Header Ads



IS பயங்கரவாதிகளிடமிருந்து பயிற்சிபெற்று நாடு, திரும்பியவனை விசாரிப்பதை தடுத்தார்கள் : நாலக சில்வா சாட்சியம்

( எம்.எப்.எம்.பஸீர்)

' ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கர்வாத  அமைப்பில் பயிற்சி பெற்றுவிட்டு நாடு திரும்பியதாக நம்பப்பட்ட நிலாப்தீன் ரிம்சான் என்பவரை விமான நிலையத்தில் வைத்து, ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்று, மேலதிக விசாரணைகளுக்கு தயாரான போது, தேசிய உளவுச் சேவை ( எஸ். ஐ.எஸ்.) பிரதிப் பணிப்பாளர் சரத் குமார, அவ்வாறு விசாரிப்பதை நிறுத்துமாறு கோரியதாகவும், பொலிஸ் மா அதிபர் ஊடாக அதற்கான எழுத்து மூல உத்தரவும் தமக்கு அனுப்பபட்டதாகவும்,ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின்  முன்னாள் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் நேற்று அவர் மீளவும் சாட்சியமளிக்கும் போதே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில், அவசர நிலைமை ஒன்றின் போது அதனை கையாள எந்த திட்டங்களும் இருக்கவில்லை எனவும், தேசிய உளவுச் சேவைக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கும் இடையே சுமுக உறவுகள் இருக்கவில்லை எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தனது சாட்சியத்தில் சுட்டிக்காட்டினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில்  இடம்பெற்றது.

ஆணைக்குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தப்பத்து லியனகே பந்துல குமார அத்தப்பத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப்பதிவுகள் இடம்பெற்றன.

இதன்போது அரச சிரேஷ்ட சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்கவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு சாட்சியமளித்த நாலக சில்வாவின் சாட்சியத்தின் சுருக்கம் வருமாறு:

' கடந்த 2015 ஆம் ஆண்டு  பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக அப்போதைய பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் என்னை நியமித்தார். 

அவ்வாறு நான் நியமிக்கப்பட்ட பின்னர்,  அவசரகால சூழ்நிலையில் செயல்படுவதற்கான  திட்டம் மற்றும் கொள்கையைப் பற்றி புலனாய்வு ஆய்வுக்கூட்டங்களில் எப்போதும்  கேள்வி எழுப்பி வந்தேன்.

"2015 க்குப் பிறகு  இந்த உளவுத்துறை மறு ஆய்வுக் கூட்டங்களின் போது, பாதுகாப்புச் செயலாளரும் பிற அதிகாரிகளும் ஒரு அவசர நிலைமையின் போது செயற்படும் உடன் பதிலடி  திட்டத்தைப் பற்றி மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.

நான் மீண்டும் நாட்டில் ஒரு போரைத் தொடங்கப் போகிறேன் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருந்தது.

அதனால்  பாதுகாப்பு செயலருக்கும் எனக்குமிடையே சில கசப்பான அனுபவங்கள் இருந்தன. இந் நிலையில் நான் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் பின்னர் உளவுத்துறை மறு ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை.

துருக்கி பயங்கரவாதக் குழுவான பெட்டோ  தொடர்பாக விசாரணை செய்யாமை தொடர்பில்  2017 செப்டம்பர் 24 அன்று இடம்பெற்ற உளவுத் துறை மறு ஆய்வுக் கூட்டத்தில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன  என்னை விமர்சித்தார்.

அத்தகைய பயங்கரவாத அமைப்பு தொடர்பில்  தேசிய உளவுச் சேவை  (எஸ்.ஐ.எஸ்) மூலம் தனக்கு ஒருபோதும் தகவல் கிடைக்கவில்லை. அபப்டி இருக்கையில் எவ்வாறு விசாரணை நடத்த முடியும்.

