Header Ads



என் சகோதரர்கள் மூவரை JVP படுகொலை செய்தது, முஸ்லிம்களை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை


-க. சரவணன்

“எனக்கு மூன்றரை வயதிருக்கும் போது, என் தந்தையை, என்னுடைய கண்முன்னே வெட்டிக் கொன்றனர். எனது சகோதரர்கள் மூவரையும், ஜே.வி.பியினர் படுகொலை செய்தனர். வன்முறைகள், யுத்தத்தின் போது ஏற்பட்ட துன்பகரமான நினைவுகளைத் தவிர வேறொன்றும் இல்லை” எனத் தனது ஞாபகங்களைப் பகிர்ந்துகொண்டார், மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரதன தேரர். ‘தமிழ்மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.   

 “அப்பாவி மக்களுக்கு, இன்னல்கள் ஏற்படும் வேளையில், அவர்களுக்காக முன்னிற்பதற்கு, இரண்டுமுறை சிந்திக்கமாட்டேன். யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, எவ்விதமான விமோசனங்களும் கிடைக்கவில்லை. தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தும்    ​போது, பௌத்தர்களுக்கு உரிய இடங்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்படுவதாகப் போலியான பிரசாரங்களை அரசியல்வாதிகள் முன்னெடுக்கின்றனர். சகல மதங்களுக்கும்​ உரித்தான தொல்லியல் இடங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்” எனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில், ‘கெட பெரே’ சின்னத்தின் கீழ், சுயேச்சைக்குழு-22 இல் போட்டியிடும் அம்பிட்டிய சுமணரதன தேரர் நேர்காணலின்போது கூறியிருந்தார். அவருடனான செவ்வியின் விவரம் வருமாறு:    

கே: தேரர்களிலேயே, கடும்போக்குடைய தேரர் என்றே, உங்களைப் பலரும் அடையாளப்படுத்துகின்றனர். ஏன்?   

 மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர்களைப் போலவே, இலங்கை முழுவதும் சர்ச்சைக்குரிய தேரராகவே என்னை அறிந்து வைத்துள்ளனர்; அறிமுகப்படுத்தியும் வருகின்றனர். ஆனால், புத்திசாலியான தேரர் என, அதிகமானோர் விளங்கியும் கொண்டுள்ளனர். நான், அவ்வாறு நடந்து கொள்வது ஏன்? சமூகத்தில் ஏற்படும் அசாதாரணங்களுக்கு எதிராகவும் நீதி, நியாயத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகவுமே அவ்வாறு நடந்து கொள்கின்றேன். எனக்கு, மூன்றரை வயதிருக்கும் போது, என்னுடைய தந்தையை, என் கண்முன்னே வெட்டிக் கொன்றார்கள். எனது சகோதரர்கள் மூவரும், அவ்வாறே படுகொலை செய்யப்பட்டார்கள். எனது, கடந்த கால அனுபவங்கள் கசப்பானவை. ஆகையால், சமூகத்தில் அப்பாவி மக்கள், அசாதாரணங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னல்களுக்கு உட்படுத்தப்படும் போது,  முன்னிற்பேன். அவ்வாறான எந்தச் சந்தர்ப்பத்திலும், நான் இருமுறை சிந்திப்பதில்லை.    

கே: அரசியலுக்குப் பிரவேசித்ததன் காரணம்?  

யுத்தம் என்பது, அழிவுகளை மட்டுமே வழங்கும். தமிழ் மக்களுக்கான தாயகத்தைப் பெற்றுத்தருவதாகக் கூறிய புலிகள் அமைப்பு, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்தனர். பலியானவர்களின் உறவினர்களிடம் மிஞ்சியிருப்பது, துன்பகரமான ஞாபகங்களே தவிர, ​வேறெதுவும் இல்லை. இவ்வாறான யுத்தத்தைக் காட்டிக்கொடுக்க முயற்சித்தவர்கள், தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறிக்கொண்டு, தங்களுக்குத் தேவையானவற்றை மட்டுமே பெற்றுக்கொண்டனர். தமிழ் மக்களுக்குச் செய்த சேவைகள் எவையுமில்லை; தமிழர்கள் நடுவீதியில் விடப்பட்டார்கள்.   

