காய் சேமித்து வைத்து கட்டப்பட்ட அட்டைப்பெட்டி!

அவர் தன் அட்டைப்பெட்டியில் எழுதிய அந்த மார்க்கர் பேனாவின் மை கூட காய்ந்திருக்காது!

துபாய் டு கோழிக்கோடு என்றுதானே அவர் எழுதினார்...

பின் யார் மாற்றியது துபாய் டு மரணம் என்று? 

மழைபொழியும் அந்த கோழிக்கோட்டின் இரவில் நனைந்துகொண்டே, ஒரு கட்டஞ்சாயாவுடன், தனது மீதி நாட்களை எப்படி கழிக்கலாம் என்று குடும்பத்துடன் பேச நினைத்திருப்பார்!

ஆனால் விமானத்தின் உடைந்த பாகத்தில் சிக்கி, அந்த கடைசி மழையில் நனைந்து கொண்டே தான் தன் உயிர் பிரியப் போகிறது என்றும்,

தான் தேடி வந்த புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க போகும் முன்னரே...

தன்னை இந்த இரவில் தேடிக்கொண்டிருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அவருக்கு தெரிந்திருக்காது!

இறங்கியவுடன் 

உறங்கியிருக்க வேண்டியவர்,

உறங்கியபடியே இறந்திருக்கின்றார்!

கொஞ்சம் சில நொடிகள் அந்த தருணம் தப்பியிருந்தால், அவர் இப்போது அந்த கோழிக்கோடு மழையில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கலாம்!

அந்த கடைசி மழை நம் எல்லோருக்காகவும் ஒருநாள் பொழியும், அதுதான் கடைசி மழை என்று தெரியாமலேயே!

பிராத்தனைகளைத் தவிர வேறு சமாதானம் கிடையாது. உயிரிழந்தவர்களுக்காகவும், கொடும் காயமடைந்தவர்களுக்காகவும், சிறுகாயங்களுடன் உயிர் பிழைத்தோருக்காகவும் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திப்போம்!

திருப்பூர்

No comments

Powered by Blogger.