Header Ads



ஜனாதிபதி கோட்டாபய இன்று, அதிகாரிகளிடையே நிகழ்த்திய உரை


நாம் இம்முறை இராஜாங்க அமைச்சுக்களை வித்தியாசமான முறையில் ஏற்படுத்தி இருக்கிறோம். அனைத்து அமைச்சுக்களும் எளிமையானது. கல்வி அமைச்சை எடுத்துக்கொள்ளுங்கள் அனைத்து கல்வித் துறைகளும் ஒரு இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அது குறித்து முழுமையான ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பணிகளை செய்வதற்கு ஏற்ற வகையிலேயே அவ் அமைச்சு ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி தேர்தலின்போது மக்கள் மத்தியில் சென்ற வேளையில் மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கண்டறிந்து அவற்றை தீர்க்கும் வகையிலேயே இந்த அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

நாம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மேல் மட்டத்தை மட்டுமே பார்க்கிறோம். கீழ் மட்டங்களை பார்ப்பதில்லை. அவற்றை நாம் மறந்து விடுகிறோம். உதாரணமாக குடிநீர் பிரச்சினை இலங்கையில் உள்ள ஒரு முக்கியமான பிரச்சினையாகும். இதனை நாம் கட்டாயமாக தீர்க்க வேண்டும். யானைகள் மனிதர்கள் மோதல் காரணமாக தினமும் மக்கள் இறக்கின்றனர். யானைகளை கொல்லுவதும் ஒரு பாரிய பிரச்சினையாகும். இவற்றுக்கு ஒரு நிலையான தீர்வுகளை கண்டறிய வேண்டும். தற்காலிக தீர்வுகள் பயன் தராது. 

அடுத்ததாக பொருளாதாரத்தை எப்படி இயக்குவது என்பது பற்றி நாம் அதிகம் கவனம் செலுத்தியுள்ளோம். குறிப்பாக விவசாய கைத்தொழில் பெருந்தோட்ட கைத்தொழில் துறைகளுக்கு அதிக தேவை உள்ளது. அவற்றுக்கு நாம் கீழ் மட்டங்களுக்குச் சென்று இராஜாங்க அமைச்சுக்களை ஒதுக்கியுள்ளோம். 

நான் இராஜாங்க அமைச்சர்களுடன் கலந்துரையாடி வருகின்றேன். இதன்போது நான் அவர்களுக்கு எமது திட்டங்களில் வருடா வருடம் எப்படி முன்னோக்கி செல்வது என்பது பற்றி கலந்துரையாடி உள்ளேன். செயலாளர்களுக்குள்ள முக்கிய பணி ஐந்து வருடத் திட்டத்தை வகுப்பதாகும். அத்திட்டத்தில் வருடா வருடம் நாம் எப்படி இலக்குகளை அடைந்து கொள்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டும். இலக்குகளை அடைந்து கொள்வதுதான் முக்கியமானதாகும். 

இப்பணிகளை நிறைவேற்றுவதற்கு செயலாளர்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. 

நாம் அரசசேவையையும் ஏனைய தகைமையையும் கருத்திற்கொண்டு இவற்றுக்கு பொருத்தமானவர்கள் எனக் கருதும் முக்கியமானவர்களையே நியமித்துள்ளோம். எனவே நீங்கள் இத்துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். எப்போதும் மக்கள் மத்தியில்  சென்று மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும். தமக்கு கீழ் உள்ள நிறுவனங்களை மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

இன்று மக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இரண்டாவதாக அரச சேவை மீதுள்ள நம்பிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலைமையில் தான் நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல. 

இந்த தேர்தல் முடிவுகளை நாம் சரியாக ஆராய்ந்து பார்த்தால் அதனைத்தான் மக்கள் சொல்கிறார்கள். இந்த இரண்டிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கு சேவையை வழங்கும் அரசியல் கலாசாரத்தையும் மக்கள் சேவை செய்யும் அரச சேவையையும் உருவாக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

இன்று பாரியதொரு அரச சேவை உள்ளது. எதிர்காலத்தில் மேலும் 150,000 பேர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். அப்போது இந்த எண்ணிக்கை 18 இலட்சமாக அதிகரிக்கும். இந்த அரச சேவையின் ஊடாக அனைத்து துறைகளுக்கும் சிறந்த முறைமை ஒன்று உள்ளது. அந்த முறைமையை நடைமுறைப் படுத்துவதுதான் தேவையானதாகும். 

