Header Ads



மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால், தேர்தலில் போட்டியிட தடையில்லை - ரத்னஜீவன் ஹூல்


(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் முன்னாள் பிரதியமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான பிரேமலால் ஜயசேகரவினுடைய பெயர் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட மாட்டாது. எனவே தற்போது அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை இல்லை என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தெரிவித்தார்.

இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ள 6 பிரதான விடயங்களில் வேட்பாளரொருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்ன என்பது உள்ளடக்கப்படவில்லை. எனவே பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்று அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதற்கான தீர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே இதற்கான தீர்வு கிடைக்கும் என்றும் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பிரசார கூட்டமொன்றில் துப்பாக்கிச் சூட்டினை நடத்தி ஒருவரை கொலை செய்ததோடு மேலும் இருவருக்கு காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் இவர் போட்டியிடவுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர தேர்தலில் போட்டியிட முடியுமா என்று வினவிய போதே பேராசிரியர் ஹூல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,

இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொண்டிருக்க வேண்டிய தகுதிகள் குறித்து சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படும்பட்சத்தில் அதற்கான தீர்வு உள்ளடக்கப்படவில்லை.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க தேர்தலில் போட்டியிட்ட போது இரட்டை பிரஜாவுரிமையுடையவர் என்பதற்காக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இரு வருடங்களின் பின்னர் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என்ற தீர்ப்பினால் அவர் பதவி விலகினார். வழக்கு தொடர்ந்து இரண்டு வருடங்களின் பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டது. எனவே அது வரையில் அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். உண்மையில் இது சட்டத்தில் காணப்படும் ஒரு குறையாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில் பிரேமலால் ஜயசேகர தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவராகக் கருதப்படுவார் என்று எவரேனும் அவருக்கு எதிராக வழக்கு தொடரும் பட்சத்தில் வழக்கின் தீர்ப்பிற்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன்னர் அவரது பெயரை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லை. அதனால் இம்முறை தேர்தலில் போட்டியிட அவருக்கு தடை இல்லை என்றார். 

No comments

Powered by Blogger.