Header Ads



இறையில்லத்தில் 51 பேரை கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை - நியூசிலாந்தின் அதிகபட்ச தண்டனை இது


நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் (Christchurch) நகரில் 2 பள்ளிவாசல்களில் தொழுகையில் இருந்த 51 பேரை கொன்று குவித்த பிரென்டன் டாரண்டுக்கு (Brenton Tarrant) பிணை இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 


அவுஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயது பிரென்டன் டாரண்ட், வெள்ளை நிறவெறி காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், நியுசிலாந்தின் அல்நூர் மற்றும் லின்வுட் பள்ளிவாசல்களில் புகுந்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தவர்களை, கண்மூடித்தனமாக எந்திரத் துப்பாக்கிகளால் கொன்று குவித்தான். 


இதை முகப்புத்தகத்தில் நேரலையாகவும் அவன் ஒளிபரப்பினான். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், தண்டனை குறித்த விசாரணை 4 நாட்கள் நடைபெற்றது. தாக்குதலில் உயிர் தப்பிய 90 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தாக்குதலின் பயங்கரத்தையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் விவரித்தனர். 


இந்நிலையில், பிரென்டன் டாரண்டுக்கு, நீதிபதி கேமரன் மாண்டர் (Cameron Mander) பிணை இல்லாத ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். 


தந்தையின் கால்களைப் பிடித்துக் கொண்டு நடுநடுங்கி நின்ற 3 வயது குழந்தையையும் கொலை செய்த டாரன்ட், மனிதத்தன்மையற்றவன் என தீர்ப்பின்போது நீதிபதி குறிப்பிட்டார். 


நியூசிலாந்து நாட்டின் அதிகபட்ச தண்டனை முதல்முறையாக இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.