Header Ads



யார் இந்த, மஹிந்த யாப்பா அபேவர்தன...?


இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். 9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று காலை 9.30க்கு ஆரம்பமானது.

இதன்போது, நாடாளுமன்றம் தொடர்பிலும், நாடாளுமன்ற வர்த்தமானி குறித்தும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க முதலில் உரை நிகழ்த்தினார்.அதன்பின்னர், சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.

சபை முதல்வர் தினேஷ் குணவர்தன புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை முன்மொழிந்த அதேவேளை, அவரது பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார வழிமொழிந்தார்.

அதன்பின்னர், மஹிந்த யாப்பா அபேவர்தன 9ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின் சபாநாயகர், இலங்கையின் மூன்றாவது பிரஜையாவார்.

இதையடுத்து, அனைத்து கட்சிகளின் தலைவர்களும் புதிய சபாநாயகருக்கு வாழ்த்துகளை தெரிவித்து உரை நிகழ்த்தியிருந்தனர். அதன்பின்னர், பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. பிரதி சபாநாயகராக ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவு செய்யப்பட்டதுடன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டார்.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

யார் இந்த மஹிந்த யாப்பா அபேவர்தன?

இலங்கையின் தென் பகுதியின் மாத்தறை மாவட்டத்திலுள்ள பெரகம பகுதியில் 1945ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் தேதி மஹிந்த யாப்பா அபேவர்தன பிறந்துள்ளார்.

மாத்தறையில் ஆரம்ப கல்வியை பயின்ற மஹிந்த யாப்பா அபேவர்தன, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மேல் நிலை கல்வியை தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், 1983ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த யாப்பா அபேவர்தன, மாத்தறை - ஹக்மீமன தொகுதியில் போட்டியிட்டு, தனது முதலாவது நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்கும் நோக்குடன் 1987ஆம் ஆண்டு இந்திய மற்றும் இலங்கை ஆகிய நாடுகளினால் கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு, நாடாளுமன்றத்தில் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிராக வாக்களித்திருந்தார்.

கட்சியின் தீர்மானத்தை மீறி வாக்களித்தமைக்காக அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கட்சி உறுப்புரிமையை பறித்துள்ளார்.

அதன்பின்னர், காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத்முதலி ஆகியோரின் தலைமைத்துவத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியில் மஹிந்த யாப்பா அபேவர்தன இணைந்துகொண்டுள்ளார்.

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 1993ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, 1994ஆம் ஆண்டு மஹிந்த யாப்பா அபேவர்தன தென் மாகாண முதலமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார்.

தென் மாகாணத்தில் மிகவும் சிறந்த முறையில் செயற்பட்ட முதலமைச்சர் என்ற பெயரையும் மஹிந்த யாப்பா அபேவர்தன தன்வசப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக மீண்டும் நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்ற மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர், கலாசாரம், தேசிய மரபுரிமைகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டதுடன், பின்னர் விவசாய அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதித் தலைவராகவும் மஹிந்த யாப்பா அபேவர்தன கடமையாற்றியுள்ளார். இவ்வாறான பின்னணியில், இந்த முறை மஹிந்த யாப்பா அபேவர்தன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றுக்கொண்டார்.

- BBC - Tamil

3 comments:

  1. 1983 இல் எப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது? 1977 இன் பின்னர் 1989 இலேயே நாடாளுமறத் தேர்தல் நடைபெற்றது.

    ReplyDelete
  2. விளக்கா குடமா என்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது

    ReplyDelete
  3. Muslimgalukku nirayya seway seyza oruwar muslimgalil wehuwaanor iwarukku wakkalippar

    ReplyDelete

Powered by Blogger.