தாயகத்துக்காக, தமிழ் மக்கள் யுத்தம் செய்தனர். யுத்தம் முடிவுற்றதன் பின்னரும் கூட, மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டுக்குள்ளேதான், தமிழ் மக்களில் பலர், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மட்டக்களப்பு நகரத்துக்குள், அபிவிருந்தி அடைந்த நகரமொன்று கட்டியெழுப்பப்படாமையே அதற்குப் பிரதான காரணமாகும்.  தமிழர்கள், இவ்வாறான நிலைமையில்தான் இன்னுமிருக்கின்றனர் என்பதை காட்டிக் கொள்வதைத்தான், அரசியல்வாதிகள் மிகவும் விருப்புவார்கள். ஏழை மக்களைக் காண்பித்து, ஏதாவது பெரியதைப் பெற்றுக்கொண்டு, சிறிதாக எதையாவது கொடுத்துவிட்டு, மிகுதியைத் தாங்களே வைத்துகொள்ளமுடியும். அபிவிருத்தி அடைந்த சமூகத்தில் இருந்தால், அம்மக்களை விற்றுப்பிழைக்க முடியாது. மக்களைக் காண்பித்து, இலஞ்சமாக எதையும் வாங்கிக்கொள்ளவும் முடியாது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், இன்றுவரையிலும் அதிலிருந்து மீளமுடியாமல் உள்ளனர். வாழ்வாதாரமின்றிப் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், அவர்கள் வாழ்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு, எந்த​வோர் அரசியல்வாதியாலும் நன்மைகள் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே, அவர்களுக்குச் சேவை செய்வதற்காகவே, அரசியலில் பிரவேசித்துள்ளேன்.    

கே: நீங்கள் இனங்கண்ட பிரச்சினைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான உங்களுடைய யோசனைகளும் எவை?  

மட்டக்களப்பு மக்களுக்கு, பல்வேறான பிரச்சினைகள் இன்னுமிருக்கின்றன. பாரிய குடிநீர்ப் பிரச்சினையை உதாரணமாகக் குறிப்பிடலாம். குறிப்பிட்ட பகுதியினர் மட்டுமே, உன்னிச்சையின் நீரை அருந்துகின்றனர். ஆனால், உன்னிச்சைப் பகுதி அப்பாவி மக்கள், சுத்தமான குடிநீர் இன்றி வாடுகின்றனர். அவ்வாறே, குடிநீர் இன்றி, ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்டத்தில் தத்தளிக்கின்றனர். காணிப் பிரச்சினை எவ்வாறு உருவாகியுள்ளது? தமக்கென ஒர் இடமின்றி, வீடுகளின்றி அதிகளவானோர் வாழுகின்றனர். அவர்களுக்கான, இந்த அடிப்படை உரிமையை வழங்குவதன் மூலம், வாழ்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அவ்வாறு செய்யும் போது, மக்களிடையே புதிய மலர்ச்சி ஏற்பட்டு, பலம் பொருந்தியதும் சிறப்பானதுமான அபிவிருத்திப் பாதையில் அனைவரையும் பயணிக்க வைக்கக் கூடியதாக அமையும். ஒருநாளுக்கு, ஒரு கிராமமெனத் தனிப்பட்ட முறையில் அவதானத்தைச் செலுத்தும் போது, அக்கிராமத்தில் உள்ள பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடியதாக இருக்கும். இது தொடர்பாக, அலசி ஆராய்ந்த பின்னர்தான் இம்முறை தேர்தலில் போட்டியிட  முன்வந்தேன். 

மட்டக்களப்பில் போட்டியிடுகின்ற 303 வேட்பாளர்களில் ஐந்து வேட்பாளர்கள் மாத்திரமே நாடாளுமன்றம் செல்வர். ஒருசிலர், இனவாதத்தைப் பரப்பி, தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். பிரபாகரனின் புகைப்படத்தைப் பின்பக்கத்தில் காட்சிப்படுத்திக் கொண்டு, பிரசாரம் செய்கின்றார்கள். இவ்வாறானவர்கள், நாடாளுமன்றத்துக்குச் சென்று, மக்களுக்கான சேவையைச் செய்வதற்கு, தற்போதுள்ள அரசாங்கத்துடன் முடியாது. இவர்கள், நாடாளுமன்றத்துக்குச் செல்வதன் மூலம், மக்கள் அதற்கான பிரதிபலனைப் பெற்றுக் கொள்ளமுடியாது. சுத்தமான அரசியல் பயணத்தினூடாக மட்டுமே, தற்போதுள்ள அரசாங்கத்துடன் சவால் விடுத்து, தேவையான விடயங்களை மட்டக்களப்பு மக்களுக்காகப் பெற்றுக் கொள்ள முடியும். நாடாளுமன்றத்தில் மட்டுமன்றி, அமைச்சரவையிலும் சிங்களவர்களே கூடுதலாக இருக்கின்றனர். சிங்களவர்கள் அனைவரும் காவியுடையை மதிப்பவர்கள். மட்டக்களப்பில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளால், நாடாளுமன்றத்துக்கு நான், தெரிவு செய்யப்படுபவனாக இருந்தால், அதற்கான மதிப்பு இன்னும் கூடும். ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் தேரர்களை மதிப்பர்.   தேரர்களின் போதனைகளையும் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்பவர்களிட் இருந்து மட்டக்களப்புக்குத் தேவையானவற்றை என்னால் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறானவற்றை, என்னைவிடவும் இலகுவில் பெற்றுக்கொடுக்கக் கூடியவர்கள், மட்டக்களப்பிலிருந்து எவரும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை, மிகவும் பொறுப்புடன் இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.   

