August 31, 2020

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்குச் சென்று கண்ணீர் வடிப்பதில் பிரயோசனம் இல்லை. அது முதலைக் கண்ணீராகும்(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும் கடமைகளை முறையாக நிறைவேற்றாத அதிகாரிகள் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவிற்குச் சென்று முதலைக் கண்ணீர் வடிப்பதில் பிரயோசனம் இல்லை. இவ்வாறான அதிகாரிகளின் சீருடை நீக்கப்பட வேண்டும் என்று மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்தார்.

கடமையை உரிய முறையில் நிறைவேற்றாத அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் தேடிக் கொண்டிருப்பதை விட , தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்களை இனங்காண்பதே உகந்ததாகும். 

குற்றவாளிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எதிர்பார்ப்பதாகவும் கர்தினால் தெரிவித்தார்.

பிரித்தானியர்களது ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்காக பாடுபட்ட தலைவர்கள்  அனைவரும் இன , மத பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட்டனர். 

இதன் போது இனம் , மதம் , மொழி என எந்த பிரிவினையும் அற்று நாம் வாழ்ந்தோம். எனினும் தற்போது சுதந்திரத்தின் பின்னரான 72 வருட வரலாற்றில் இந்த ஒற்றுமை வீழ்ச்சியடைந்துள்ளது. 

நாட்டின் ஆதி மொழி எது ? ஆதிக்குடிகள் யார் ? நாடு யாருக்கு உரிமையுடையது ? இலங்கை ஒருமித்த நாடா அல்லது சமஷ்டி நாடா ? என்ற விடயங்களில் முரண்பட்ட கருத்துக்களுடன் விவாதித்து அவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இந்நாட்டின் மொழி ஒன்று தான் என்று தோன்றிய கருத்து நீண்டதொரு யுத்தம் ஏற்படக் காரணமானது. ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இதன் போது உயிரிழந்தனர். 

கிராமங்கள் பல அழிந்தன. அரசாங்கத்தின் சொத்துக்கள் அழிந்தன. வெளிநாடுகளுக்கு நாம் கடனாளிகளானோம். ஒரு இனத்தவர் மாத்திரமே சுவாசிக்க வேண்டும் அல்லது ஒரு கொள்கை மாத்திரமே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமே இவற்றுக்கு காரணமாகும். 

நாட்டுக்குள் இலங்கையர்கள் என்ற தனித்துவத்தை கட்டியெழுப்புவதற்கு பதிலாக இனம் , மதம் , மொழி அடிப்படையில் இன்றும் பிரிந்து செயற்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

மத அடிப்படைவாதம் இன்று வியாபித்துக் கொண்டிருக்கிறது. மத அடிப்படைவாதம் இளைஞர் யுவதிகளுக்கு கற்பிக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டில் பல அழிவுகள் ஏற்பட்டன.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களுக்கு மதத் தலைவர்களும் பொறுப்பு கூற வேண்டும். அனைத்து மத மக்களை ஒன்றிணைப்பதற்கு பதிலாக சிறு சிறு துண்டுகளாக பிரித்து அவற்றில் சிறைபடுத்திக் கொண்டு துன்பப்படுகின்றோம். இதனால் அப்பாவி மக்களும் இளைஞர் யுவதிகளும் துன்பப்படுகின்றனர். மதம் என்பது மனிதர்களை மரணிக்கச் செய்வதற்கல்ல. மக்களை வாழ வைப்பதற்காக எமக்கு உந்துதல் அளிப்பதே மதமாகும். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் யார் என்று உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். தமது கடமையை உரிய முறையில் ஆற்றாத அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையுமே தற்போது தேடிக் கொண்டிருக்கின்றனர். குண்டுகளை வெடிக்கச் செய்தவர்கள், இவற்றுக்கு பணம் வழங்கியவர்கள் , இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறானவர்கள் இறுதி வரை இனங்காணப்படாவிட்டால் மீண்டுமொரு முறை இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளன. ஜனாதிபதி ஆணைக்குழு இதன் பின்னணியில் இருப்பவர்களை தேடிச் செல்லுமானால் அது சிறந்தது என்று நான் எண்ணுகின்றேன்.

குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கின்றோம். 

269 உயிர்கள் பொய்யாக இறக்கவில்லை. அன்று கொச்சிக்கடை திருத்தலத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்திருந்தால் மேலும் பலர் இறந்திருப்பார்கள். இதனை மறப்பது உகந்ததல்ல. மனிதர்களைக் கொல்வது தான் மதம் என்றால் அவ்வாறானதொரு மதத்தால் எவ்வித பயனும் இல்லை.

குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றேன். 

அதனை விடுத்து அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தப்பிச் செல்வதற்கு ஏதேனுமொரு அரசாங்கம் இடமளிக்குமாயின் அந்த அரசாங்கத்தை நான் எதிர்க்கின்றேன். 

கடந்த அரசாங்கம் இது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவ்வாறு தகவல்கள் தெரிந்து கொண்டு தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவிற்குச் சென்று கண்ணீர் வடிப்பதில் பிரயோசனம் இல்லை. அது முதலைக் கண்ணீராகும்.

கடமைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான சட்ட திட்டங்கள் இருக்கின்றன. இருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவ்வாறில்லை எனில் மனிதாபிமான ரீதியிலேனும் சிந்தித்து இவ்வாறானதொரு அபாயமான அச்சுறுத்தல் உள்ளது என்று எமக்கு அறிவித்திருக்கலாம். கடமையை பொறுப்புடன் நிறைவேற்றாத அதிகாரிகளின் சீருடை அகற்றப்பட வேண்டும் என்றார். 

2 கருத்துரைகள்:

Let us hope that the Govt. Identifies and Punishes not only those who were directly involved in the Easter Attacks like the Planners and Financiers but also ALL the Officials including the Political Leaders who took NO Action to Stop the Attacks even when they had Prior Intelligence Reports which Precisely Warned about the Targets nd Dates of Attacks.

I strongly support Brother Muhandiram comment...

If the government is straight, It should act punishing all those direct and indirectly involved personnel and these responsible authorities who failed to act to avoid the incident.

Post a comment