நாம் கொவிட் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளோம். இதற்கு முக்கிய காரணம் எமது சுகாதார சேவையைாகும். எங்களிடம் சிறந்த சுகாதார சேவை ஒன்று உள்ளது. எனினும் நாம் மக்களிடம் செல்கின்றபோது இன்னும் சுகாதார சேவையை முன்னேற்ற வேண்டிய பெருமளவு தேவை உள்ளது. இச் சேவையை முன்கொண்டு செல்ல பெரும் பணிகளை எமக்கு செய்ய முடியும். நாம் மக்களிடம் செல்லும்போது வைத்தியர்கள் இல்லை, தாதியர்கள் இல்லை, வளங்கள் இல்லை, நாம் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இது போன்ற பல குறைபாடுகளை முன் வைக்கின்றனர். எனினும் சிறந்த சுகாதார சேவையின் மூலம் மேலும் பெருமளவு பணிகளை எமக்கு செய்ய முடியும். இதனைத்தான் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

நாடொன்றை கொண்டு நடாத்துவதற்கான அந்நியச் செலாவணி பிரதானமாக தேயிலை முதல் நெல் வரையான இந்த கீழ் மட்டத்தில் வேலை செய்யும் மக்களினாலேயே கிடைக்கின்றது. நெல்லுக்கு, அரிசிக்கு நிர்ணய விலையை வழங்குவதற்கு நாம் எவ்வளவு முயற்சி எடுக்கின்றோம். அரச சேவையினால் இந்த உற்பத்தி செய்யப்பட்ட நெற்களை விநியோகிப்பதுதான் செய்யப்படுகின்றது. விவசாயி கஷ்டப்பட்டு அனைத்தையும் செய்து வழங்கியதும் நுகர்வோருக்கு இந்த அரிசியை வழங்குவதையே பாரிய வேலை என்று நாம் நினைக்கின்றோம். நாம் மறக்கக் கூடாது. எமக்கு சரியான நேரத்துக்கு நீரை வழங்க முடியாவிட்டால், சரியான நேரத்துக்கு உரத்தை வழங்க முடியாவிட்டால், எமது சேவையில் என்ன பயன் இருக்கின்றது? இவற்றையே நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்போது கிராமத்தை எடுத்துக்கொண்டால், கிராம சேவகர் பிரிவொன்றை எடுத்துக்கொண்டால் அரச அதிகாரிகள் பலர் இருக்கின்றார்கள். பல்வேறு பிரிவுகளில். இருபதுக்கு மேற்பட்டோர் இருக்கின்றார்கள். ஆனால் அவற்றை நாம் இயங்கவைக்க  வேண்டும். அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டும் இவ்வேலைகளை. விஷேடமாக அமைச்சர்களுக்கு, இராஜாங்க அமைச்சர்களுக்கு, நினைவுபடுத்த வேண்டும், அதுபோன்று செயலாளர்கள், இந்த இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களின் பங்களிப்பும் பாரிய பகுதியாகும். தமக்கு கீழுள்ளவர்களை உற்சாகப்படுத்துவது ஒரு விடயமாகும். எனக்குத் தெரியும். பாதுகாப்பு செயலாளராக நான் எவ்வளவு காலத்தை செலவிட்டேன் எனக்கு கீழ் இருந்த சேவைகளை உற்சாகப்படுத்துவதற்கு. உற்சாகப்படுத்துவதன் மூலம் பாரிய பயன்களை பெற்றுக்கொள்ள முடியும். உண்மையாக இந்த மனிதர்கள் வேலை செய்வதற்கு விருப்பமாகவே உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். உற்சாகப்படுத்த வேண்டும். அடுத்ததாக வழிகாட்டல் வழங்க வேண்டும். அவ்வாறில்லாமல் சும்மா இருக்கவிட்டால் யாரும் வேலை செய்ய மாட்டார்கள். இதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி செய்யவேண்டியதை கூறி வழிகாட்டல் வழங்குவது மிக முக்கியம். அதன் மூலம் பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க முடியும்.

நான் பாதுகாப்பு செயலாளராக மட்டுமன்றி நகர அபிவிருத்தியிலும் செய்த முக்கிய விடயம் உற்சாகப்படுத்துவதே ஆகும். அது மிக முக்கியம். ஏனென்றால் இதன்மூலமே தொழிநுட்ப அறிவுடையவர்களையும் இல்லாதவர்களையும் இரு தரப்பினரையும் உற்சாகப்படுத்தி செயற்பட முடியும். அதனால் உங்களுக்கு பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. இறுதியில் நாம் என்ன செய்தாலும் பிரதிபலன் தேவை. யுத்த காலத்தில் எதைச் செய்தாலும் பயனில்லை யுத்தம் நிறைவுபெறாவிட்டால். எமக்கு வெற்றி பெற முடியும். அனைத்தையும் செய்ய முடியும். இறுதி பிரதிபலனை பெற்றுக்கொண்டால் நாம் செய்த அனைத்துக்கும் பயன் கிடைக்கும். அனைத்து அமைச்சுக்களில் இருந்தும் நாம் குறிப்பிட்ட இலக்குகளை எதிர்பார்க்கிறோம். அந்த இலக்கை அடைந்துகொள்வதற்காக நாம் திட்டங்களை தயாரிக்கிறோம். திட்டம் தீட்டி பயன் இல்லை திட்டத்தை செயற்படுத்தாவிட்டால். செயலாளராக கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வதும் திட்டம் தீட்டுவதும் எனக்கு தேவையில்லை திட்டம் களத்தில் இருக்க வேண்டும். களத்தில் காணாவிட்டால் திட்டத்தினால் பயனில்லை. திட்டம் மனதில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தாளில் இருந்து, ஆவணங்களில் இருந்து மட்டும் பயனில்லை. நாம் அதனை பார்ப்பதே அவசியம். 

