Header Ads



அரசாங்கம் மேலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும், ஆபத்து நிலை இன்னமும் காணப்படுகின்றது

இரண்டாவது சுற்று கொவிட் 19 ஆபத்தினை தவிர்ப்பதற்கு அரசாங்கம் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரச மருத்துவஅதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது சுற்று தொற்று குறித்து ஏற்கனவே அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவின் உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொழம்பகே தெரிவித்துள்ளார்.

அறிவிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவது குறித்து மக்கள் மத்தியில் அலட்சியம் காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 நெருக்கடி முடிவிற்கு வருகின்றது போல தோன்றினாலும்,இரண்டாவது சுற்று ஆபத்திற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக காணப்படுகின்றன,உலக சுகாதார ஸ்தாபனமும் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது என வைத்தியர் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பாதிக்கப்பட்ட ஒருவர் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதையும் அவரது குடும்பத்தை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர் நாட்டின் பல பகுதிகளில் நோய் தொற்று காணப்பட்டால் இரண்டாம் சுற்று ஆபத்து நிச்சயம் உருவாகும் என குறிப்பிட்;டு;ள்ளார்.

சுகாதார பாதுகாப்பு தரப்பினர் இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவேண்டும்,வைரஸ் மீண்டும் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்,அனைத்து பகுதிகள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 ஆபத்தான நிலை இன்னமும் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் பொதுமக்களிற்கு சுதந்திரமாக நடமாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளபோதிலும் அவர்கள் விளைவுகள் குறித்து உணர்ந்து கவனமின்மையை தவிர்க்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.