Header Ads



வாள்வெட்டுக் குழுக்களை கைது செய்யுங்கள், மாணவனின் உடலை வீதியில் வைத்து போராட்டம்


வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குமாறு கோரி வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த செங்கலடி மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு - கொம்மாதுரை பகுதியில் வைத்து நேற்றைய தினம் இரு குழுக்களுக்கு இடையே மோதலில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான 15 வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இந்த நிலையில் குறித்த மாணவனின் இறுதி ஊர்வலம் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதன்போது செங்கலடி கொழும்பு மற்றும் பதுளை வீதிகளை மறித்து இறுதி ஊர்வலத்தில்கலந்து கொண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன் போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இந்த வாள் வெட்டு குழுக்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோசங்களை முன்வைத்து உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர்.


செங்கலடி பாடசாலையொன்றில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் உயிரிழந்த மாணவனை, அதே பாடசாலையில் கற்கும் கொம்மாதுறையை சேர்ந்த மாணவன் தாக்கியுள்ளார்.


தாக்குதலுக்கு இலக்கான செங்கலடி மாணவனை அவர்களது உறவினர்கள் மற்றைய மாணவனின் வீட்டிற்கு அழைத்து சென்று தாக்கிய விடயம் தொடர்பில் கேட்ட போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் கொம்மாதுறையை சேர்ந்தவர்கள் செங்கலடியை சேர்ந்தவர்களை தாக்கியுள்ளனர்.


இதன்போது வாள்வெட்டு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவரும் நிலையில் பாரிய வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான செங்கலடியை சேர்ந்த மாணவன் ரமணன் திவ்வியநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இம்மாணவனின் உறவினர்களான சசிகுமார் மற்றும் பிரேமநாதன் ஆகிய இருவரும் பாரிய வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


சம்பவத்தை அறிந்த ஏறாவூர் குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டு மாணவனின் சடலத்தை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலும், காயங்களுக்குள்ளானவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளனர்.


கொலைக்கு காரணமானவர்கள் தப்பிச்சென்றுள்ள போதும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நவீன ரக வாள் ஏறாவூர் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.


இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.