இந்த சம்பவம் குறித்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். குறிப்பிட்ட மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகும் கூட,பெட்டோ அமைப்பு தொடர்பான உளவுத் தகவல்களை தேசிய உளவுச் சேவை பணிப்பாளர்  நிலந்த ஜயவர்தன எனக்கு ஒருபோதும் தெரிவிக்கவில்லை. அதுதான் நான் கலந்துகொண்ட கடைசி உளவுத்துறை மறுஆய்வுக் கூட்டம்.

கடந்த 2018 ஆம் ஆண்டு, ஐ.எஸ். ஐ.எஸ். இல் பயிற்சி பெற்றதாக கருதப்படும் நிலாப்தீன் ரிம்சான் என்பரை ரி.ஐ.டி. விமான நிலையத்தில் வைத்து அவர் நாடு திரும்பிய போது பொறுப்பேற்று மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது தேசிய உளவுச் சேவை பிரதிப் பணிப்பாளர்  சம்பத் குமாரா, என்னை தொடர்புகொண்டு, இந்த விடயம் தொடர்பில் தேசிய உளவுச் சேவை தனியான விசாரணை  ஒன்றினை நடத்தி வருவதால் விசாரணையை தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

ரிம்சானை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று குமாரா என்னிடம் கேட்டார். ரிம்சான் அவர் ஏன் நாடு திரும்பினார் என்பதை அறிய விசாரணை செய்ய வேண்டும் எனவும் அதனால்  நாங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று நான் சொன்னேன். அது ஐ.எஸ். ஐ.எஸ். தனது போராளிகளை இழந்துகொண்டிருந்த நேரம்.  அவர்கள் அவர்களின்  வெளிநாட்டு போராளிகளை வீட்டிற்கு அனுப்பிக்கொண்டிருந்த கால கட்டம். 

 அப்போது நான் பொலிஸ் மா அதிபரிடம் பேசுமாறும், தனக்கு  எழுத்து மூலம் அது குறித்த கோரிக்கையை தருமாறும் கோரினேன். அதன் பின்னர் சம்பத் குமார எனக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினார்.

அதே நேரம், அது குறித்த விசாரணைகளை தொடர வேண்டாம் என பொலிஸ் மா அதிபரின் எழுத்து மூல உத்தரவும் அனுப்பட்டது.

உண்மையில் இக்கால கட்டத்தில் எஸ். ஐ.எஸ். பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர்  நிலந்த ஜயவர்தனாவின் அணுகுமுறை காரணமாக தேசிய உளவுச் சேவைக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கும்  இடையிலான உறவு மோசமடைந்திருந்தது.

2016 ஆம் ஆண்டில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்  பூஜித் ஜயசுந்தர்விடம்  விஷேட அதிரடிப் படை ஊடாக  சிறப்பு ஆயுதப் பயிற்சியுடன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுடன்  இணைக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழுவை உருவாக்குவது, அதற்கான பயிற்சியளிப்பது தொடர்பில் கலந்துரையாடினேன்.

 அதற்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒப்புதல் அளித்தார். ஆனால்  அதிரடிப் படையினர், அவர்களுடன் இணைக்கும் குழுவுக்கு ஆயுதப் பயிற்சி வழங்குவது பயனற்றது என மறுத்தனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக  அவசரகால சூழ்நிலையை கையாள ஒரு விரைவான எதிர்வினை குழுவை உருவாக்க விரும்பியதாலேயே, அத்தகைய கோரிக்கையை நான் முன்வைத்தேன்.

ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு  சிறப்பு கண்காணிப்பு வாகனம் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது.   2018 ஆம் ஆண்டில்  அவ்வாகனம் ஊடாக, சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைதுசெய்த நடவடிக்கைக்கு பின்னர் அவ்வாகனம் பயன்படுத்தப்படவே இல்லை.

குறிப்பிட்ட சிறப்பு கண்காணிப்பு வாகனம் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கான அம்சத்தைக் கொண்டுள்ளது," என்று அவர்  சாட்சியமளித்தார்.

1 comment:

  1. இதை படிக்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. இது வரை கைதுகளும் விசாரணைகளும் நெத்தலி மீன்கள் மீது தான் நடத்தப்பட்டிருக்கிறது. சுறாக்களும் திமிங்கிலங்களும் ஒளிந்து கொண்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.