எமக்கு மிகவும் இலகுவான விடயங்களில் இருந்து பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கொழும்பு நகரத்தில் சுவரொட்டிகள், மற்றும் பதாதைகளை நீக்கியது எவ்வளவு நல்ல தாக்கத்தினை ஏற்படுத்தியது? இலகுவான விடயம். ஆனால் அது சிறிய செயற்பாடு, பிரதிபலன் மிக கூடியது. இவை மிக இலகுவான விடயம் மனிதர்களின் பிரச்சினைகள் மிகவும் சிறியவை. அந்த சிறிய பிரச்சினையை சிறியதாக நாம் பார்க்க வேண்டும். இன்று பல்வேறு விடயங்களால் அனைத்து பிரச்சினைகளையும் சிக்கலானதாக ஆக்கியுள்ளோம்.    

இந்த பிரச்சினைகள் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது இருந்த பிரச்சினைகளில் நூற்றுக்கு இருபத்தைந்தாவது பாரிய பிரச்சினைகள் என நான் நினைக்கவில்லை. அன்று பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்தது. யுத்தம் இருந்தது. வெளியே இறங்க முடியாத நிலைமை இருந்தது. குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. இந்த அனைத்து பிரச்சினைகளையும் எமக்கு மூன்று வருடங்களில் தீர்க்க முடியுமானது நாம் ஒரு நோக்கத்துடன் செயற்பட்ட காரணத்தினாலாகும். குறுகிய காலத்தில் செயற்பட்ட காரணத்தினால் எமக்கு அந்த பிரச்சினைகளை தீர்க்கக்கூடியதாக இருந்தது. 

தொல்பொருள் துறையில் பாரிய பணிகளை செய்ய முடியும். இது மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டதாகும். எமது மரபுரிமைகள் லாகுகல வடக்கு, கிழக்கு பகுதிகளில் பெருமளவு தொல்பொருள்கள் அழிவடைந்துள்ளன. இவற்றுக்கு விரைவாக தீர்வுகளை தேட முடியும். அவற்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக அச்சமின்றி சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். சரியான தீர்மானத்தை மேற்கொள்ள பயப்பட வேண்டாம். 

சரியானதைச் செய்தால் எந்த சட்டம் இருந்தாலும் நேர்மையாகவும் சரியாகவும் தீர்மானத்தை மேற்கொள்ள பயப்பட வேண்டாம். அது ஒருபோதும் பிழைத்துப் போகாது.

நான் செயலாளர் என்ற வகையில் நாட்டுக்காக சரியான தீர்மானத்தை மேற்கொண்டேன். அதன் பின்னர் நீதிமன்றம் சென்றேன். அப்படி இருந்தும் இறுதியில் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டேன். சரியான தீர்மானத்தை எடுப்பது ஒருபோதும் பிழையாகாது. அது இயற்கையாகவே அமைந்துள்ள ஒன்று என நான் நினைக்கின்றேன். பிழையான தீர்மானங்கள் பிழையாகவே முடியும். தமது உள்ளத்திற்கு நேர்மையாக கடமையை சரியாக செய்வதற்கு அச்சமின்றி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் சரியான தீர்மானத்தை எடுத்திருக்கிறேன். எனது கடமையை சரிவர நிறைவேற்றி இருக்கிறேன் என்று நாம் மகிழ்ச்சியடைய முடியும். பயமின்றி தீர்மானங்களை மேற்கொள்ளுங்கள். அதற்கு நான் எனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன். 

உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். நாம் மக்கள் எதிர்பார்க்கின்ற சேவையை வழங்குவோம்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 26.08.2020

3 comments:

  1. சனாதிபதி அவர்களின் திட்டம் மிகவும் பிரமாதம். அதனைச் செயல்படுத்த அரச உத்தியோகஸ்தர்களும் ஏனையோரும் ஒத்துழைப்பு வழங்கி அரசின் இலக்ைக அடைய உதவுவார்களா என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. இயற்கைக்கு ஒரு குணம் உண்டு நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.