கே :தொல்பொருள் செயலணி, தமிழர்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அச்செயலணியின் பரிந்துரைகளுக்கு அமைய, விகாரை அமைக்கப்படுமா?  

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் தொல்பொருள் விடயங்கள் தொடர்பாக, இவ்வேளையில் வேட்பாளர்கள் பேசுகிறார்கள். பௌத்த வரலாற்றுக்குரிய இலங்கைக்குள்  ஒவ்வோர் அடியையும் தொல்பொருள் தொடர்பான பெறுமதியாகத் தேடிப்பார்க்க முடியும்.   

முக்கியமான விடயம் என்னவெனில். இது பௌத்த மதத்துக்கு உரித்துடையது என்பதல்ல; இதன் பெறுமதி, அனைத்து மதங்களுக்கும் இருக்கின்றது. எந்தச் சமயத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதைப் பாதுகாப்பது, இலங்கை மக்களாகிய எமது கடமையாகும்.தொல்பொருள் இடங்களைத் தேடி, விகாரைகளை அமைக்கப் போகின்றார்கள் என்ற எண்ணக் கருவை, மக்கள் மத்தியில் விதைப்பதற்குச் சில அரசியல்வாதிகள் முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். இது முழுமையான பொய்யாகும். அவ்வாறு விகாரைகள் கட்டும் தேவைகள் இல்லை. பௌத்த மக்கள் வாழாத பிரதேசங்களில், விகாரைகளை அமைக்கப் போகின்றார்கள் என்பது, நகைப்புக்குரிய விடயமாகும்.அவ்வாறு, விகாரைகள் அமைக்கப்பட்டாலும் அதை நடத்துவதற்குரிய தேரர்கள், இப்பிரதேசத்தில் இல்லை. தொல்பொருள் இடங்களில், மக்கள் வாழ்கின்றார்கள். செய்ய வேண்டியது என்னவெனில், அம்மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கி, அவர்களை விலக்கி, தொல்பொருள் இடங்களை எதிர்காலச் சந்ததியினர்களுக்காகப் பாதுகாக்க வேண்டும்.   

இவ்வாறு நான் கூறினால், மட்டக்களப்பில் 3,000 தொல்பொருள் இடங்கள் இருப்பதாகவும் அவர்களது இடங்களைப் பிடிக்கப் போகின்றார்கள் எனவும் இனவாதத்தை பரப்புகின்ற அரசியல்வாதிகள் கூறுவார்கள். இது அரசியலுக்காக, அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஓர் அரசியல்வாதியும் சேர்ந்து நடத்தும் நாடகமாகும்.  

கே: இந்தத் தேர்தலில் உங்களுடைய வெற்றி?   

சுதந்திரத்துக்குப் பின்னர், அரசியலில் இருந்த அனைவரும், தமிழ் மக்கள் மீது ‘புலிகள்’ லேபல் ஒட்டுவதற்கு, உறுதுணையாய் நின்றனர். அதேபோல, சஹ்ரான் தலைமையிலான குழுக்கள் உருவாகுவதற்கும், சஹ்ரான் பெயரை உச்சரிப்பதற்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளே துணைநின்றனர். உயித்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர், நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்குக் குறிப்பிட்ட சில முஸ்லிம் அரசியல்வாதிகள், நேரடியாகப் பதில் கூறவேண்டியர்களாவர். முஸ்லிம்களுக்கும் ஏனைய இனங்களுக்கும் இடையில் இது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தும். பல நாயன்மார் மூலம், வழிகளைக் காட்டியிருப்பது, வாழ்கையை நன்றாக வாழ்வதற்காகவே ஆகும். ஆனால், அவ்வாறான நாயன்மார்கள், சீடர்களின் மூலமாக, அவற்றை விளங்கிக் கொள்ளுகின்ற விதம்தான் பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றது.   

எனது வெற்றி, இந்த மாவட்டத்தில் ​மாபெரும் வெற்றியாக அமையும். ஆகவே, சகல மக்களையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.    

No comments

Powered by Blogger.