Header Ads



ஜிந்துப்பிட்டி மீண்டும் திறக்கப்பட்டது, யாருக்கும் கொரோனா இல்லை - Dr அனில்


(எம்.மனோசித்ரா)

கொழும்பு 13 , ஜிந்துபிட்டி பிரதேசத்தில் கடந்த 2 ஆம் திகதி வியாழக்கிழமை கொரோனா தொற்றுக்குள்ளானதாகக் கூறப்பட்ட நபருக்கு தொற்று ஏற்படவில்லை என்பது பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். 

அத்தோடு குறித்த பிரதேசத்திலிருந்து தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட 154 பேருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பதையும் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

கொழும்பு - 13 , ஜிந்துபிட்டி பிரதேசத்தில் பதிவான கொவிட் தொற்று நோயாளர் என அடையாளங் காணப்பட்ட நபர் கரையோர பாதுகாப்பு வீரர் ஒருவராவார். அத்தோடு அவர் வெளிநாட்டிலிருந்து வந்ததனால் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் அவர் தொடர்பில் சுகாதாரப் பிரிவு தொடர்ச்சியாக கவனம் செலுத்தியது.

இதற்கமைவாக வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு அதன் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் அடிப்படையில் அவர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது இனங்காணப்பட்டால் அதன் போது உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சுகாதாரப்பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.

அதற்கமைய பி.சி.ஆர். பரிசோதனையின் பெறுபேறாக உடனடியாக குறித்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளானவராக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இதே போன்று அவருடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட 154 பேர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இருப்பினும் தொற்று நோயாளராகக் கருதப்பட்ட நபர் தொடர்பில் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட 5 பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் தொடர்ச்சியாக இந்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளானவர் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் மிகவும் பாதுகாப்பான நடவடிக்கைகளோடு கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்து;ச செல்லப்பட்ட 154 பேரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்கள் மத்தியில் எந்தவொரு கொவிட் நோயாளரும் அடையாளங் காணப்படவில்லை.

இதன் காரணமாக கொவிட்-19 நோயாளர் என்று முதலில் அடையாளங் காணப்பட்ட நபர் வைத்தியசாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 154 பேரையும் மீண்டும் தமது வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 2077 ஆக அதிகரித்துள்ளதோடு அவர்களில் 1917 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். 149 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

No comments

Powered by Blogger.