Header Ads



அங்கொட லொக்காவுக்கு 50 கோடி வரையில் சொத்துக்கள், அரச உடமையாக்க விசாரணை

( எம்.எப்.எம்.பஸீர்)

 இந்தியாவில் இறந்துவிட்டதாக நம்பப்படும் , பிரபல பாதாள உலக குழு தலைவன்  அங்கொட லொக்காவின் குழுவினருக்கு சொந்தமாக மேல் மாகாணத்துக்குள் மட்டும் 928 பேர்ச்சஸ் காணிகள் இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பலாத்காரமாகவும், போலி உறுதிகள் ஊடாகவும் அக்குழு இந்த காணிகளைக் கைப்பற்றியுள்ளதாக  நம்பப்படும் நிலையில்,  அது தொடர்பில் மேல் மாகாணத்தின் தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவூடாக விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

' இதுவரையில் அங்கொட லொக்கா தொடர்பிலான விசாரணைகளில் , அவரது குழு சட்ட விரோதமாக கைப்பற்றிக்கொண்டுள்ள 928 பேர்ச்சஸ்  காணிகள் தொடர்பில்  விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அவர் களனி முல்லை மற்றும் அம்பத்தலே பகுதிகளில் சட்ட விரோத மணல் அகழ்வுகளையும் முன்னெடுத்துள்ளார். அவரது குழு ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள  அந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட 4 ட்ரக் வண்டிகள், மணலை கரைக்கு கொண்டுவர பயன்படுத்தப்பட்டுள்ள வள்ளங்களும் மீட்கப்பட்டுள்ளன.

 அங்கொட லொக்கா சட்ட விரோத செயற்பாடுகள் ஊடாக சுமார் 50 இலட்சம் ரூபா வரை பணம், சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அது தொடர்பில் கருப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ' என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

 இதேவேளை, அங்கொட லொக்காவின் குழுவினரால் எவரது காணியேனும் பலாத்காரமாகவோ அல்லது போலி உறுதிகள் ஊடாகவோ கைப்பற்றப்பட்டிருக்குமானால் அவர்கள் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர்  லலித் அபேசேகரவிடம் 071 8592279 எனும் இலக்கத்துக்கு அழைத்து முறையிட முடியும் எனவும்  பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

No comments

Powered by Blogger.