August 14, 2020

பாகிஸ்தானின் 74 வது சுதந்திர தினம் இலங்கையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது


பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் சமூகம் 74 ஆவது சுதந்திர தினத்தை  2020 ஆகஸ்ட் 14 ஆம் திகதி  கொழும்பில் உள்ள உயர் ஸ்தானிகராலய வளாகத்தில் கொண்டாடியது.  இம்முறை, பாகிஸ்தானை ஒரு வலுவான, ஆற்றல்மிக்க, முற்போக்கான, சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு நடைப்பெற்றது.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பதில் உயர் ஸ்தானிகர் திரு. தன்வீர் அஹமத்  பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றி இவ்விழாவை ஆரம்பித்து வைத்தார்.

அதன் பின்னர் ,வணிகச் செயலாளர் திருமதி அஸ்மா கமால், பாகிஸ்தான் ஜனாதிபதி கெளரவ டாக்டர் ஆரிஃப் அலவியின் சுதந்திர தின செய்தியைப் வாசித்தார். அதில் “கடந்த காலத்தைப் போலில்லாமல், இம்முறை சுதந்திர தினம்  மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில்  கொண்டாடப்படுகிறது, ஏனெனில் முழு உலகமும் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது, இது  பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சாமர்த்திய முறையில் இத்தொற்று நோயை  நாம் அணுகியதால்  எங்கள் தேசம் இந்நோய்க்கு எதிராக வென்றுள்ளது ”என்பதை மேற்கோள்காட்டி குறிப்பிட்டார்.

பின்னர், பாகிஸ்தான் பிரதமரின் செய்தி , இரண்டாம் செயலாளர் (அரசியல்) திருமதி ஆயிஷா அபுபக்கர் பஹத் அவர்களால் வாசிக்கப்பட்டது.அதில் “இந்த சுதந்திர தினத்தை நாங்கள் கொண்டாடும் போது, கடந்த ஒரு வருடத்திலிருந்து இராணுவ முற்றுகையை எதிர்கொண்டுள்ள இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள எங்கள் சகோதரர்கள் அனுபவித்து வரும் துன்பங்களால் எங்கள் இதயங்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளன.எங்கள் காஷ்மீர் சகோதரர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.முடியுமான அனைத்து  மன்றங்களிலும்,  உதவியற்ற காஷ்மீரிகளின் குரலை நாங்கள் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருப்போம் . இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடுமையான மனித உரிமை மீறல்கள் ,பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் பற்றி சர்வதேச சமூகத்திக்கு நாங்கள் தொடர்ந்து உணர்த்திக்கொண்டே இருப்போம் ” என்று குறிப்பிட்டார்.

பதில் உயர் ஸ்தானிகர் திரு. தன்வீர் அஹ்மத் உரையாற்றுகையில், தீர்க்கமுடியாத சவால்களை எதிர்கொண்டு  ,பாக்கிஸ்தானின் கனவை அடைவதற்கு ஈடு இணையற்ற தியாகங்களை செய்த நாட்டின் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு  பாகிஸ்தானின் முன்னோர்களின் கனவுகளை நனவாக்குவதில் பணியாற்றுவது  அனைத்து பாகிஸ்தானியர்களின் பொறுப்பாகும் என்றும்  வலியுறுத்தினார்.இந்த நோக்கத்தை அடைய, சமூகத்தின் அனைத்து மட்டத்திலும்  நல்ல உறவு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் பேணப்பட  வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை-பாகிஸ்தான் உறவு பற்றி அவர் குறிப்பிடுகையில், பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட இலங்கையுடனான  உறவுக்கு பாகிஸ்தான் பெரும் மதிப்பு அளிக்கிறது என்றும்  குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் எப்போதுமே இலங்கைக்கு தொடர்ந்து  ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பாக இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகிவற்றில் தொடர்ந்து  ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் மற்றும் குடும்பங்கள், உள்ளூர் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாகிஸ்தானின் நலன்விரும்பிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0 கருத்துரைகள்:

Post a comment